search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்கு முதலிடம்: ஜெயலலிதா பேச்சு
    X

    தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்கு முதலிடம்: ஜெயலலிதா பேச்சு

    தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் கிடைத்துள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று பதில் அளித்து உரையாற்றினார்.

    அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் தொழில் துவங்க ஏற்றதாக உள்ள முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. தொழிலாளர் திறன், உட்கட்டமைப்பு, பொருளாதார சூழ்நிலை, நிர்வாக ஆளுமை ஆகியவைகளை எல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் இந்தியாவிலேயே மகாராஷ்டிராவை அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், தமிழகத்தை விட இரண்டு மடங்கு பெரிய மாநிலமாகும். அதற்கு அடுத்த மாநிலமாக தமிழகம் இருப்பது பெரிய சாதனை.

    தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் மாநிலம். தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் மாநிலம். புதிய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் பதிவு செய்வதில் தமிழ்நாடு முதல் மாநிலம். தொழில் துறையில் நிகர மதிப்புக் கூட்டல் படி தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

    தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் மொத்த வருவாய் மதிப்பில் மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளது. மொத்த ஏற்றுமதியில் மூன்றாம் இடம் என தமிழகம் உள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெறுவதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

    2000 ஆம் ஆண்டு முதல், 2011 ஆம் ஆண்டு வரையிலான 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த, வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் தொகையை விட இரு மடங்கு அளவில் கடந்த 5 ஆண்டுகளில் கிடைத்துள்ளது.

    தமிழ்நாட்டில் முதன் முதலாக உலக முதலீட்டாளர் மாநாடு 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. இதில், 2,42,160 கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன.

    இதில், 54 நிறுவனங்கள் மூலம் 23,258 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு பலர் வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளனர். மற்ற நிறுவனங்கள் நிலம் கையகப்படுத்துவது, நிதி ஆதாரங்களைப் பெறுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவிலேயே இவைகளும் தங்கள் தொழில்களை நிறுவ நடவடிக்கைகளை எடுத்து விடும்.

    இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 31,706 கோடி ரூபாய் முதலீடுக்கு வகை செய்யயப்பட்டுள்ளது. வழி காட்டும் மையம் மூலம் 57 திட்டங்களில் 6,036 கோடி ரூபாய் ஈர்க்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
    Next Story
    ×