என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்: ராமதாஸ் அறிக்கை
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆசிரியர் கல்வி படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்ற நிலை மாறி, ஆசிரியருக்கு படித்தால் வேலையே கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டிருகிறது. இதற்கு காரணம் பல ஆண்டுகளாகியும் ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளையும், தகுதித் தேர்வையும் நடத்த தமிழக அரசு மறுத்து வருவது தான்.
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டு வந்தனர். முந்தைய அதிமுக ஆட்சியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வின் மூலமும், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வின் மூலமும் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதே நடைமுறை தான் இப்போதும் தொடர்கிறது.
ஆனால், ஆசிரியர்கள் நியமனத்தின் அளவு பெருமளவில் குறைந்து விட்டதால் ஆசிரியர் பணிக்கான கல்வியியல் பட்டம் (பி.எட்) பெற்றவர்கள் பணி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்தவர்களில் 3.82 லட்சம் பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்தவர்களில் 2.69 லட்சம் பேரும் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்து விட்டு பல ஆண்டுகளாகியும் வேலையின்றி வாடுகின்றனர்.
தமிழக அரசு பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர்கள் கடந்த இரு ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. 2013-14, 2014-15ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட 1807 காலியிடங்கள் நீண்ட தாமதத்திற்கு பிறகு கடந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்பட்டன.
அதன்பின், 2015-16 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 2125 காலியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அனுமதி அளித்தது. அவற்றில் 50 விழுக்காடு, அதாவது 1063 பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்ட நிலையில், மீதமுள்ள 1062 பணியிடங்களை நேரடியாக போட்டித்தேர்வின் மூலம் நிரப்ப கடந்த 7 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பல பள்ளிகளில் 12-ஆம் வகுப்புக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, உயர் நிலைப்பள்ளிகள் மேல் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதாலும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாலும் ஏற்பட்ட தேவையை சமாளிக்கும் வகையில் 1600 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க பள்ளிக் கல்வித்துறை தீர்மானித்துள்ளது. அரசின் ஒப்புதல் பெற்று அவையும் நிரப்பப்பட வேண்டும். ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை.
தமிழகத்தில் காலியாக உள்ள 2663 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் பெரும் பாலானவை வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தான் உள்ளன. காலங்காலமாகவே இம்மாவட்டங்கள் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கியுள்ள நிலையில், ஆசிரியர்கள் பற்றாக் குறை காரணமாக இம்மாவட்டங்களின் கல்வித் தரமும், தேர்ச்சி விகிதமும் மேலும் மோசமாகும் ஆபத்துள்ளது.
அதேபோல், இளநிலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான தகுதித் தேர்வுகள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடத்தப்படவில்லை. இதனால் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதை காரணம் காட்டி இந்த தேர்வுகளை நடத்த தமிழக அரசு மறுத்து வருகிறது.
அதேபோல், அரசு பள்ளி களுக்கு 4362 ஆய்வக உதவி யாளர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை முடிவுகள் வெளியிடப்பட்டு, பணியமர்த்தம் செய்யப்படவில்லை.
இதனால் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, மாணவ, மாணவியரின் தரமான கல்வி கற்கும் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
மேல்நிலை வகுப்பினருக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் உடனடியாக போட்டித் தேர்வை நடத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையும், ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பள்ளி ஆய்வக உதவியாளர்களையும் நியமிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வையும் தமிழக அரசு நடத்த வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்