search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரலாற்று சிறப்புமிக்க சட்டசபையை கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டிடத்துக்கு மாற்றியது ஏன்?: தி.மு.க.வுக்கு ஜெயலலிதா கேள்வி
    X

    வரலாற்று சிறப்புமிக்க சட்டசபையை கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டிடத்துக்கு மாற்றியது ஏன்?: தி.மு.க.வுக்கு ஜெயலலிதா கேள்வி

    வரலாற்று சிறப்புமிக்க சட்டசபையை கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டிடத்துக்கு மாற்றியது ஏன் என்று தி.மு.க.வுக்கு ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) பேசினார்.

    பேச்சின் தொடக்கத்தில் வரலாற்று சிறப்புமிக்க இந்த சட்டமன்றம் என்று கூறி விட்டு சபாநாயகரை பற்றி விமர்சித்தார். உடனே அதை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார்.

    பின்னர் இந்த அவை நடுநிலையோடுதான் நடக்கிறது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

    அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசியதாவது:-

    உறுப்பினர், பேச்சின் தொடக்கத்திலேயே வரலாற்றுச் சிறப்புமிகுந்த இந்த சட்டமன்றப் பேரவை என்று குறிப்பிட்டார்கள். அவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பேரவை என்பதால்தான் இதையே தூக்கியெறிந்துவிட்டு, ஓமந்தூரார் எஸ்டேட்டில் கவிழ்ந்த கப்பல் போன்ற ஒரு கட்டிடத்தை எழுப்பி அங்கே கொண்டுபோய் வைத்தார்களா என்பதை உறுப்பினர் தெரிவிக்க வேண்டும்.

    தாங்கள் இந்த அவையில் நடுநாயகமாக வீற்றிருக்கின்றீர்கள் என்று பேசினார். இதற்கு முன்பு ஒருநாள் பேசிய ஓர் எதிர்க்கட்சி உறுப்பினரும் இந்த நாற்காலிக்குள்ள வரலாற்றுச் சிறப்பைப் பற்றி பேசினார். இவ்வளவு பேசுகின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கட்சித் தலைமை இந்த அவையை வேறு கட்டிடத்திற்கு மாற்றும் போது, இந்த நாற்காலியையே தூக்கி குப்பையில் போட்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. இப்போது பேரவைத் செயலாளராக இருக்கின்ற ஜமாலுதீன் தான் அதைக் காப்பாற்றி, பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார் என்பதும் உண்மை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உடனே மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சிக்கு செய்ய வேண்டிய வசதிகள், மாநகராட்சி பரப்பளவு, மாநகராட்சிக்கு கிடைத்த விருதுகள், மு.க. ஸ்டாலின் பெற்ற விருதுகளை விவரித்தார். இதற்கு அமைச்சர் எஸ். பி.வேலுமணி விரிவான பதில் அளித்தார். அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசியதாவது:-

    இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் அவர்கள் ஐந்தாண்டு காலம் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை, அவர் இந்தத் துறை பற்றிய மானியக் கோரிக்கை தமிழ்நாடு முழுவதற்குமானது என்பதை மறந்துவிட்டு, சென்னையைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்.

    நேற்றையதினம் பேசிய இன்னொரு எதிர்க்கட்சி உறுப்பினர் பொன்முடியும் சென்னையில் கட்டப்பட்ட மேம்பாலங்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் எத்தனை சாதனைகளை இந்தத் துறைகளில் செய்திருக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ள விருப்பமில்லாமல் அவர் குறுகிய மனப்பான்மையுடன் சென்னையைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்.

    ஏனென்றால் அவர் சென்னை மேயராக இருந்தவர். ஆகவே, தான் இப்பொழுது ஒரு எம்.எல்.ஏ., இப்பொழுது தமிழ்நாடு முழுவதையும் பற்றியும் தெரிந்துகொண்டு பேச வேண்டும் என்பதை அவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

    மேலும், இந்தியா முழுவதிலும் இன்றைக்கு ஆய்வாளர்கள், தமிழ்நாடு நகர மாநிலமாக அதிவேகமாக மாறி வருவதாக சொல்கிறார்கள் என்றால் கிராமங்களில் உள்ள மக்களெல்லாம் குடி பெயர்ந்து நகரங்களுக்கு வருகிறார்கள் என்ற அர்த்தம் அல்ல. கிராமங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் இவைகளெல்லாம் மாநகராட்சி அந்தஸ்திற்கு படிப்படியாக உயர்ந்து வருகின்றன, வளர்ந்து வருகின்றன, முன்னேறி வருகின்றன என்பது பொருள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×