search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசின் நடவடிக்கை விவசாயிகளை ஏமாற்றும் முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
    X

    மத்திய அரசின் நடவடிக்கை விவசாயிகளை ஏமாற்றும் முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    சிறுவாணியில் அணை கட்ட தற்காலிக தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கை விவசாயிகளை ஏமாற்றும் முயற்சி என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
    சென்னை:

    சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அட்டப்பாடி அணைக் கட்டுவது தொடர்பான “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு நிலையான ஆய்வு வரம்புகளை வழங்கலாம்” என்று “சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறைஅமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழு” அளித்த பரிந்துரையை தற்போதைக்கு நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் நிரந்தரமாக அனுமதி மறுக்கப்படவில்லை என்பது பெரும் கவலையாக இருக்கிறது.

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்ற இறுதி ஆணையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு முடிவுறும் வரையிலோ அல்லது தமிழக அரசின் அனுமதி பெறும் வரையிலோ இந்த வல்லுநர் குழுவின் பரிந்துரையை தற்போதைக்கு நிறுத்தி வைப்பதாக மட்டுமே மத்திய அரசு தனது கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது நெருடலாகவே இருக்கிறது.

    கேரள மாநிலம் சிறுவாணியின் குறுக்கே அணைக்கட்ட அனுமதி அறவே கிடையாது என்று கூறுவதற்கு பதில் “அனுமதி கொடுப்பது” நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதுவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

    “காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு நாட்களில் அமைக்கிறோம்” என்று முதலில் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, அந்த கெடு முடியும் தருவாயில் அதே உச்சநீதிமன்றத்தின் முன்பு வேறொரு மனுவை தாக்கல் செய்து “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்று கர்நாடக மாநிலம் தொடர்பான அரசியல் காரணங்களுக்காக கைவிரித்தது மத்திய பாஜக அரசு.

    தமிழக விவசாயிகளுக்கு விரோதமான இந்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், விவசாய கூட்டமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன.

    காவிரி குறித்து விவாதிக்க ஆளும் அ.தி.மு.க. அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முன்வராத நிலையில் திராவிட முன்னேற்றக் கழகமே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறது. ஆகவே, தமிழக நலனை மத்திய அரசு புறக்கணித்து விட்டது என்று விவசாயிகள், பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடுங்கோபத்தை தணித்து திசை திருப்பும் பொருட்டு சிறுவாணியின் குறுக்கே அணைக்கட்டும் விவகாரத்தில் “வல்லுநர் மதிப்பீட்டுக் குழு” அறிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை எடுத்திருக்கிறது மத்திய அரசு. “சிறுவாணியின் குறுக்கே அணைக்கட்டுவதற்கு அனுமதி கிடையாது” என்று ஒரு வரியில் கொடுக்க வேண்டிய உத்தரவிற்கு பதில் இப்படி சுற்றி வளைத்து “அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று மட்டும் மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழக விவசாயிகளை ஏமாற்றும் செயலாகவே நான் கருதுகிறேன்.

    “காவிரி மேலாண்மை வாரியத்தில் தமிழக விவசாயிகளை நம்ப வைத்து கைவிட்டது போல் சிறுவாணி அணை விவகாரத்திலும் கைவிடுவதற்கு” இந்த உத்தரவு ஒரு முன்னோட்டமாக இருக்குமோ என்ற சந்தேகமே எழுகிறது. ஆனால் அதிமுக தலைமையில் உள்ள தமிழக அரசோ சிறுவாணியில் ஏதோ சாதித்து விட்டது போல் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டிருப்பது வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கிறது.

    சிறுவாணி பிரச்சனை எழுந்தவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் கோவையில் மாபெரும் ஆர்பாட்டம் நடத்தி அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. 2.9.2016 அன்று தமிழக சட்டப்பேரவையில் சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரித்தது. அதே போல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன.

    இதற்கிடையில், "மதிப்பீட்டுக் குழுவின் 92வது கூட்டத்தில், தமிழக அரசின் இசைவுடன் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், 96வது கூட்டத்தில் தமிழக அரசின் பரிந்துரையைஏற்றே, கேரள அரசுக்கு அணைகட்ட அனுமதி கொடுத்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அதிகாரிகளோ அல்லது தமிழக அரசு அதிகாரிகளோ கேரள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர். அவர்களைக் கண்டுபிடித்துக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வழுக்கைப்பாறைபாலுவும், பொதுச்செயலாளர் கந்தசாமியும் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள தகவல்கள் கடுமையானவை; அலட்சியப்படுத்திடக் கூடியவை அல்ல. ஆகவே, அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய கடமையும் அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.

    “சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட” மேற்கொள்ள வேண்டிய ஆய்வு குறித்த பரிந்துரையை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதை நினைத்து தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல், அங்கே அணை கட்ட கேரள அரசுக்கு நிரந்தரமாகவே அனுமதி மறுக்கும் உத்தரவை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். “அணை கட்ட நிரந்தரமாக அனுமதி மறுப்பது ஒன்றே” சிறுவாணி ஆற்றை நம்பியிருக்கும் தமிழக விவசாயிகளுக்கும் குறிப்பாக கொங்கு மண்டல விவசாயிகளுக்கும், கோவை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கும் நிரந்தர தீர்வாக அமையும் என்பதால் “சிறுவாணியின் குறுக்கே அணைக்கட்ட கேரள அரசுக்கு அனுமதி கிடையாது” என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×