search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்திற்கு துரோகம் செய்வது கர்நாடக காங்கிரஸ் தான், பிரதமர் அல்ல: தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை
    X

    தமிழகத்திற்கு துரோகம் செய்வது கர்நாடக காங்கிரஸ் தான், பிரதமர் அல்ல: தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை

    காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்வது கர்நாடக காங்கிரஸ் தான் என்றும், பிரதமர் அல்ல என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பா.ஜனதா கட்சி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதேபோல், காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்பதிலும் பா.ஜனதா கட்சி உறுதியாக உள்ளது.

    காவிரி பங்கீட்டில் விற்பன்னர்களாக இருக்கும் நிபுணர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி சட்ட ரீதியாகவும், பங்கீட்டு கொள்கை ரீதியாகவும் எவ்வாறு நம் உரிமையை நிலை நாட்டுவது என்பதையும், எத்தகைய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் தீவிரமாக ஆலோசித்து ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. இதை எங்கள் மத்திய தலைமைக்கும், சட்ட அமைச்சகத்திற்கும், நீர்வளத்துறை அமைச்சகத்துக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் சமர்ப்பிக்க உள்ளோம்.

    பிரதமரையும், அமைச்சர்களையும் சந்திக்க உள்ளோம். இதற்காக மாநில தலைவராகிய நான் மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழு, காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி அதனை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

    கர்நாடகாவை ஆழ்வது காங்கிரஸ் என்ற வகையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துக்கொண்டிருப்பது காங்கிரஸ் என்பதை உணர்ந்து அந்த கட்சியும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு துரோகம் செய்து கொண்டிருப்பது தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசு தான். இதை உணர்ந்து கொள்ளாமல், தா.பாண்டியன் போன்றவர்கள் மிகத்தவறான பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.

    ஏதோ காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பிரதமர் தலையிட்டு தடுத்து விட்டார் என்று எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய்யான தகவலை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். சட்ட ரீதியான சிக்கலை மத்திய வழக்கறிஞர் சொல்லியிருக்கிறார் என்பதும், இதில் பிரதமருக்கு பங்கில்லை என்பதும் உண்மை.

    எங்களைப் பொறுத்தவரை காவிரி பிரச்சினைகளை அரசியல் ஆக்காமல், தண்ணீர் பெற்றுத் தருவதையும், காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்தும் செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். மத்திய அரசு தமிழகத்தின் பக்கம் இருக்கிறது என்பதை தமிழக மக்களுக்கு பலமுறை நிரூபித்திருக்கிறார்கள்.

    சமீபத்தில் கூட, தஞ்சை, வேலூர், சேலம் போன்ற நகரங்களை நவீன நகரங்களாக அறிவித்தது மட்டுமல்ல, இன்று 330 ஏக்கரில் மிகப்பெரிய மருத்துவ தொழில்நுட்ப பூங்காக்களை இந்தியாவிலேயே முதல் முறையாக அமைப்பதற்கு செங்கல்பட்டு பகுதியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, தமிழகத்தின் பொருளாதாரமும் மேம்படும்.

    ஆக, அக்கறையோடும், பொறுப்புணர்வோடும் செயல்படும் மத்திய அரசை அடியோடு கடுமையாக விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனவும், நிச்சயமாக காவிரி தண்ணீர் பெற்றுத்தருவதில் இதற்கு முந்தைய தி.மு.க பங்கேற்ற காங்கிரஸ் அரசு போல் இல்லாமலும், இப்போது இருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசு போல் இல்லாமலும், நியாயமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டியதை கிடைக்க அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×