search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு வங்கிகளின் விவசாய கடன் தள்ளுபடி பெறுபவர் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்படும்: அமைச்சர் தகவல்
    X

    கூட்டுறவு வங்கிகளின் விவசாய கடன் தள்ளுபடி பெறுபவர் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்படும்: அமைச்சர் தகவல்

    சட்டசபையில் இன்று கூட்டுறவு வங்கிகளின் விவசாய கடன் தள்ளுபடி பெறுபவர் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, மேட்டூர் கண் ஆஸ்பத்திரியில் 16 பேருக்கு கண் பார்வை இழப்பு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிடம் விவசாயிகளின் கடனை தள்ளுபடி கோரிக்கை, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 34 ஒத்திவைப்பு தீர்மானங்களை கொடுத்துள்ளோம்.

    செப்டம்பர் 2-ந்தேதி சட்டசபை முடிவதால் ஒரு நாளைக்கு 2 ஒத்திவைப்பு தீர்மானத்தை எடுத்தால் தான் முழுவதையும் விவாதிக்க முடியும். எனவே பேரவை தலைவர் ஒத்திவைப்பு தீர்மானங்களை முழுமையாக எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    சபாநாயகர் தனபால்:- சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து பதில் வர வர ஒத்திவைப்பு தீர்மானங்களை எடுத்துக் கொள்கிறேன்.

    சக்கரபாணி (தி.மு.க.):- கூட்டுறவு வங்கிகளில் சிறு குறு விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வது போல் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிடம் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    பிரின்ஸ் (காங்.):- தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்வதோடு நகைகளை வைத்து விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    ஆஸ்டின் (தி.முக.):- தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி ஆகவில்லை. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுகுறு விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

    செங்குட்டுவன் (தி.மு.க.):- கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 2 மாதத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர்.

    இதே போல ஒவ்வொரு உறுப்பினர்களும் பேசினார்கள்.

    அப்போது அமைச்சர் செல்லூர் ராஜு எழுந்து கூட்டுறவு கடன் தள்ளுபடி தொடர்பாக பேசினார். அவர் பேசும்போது 6-வது முறை மகுடம் சூடி அகிலமே போற்றி பாராட்டும் அதிசயம் நம் அம்மா என்று முதல்- அமைச்சரை புகழ்ந்தார்.

    உடனே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி ஆகியோர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மற்ற தி.மு.க. உறுப்பினர்களும் மொத்தமாக எழுந்து அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சை எதிர்த்தனர். பதிலுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து தி.மு.க. செயலுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.

    உடனே சபாநாயகர் தி.மு.க. உறுப்பினர்களை தேவையில்லாமல் குறுக்கிடக்கூடாது என்று எச்சரித்தார்.

    பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:-

    இந்த தொடரில் முதன் முதலில் பேசுவதால் என்னை இந்த இடத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த என் தாயை பற்றி பேசுகிறேன். அதை நீங்கள் எப்படி தடுக்கலாம்.

    நேற்று இதே அவையில் உங்கள் (தி.மு.க.) உறுப்பினர் தாத்தா, பேரன், கொள்ளு பேரன் பற்றி பேசி விட்டு தான் மற்றவற்றை பேசினார். அதை நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தோம்.

    இப்போது நான் பேசும் போது மட்டும் இப்படி கோ‌ஷம் போடலாமா? இது தான் தி.மு.க.வின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடா?

    2016 தேர்தலின் போது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் சிறுகுறு விவசாயிகள் பெற்ற பயிர் கடன், நடுத்தர கடன், நீண்ட கால கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.

    தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கு இணங்க பதவியேற்ற அன்றே விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து முதல்-அமைச்சர் ஆணையிட்டார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டும் நெறி முறைகளும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 16 லட்சத்து 95 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.

    கடன் தள்ளுபடி பட்டியலை சரி பார்க்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி கிடைக்காதவர்கள் குழுவிடம் முறையிடலாம். அந்த பதிலும் திருப்தி இல்லை என்றால் மண்டல இணை பதிவாளரிடம் முறையிடலாம். மாநில அளவில் குழு அமைக்கப்பட்டு அவர்கள் பதிவாளருக்கு உதவுவார்கள்.

    எனவே முதல்-அமைச்சர் அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி பெறுபவர்களின் பட்டியல் கூட்டுறவு இணைய தளத்தில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×