search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை காலத்துக்கு முன் உயர் அழுத்த மின்கம்பிகள் பூமிக்கு அடியில் பதிக்கப்படும்: மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்
    X

    மழை காலத்துக்கு முன் உயர் அழுத்த மின்கம்பிகள் பூமிக்கு அடியில் பதிக்கப்படும்: மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

    சென்னையில் மழை காலத்துக்கு முன் உயர் அழுத்த மின்கம்பிகள் பூமிக்கு அடியில் பதிக்கப்படும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில் வருமாறு:-

    மு.க.ஸ்டாலின்:- கொளத்தூர் தொகுதி ஜி.கே.எம். காலனியில் வீட்டின் அருகாமையில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கிறது. இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே மின் கம்பிகளை பூமிக்கடியில் பதிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?

    அமைச்சர் தங்கமணி:- உயர் அழுத்த மின் கம்பிகளை பூமிக்கடியில் புதைக்க முதல்-அமைச்சர் அம்மா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சட்டசபை கூட்டம் முடிந்ததும் சென்னையில் அனைத்து அதிகாரிகளையும் அழைத்து ஆலோசித்து மழை காலத்துக்கு முன்பே இப்பணியை செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

    கு.க.செல்வம் (தி.மு.க.):- எழும்பூர், நுங்கம்பாக்கம், தாலுகா அலுவலகத்தை பிரித்து நுங்கம்பாக்கத்துக்கு புதிய தாலுகா அலுவலகம் அமைக்கப்படுமா?

    அமைச்சர் ஆர்.பி.உதய குமார்:- புதிய வட்டம் உருவாக்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகம் உயர்மட்ட குழுவுக்கு பரிந்துரை செய்வார்கள். ஏற்கனவே தமிழ்நாட்டில் 5 ஆண்டில் மட்டும் 68 புதிய வட்டங்கள், 9 கோட்டங்களை முதல்-அமைச்சர் உருவாக்கியுள்ளார். எனவே விதிகளுக்கு உட்பட்டு இருக்குமானால் நுங்கம்பாக்கத்தில் புதிய வட்டம் உருவாக்க அரசு பரிசீலிக்கும்.

    எஸ்.ஆர்.ராஜா (தி.மு.க.):-

    தாம்பரம் கிராம நத்த பட்டாவுக்கு தி.மு.க. ஆட்சியில் தனியாக ஒரு தாலுகா அலுவலகம் அமைத்து 30 ஆயிரம் பட்டா வழங்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2 ஆயிரம் பட்டா வழங்கப்பட்டதாக அறிகிறேன். எனவே கிராம நந்த பட்டா அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் அரசு கட்டி தருமா?

    அமைச்சர் ஆர்.வி. உதய குமார்:- கடந்த 5 ஆண்டில் மட்டும் முதல்-அமைச்சர் அம்மா 12½ லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி உள்ளார்.

    தாம்பரத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் தந்தது அம்மாதான். எனவே உறுப்பினர்களின் கோரிக்கையையும் அம்மா பரிசீலினை செய்வார்.

    பி.கே.சேகர்பாபு (தி.மு.க.):- சென்னை மாநகராட்சியில் 155 வட்டங்கள் இருந்ததை 200 வட்டங்களாக விஸ்தரித்து உள்ளனர். ஆனாலும் வருவாய் சம்பந்தப்பட்ட பணிகள் இன்னும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது. 200 வட்டங்களின் பணிகளும் சென்னை மாவட்ட கலெக்டரின் அதிகாரத்துக்குள் கொண்டு வரப்படுமா?

    சென்னையில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிக்கும் 22 வட்டாட்சியர் அலுவலகம் அரசு அமைக்குமா?

    அமைச்சர் உதயகுமார்:- மாநகராட்சி எல்லைகளை பற்றி உறுப்பினர் கூறினார். வருவாய் எல்கை, உள்ளாட்சி எல்கை வேறு வேறு இருப்பதாக கூறினார். இது முதல்-அமைச்சர் அம்மாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் வட்டாட்சியர் அலுவலகம் உருவாக்க முடியுமா என்று கேட்டு உள்ளார்.

    மக்கள் தொகை பரப்பளவு, வருவாய், கிராமம் இவற்றையெல்லாம் ஆராய்ந்து அதற்கேற்ப அரசு முடிவு செய்யும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.
    Next Story
    ×