search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக உயரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக உயரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

    3 தொகுதி தேர்தல் முடிந்தபிறகு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக உயரும் என்று திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    தர்மபுரி:

    தர்மபுரியில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ. வுமான தடங்கம் சுப்பிரமணி மகன் திருமணத்தை நடத்தி வைத்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    சுயமரியாதை திருமணத்தை 1967ம் ஆண்டு சட்டப்படி செல்லுபடியாவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க.தான். இது சீர்திருத்த திருமணம் மட்டும்அல்ல, சுயமரியாதை திருமணமும் கூட.

    தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதே கட்சிதான் இப்போதும் ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எந்தவிதமான செயல்பாடும் இல்லாமல் இருந்தது. 5 ஆண்டுகள் வீடியோ கான்பரன்ஸ் ஆட்சிதான் நடந்தது. அது ஆட்சியல்ல காட்சி. இப்போது அப்பல்லோ காட்சிகள் தான் நடக்கிறது. முதல்வர் பூரண குணம் அடைய வேண்டும் என்று முதன் முதலாக கலைஞர் தான் அறிக்கை வெளியிட்டார். அதேபோன்று எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றியிருந்தபோது 40 ஆண்டுகால எனது நண்பர் நலமுடன் வரவேண்டும் என்று அறிக்கைவிட்டவர் கலைஞர்.

    தொழில்துறையில் தமிழகம் 18-வது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் இருந்தது. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் கடைசி கட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி காட்டினார்கள். வழக்கமாக ஆட்சி தொடங்கியவுடன் மாநாடு நடத்தி தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது வழக்கம். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கடைசிகாலகட்டத்தில் மாநாடு நடத்தினர். இதற்காக ரூ.100 கோடி செலவிட்டதாக கூறினார்கள். 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு வந்ததாகவும் கூறினார்கள்.

    ஆனால் இதுவரை ஒரு தொழிற்சாலைகூட தொடங்கப்படவில்லை. ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-2 என்பதை 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி என்று அறிவித்து விட்டனர். தமிழ்நாட்டில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். கோடிக்கணக்கில் திட்டங்களை அறிவித்தார். ஆனால் ஒரு திட்டம்கூட நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து துரைமுருகன் சட்டசபையில் கேள்வி கேட்டார். இவ்வளவு திட்டங்களை அறிவிக்கிறீர்களே இதற்கான நிதி ஆதாரங்கள் உள்ளதா? என்று அவர் கேள்வி கேட்டார். ஆனால் இதுவரை இந்த கேள்விக்கு அ.தி.மு.க. சார்பில் பதில் அளிக்கவில்லை.

    காவிரி பிரச்சனை, விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனை, இதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அ.தி.மு.க.வை கேட்டுக்கொண்டோம். அனைத்து கட்சி கூட்டத்தை அ.தி.மு.க. கூட்டவில்லை. ஆனால் கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தையும், சட்டமன்ற கூட்டத்தையும் கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனைத்து கட்சிகளுடன் சென்று பிரதமரை சந்தித்தார்கள்.

    தி.மு.க. கூட்டியஅனைத்து கட்சி கூட்டத்தில் ஒருசில கட்சிகள் வரவில்லை. தமிழ்நாட்டில் ஒரு கோடியே 75 லட்சம் வாக்குகளை பெற்று அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க. ஒரு கோடியே 71 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. வெறும் 4 லட்சம் ஓட்டுகள் மட்டுமே ஆளுங்கட்சிக்கு அதிகமாக கிடைத்து உள்ளது. நாங்கள் முழுமையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம்.

    தமிழகத்திற்கும், தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்கும் தி.மு.க. உழைத்து வருகிறது. நீங்கள் எப்போதும் தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும். 3 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்தவுடன் தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக மாறிவிடும்.

    விழாவிற்கு கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ., கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. செயலாளருமான எ.வ. வேலு எம்.எல்.ஏ., கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    Next Story
    ×