search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதியை நேரில் சந்திக்காதது ஏன்?: ராகுலுக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்
    X

    கருணாநிதியை நேரில் சந்திக்காதது ஏன்?: ராகுலுக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்

    ஜெயலலிதாவுக்காக 2 முறை வந்தபோது தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேரில் சந்திக்காதது ஏன்? என்று ராகுல் காந்திக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கடந்த அக்டோபர் 7-ந்தேதி ராகுல் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு சென்றார்.

    அப்போது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை ராகுல் சந்திக்கவில்லை.

    கடந்த வாரம் டெல்லியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தை கனிமொழி உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து பேசினர். அப்போது கருணாநிதியிடம் நலம் விசாரிக்க ராகுல் வராதது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த ராகுல்காந்தி 2-வது முறையாக சென்னை வந்தார். அவரது இறுதிசடங்கிலும் பங்கேற்றார். சுமார் 1½ மணி நேரம் அவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இருந்தார்.

    ஆனாலும் அவர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்கவில்லை. இது தி.மு.க.வினர் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், “சோனியாகாந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது கருணாநிதி உடனடியாக நலம் விசாரித்து ராகுல்காந்திக்கு கடிதம் எழுதினார். ஆனால் 2 முறை சென்னை வந்த ராகுல்காந்தி, கருணாநிதியை சந்திக்கவும் இல்லை. உடல்நலம் விசாரிக்கவும் இல்லை. இதனால் கருணாநிதி கடும் அதிருப்தியும் வேதனையும் அடைந்துள்ளார்.

    மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்சிடம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்”.

    தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டதும் ராகுல்காந்தியை சென்னை அழைத்து வந்து ஜெயலலிதாவை ஆஸ்பத்திரியில் நலம் விசாரிக்க வைத்தது தி.மு.க.வினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் ராகுல் காந்தி கருணாநிதியை சந்திக்காமல் இருப்பது தி.மு.க. - காங்கிரஸ் உறவில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது” என்றார்.

    இதையடுத்து பீட்டர் அல்போன்ஸ் நேற்று இ-மெயில் மூலம் ராகுல்காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க.வை மத்திய பா.ஜனதா தனது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. எனவே அ.தி.மு.க.வை நம்பி கூட்டணி கட்சியான தி.மு.க.வை இழந்து விடக்கூடாது. இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரான கருணாநிதியை சந்திக்காமல் நீங்கள் திரும்பியது தி.மு.க.வினரை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க விரைவில் சென்னை வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
    Next Story
    ×