search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்தது: 5-ந்தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல்
    X

    3 தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்தது: 5-ந்தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

    தமிழகத்தில் 3 தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முடிவடைந்தது. மனுக்கள் பரிசீலனைக்குப் பின்னர் 5-ம்தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்.
    திருச்சி:

    தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரின் பேரில் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு பின்னர் ரத்தானது.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவேல் எம்.எல்.ஏ. உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து காலியாக உள்ள இந்த 3 தொகுதிகளுக்கும் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது.

    3 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனால் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் கடந்த 28-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    அதே நாளில் திருப்பரங்குன்றம் தொகுதி தவிர மற்ற 2 தொகுதியிலும் தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் தி.மு.க. வேட்பாளர் கடந்த 31-ந்தேதி மனு தாக்கல் செய்தார்.

    அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக செந்தில்பாலாஜி, தி.மு.க. வேட்பாளராக கே.சி.பழனிச் சாமி மற்றும் சுயேட்சைகள் உள்பட 31 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 21 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

    கடைசி நாளான இன்று காலை பா.ஜ.க. வேட்பாளர் பிரபு, பா.ம.க. வேட்பாளர் பாஸ்கரன் மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர் அரவை முத்து ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சுயேட்சைகள் சிலரும் மனு தாக்கல் செய்தனர்.

    தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெங்கசாமி, தி.மு.க. சார்பில் டாக்டர் அஞ்சுகம் பூபதி, பா. ஜனதா வேட்பாளராக எம்.எஸ். ராமலிங்கம், தே.மு.தி.க. வேட்பாளராக அப்துல்லா சேட், பா.ம.க. குஞ்சிதபாதம், நாம் தமிழர் கட்சி நல்லத்துரை உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

    தஞ்சை தொகுதியில் நேற்று வரை 13 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். பா.ஜனதா, தே.மு.தி.க., பா.ம.க. வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்தனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன், தே.மு.தி.க. வேட்பாளர் தனபாண்டியன், பா.ம.க. வேட்பாளர் செல்வம் உள்ளிட்ட 22 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது.

    வேட்பு மனுக்கள் பரிசீலனை நாளை (3-ந்தேதி) நடக்கிறது. 5-ந்தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

    7-ந்தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி நடைபெறும்.

    3 தொகுதிகளிலும் உள்ள 800 வாக்குப்பதிவு மையங்களில் 4 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும் என்று 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

    கடந்த 26-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய அன்றே தொகுதிக்கு ஒரு தேர்தல் செலவின பார்வையாளர் என 3 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் வேட்பாளர்களின் செலவுகளை கண்காணித்து வருகிறார்கள்.

    இதையடுத்து ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக பொது பார்வையாளர் வர உள்ளனர். இவர்கள் நாளை தமிழகம் வந்து, பணியை தொடங்க உள்ளனர். இவர்கள் வந்து ஒரு சில நாட்களில் போலீஸ் பார்வையாளர்கள் (ஐ.பி.எஸ். அதிகாரிகள்) 3 பேர் வர உள்ளனர்.

    3 தொகுதிகளுக்கும் தலா 4 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வர உள்ளனர். தேர்தல் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக வருகின்றனர்.

    வருகிற 15-ந்தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 22-ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு அன்று பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிறது.
    Next Story
    ×