என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    • கர்நாடக சட்டசபைக்கு நாளை தேர்தல் நடக்கிறது.
    • மத்திய அரசு கர்நாடகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபைக்கு நாளை (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நிறைவடைந்து உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எங்கள் கட்சி 130 முதல் 135 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. வருணா தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைவார். அங்கு எங்கள் கட்சியின் வேட்பாளர் சோமண்ணா வெற்றி பெறுவது உறுதி.

    தேர்தல் முடிவடைந்த பிறகு நாம் மீண்டும் இங்கு சந்திப்போம். அப்போது நான் தற்போது என்ன சொல்கிறேனோ, அது உண்மை என்று தெரியவரும். மத்திய அரசு கர்நாடகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால் தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறியுள்ளார். அந்த திட்டங்களை மீண்டும் கூற தேவை இல்லை. கர்நாடகம் வளர்ச்சி பாதையில் எப்படி பயணிக்கிறது என்பது பிரதமருக்கு நன்றாக தெரியும்.

    முஸ்லிம்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு குறைவாக இருப்பதால் அந்த சமூகத்திற்கு நாங்கள் டிக்கெட் வழங்கவில்லை. வரும் காலத்தில் அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் முஸ்லிம் சமூகத்தினருக்கு டிக்கெட் வழங்கப்படும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    • 7 நாட்கள் கர்நாடகத்தில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் செய்திருந்தார்.
    • பெங்களூருவில் 3 நாட்களில் 38 கிலோ மீட்டருக்கு திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்திருந்தார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் தான் பா.ஜனதா ஆட்சி நடப்பதால், இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக குஜராத் போன்று கர்நாடகத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று இருந்தார்.

    குறிப்பாக 7 நாட்கள் கர்நாடகத்தில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் செய்திருந்தார். அந்த 7 நாட்களில் 19 மாவட்டங்களுக்கு சென்றிருந்த அவர், 18 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசியதுடன், 5 முறை திறந்த வாகனத்தில் சென்று ஊர்வலமும் நடத்தி இருந்தார். பா.ஜனதா தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் காணொலி காட்சி மூலமாகவும் பிரதமர் மோடி பேசி இருந்தார்.

    குறிப்பாக பெங்களூரு, பெலகாவி, மைசூரு, கலபுரகி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி அதிக முன்னுரிமை கொடுத்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு இருந்தார். பெங்களூருவில் 3 நாட்களில் 38 கிலோ மீட்டருக்கு திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்திருந்தார். பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளதால், பெங்களூருவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இதற்கு அடுத்தபடியாக பெலகாவி மாவட்டத்தில் 18 தொகுதிகள் உள்ளதால், அங்கு 2 முறை பொதுக்கூட்டங்களில் பேசி இருந்தார்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த ஊர் கலபுரகி என்பதால், அங்கு திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலம் சென்றிருந்தார். அதற்கு அடுத்தபடியாக மைசூரு மாவட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிடுவதால், அங்கு ஒரு பிரசார கூட்டத்திலும், ஒரு முறை திறந்த வாகனத்திலும் சென்று பா.ஜனதாவுக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்டி இருந்தார். பிரதமர் மோடியின் இந்த வியூகம் பா.ஜனதாவுக்கு வெற்றியை தேடி கொடுக்குமா? என்பதை வருகிற 13-ந் தேதி தெரிந்து கொள்ளலாம்.

    • கர்நாடகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது.
    • இந்தியாவை காங்கிரஸ் கட்சி சுமார் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தது.

    சிவமொக்கா :

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா. கர்நாடக பா.ஜனதா துணை தலைவராக இருக்கும் இவர், சிகாரிப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளராகவும் உள்ளார். இந்த நிலையில் நேற்று விஜயேந்திரா சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை காங்கிரஸ் கட்சி சுமார் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அந்த 60 ஆண்டுகளில் நாடு எந்த வளர்ச்சியும் அடையவில்லை. மோடி பிரதமரான பிறகு இந்தியாவின் பாதையையே மாற்றிவிட்டார். இன்று உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கிறது. கொரோனா காலத்தில் பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி, மக்களை பாதுகாத்தார். கொரோனா காலத்தில் ராகுல்காந்தி பிரதமராக இருந்திருந்தால் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு முன்பாக நம் இந்தியா திவாலாகி இருக்கும்.

    கர்நாடகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது. நாட்டின் வளர்ச்சியில் கர்நாடகத்தின் பங்கு முக்கியமானது. மாநில மக்கள் பா.ஜனதாவுக்கு ஆசி வழங்குவார்கள். தற்போதைய நிலையில் எதிர்பார்த்ததை விட பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
    • வேட்பாளர்கள் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளனர்

    பெங்களூரு :

    224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு நாளை (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அத்துடன் ஆம் ஆத்மி 217 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    ஆனால் அக்கட்சியின் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஆனால் அக்கட்சியின் வேட்பாளர்கள் பெங்களூரு உள்ளிட்ட நகர பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஓட்டுகள் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கடந்த 27-ந் தேதி முதல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கினர். பிரதமர் மோடி கடந்த 29-ந் தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து 30-ந்தேதி மற்றும் கடந்த 2, 3-ந் தேதி, பின்னர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை என மொத்தம் 7 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு, பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டையாடினார்.

    பிரதமர் மோடி 18 பிரசார பொதுக்கூட்டங்களிலும், 5 ஊர்வலத்திலும் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பிரதமர் மோடி பீதரில் பிரசாரத்தை தொடங்கி, மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்துடன் பிரசாரத்தை நிறைவு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

    பீதர், விஜயாப்புரா, பல்லாரி, கொப்பல், கோலார், மண்டியா, ராமநகர், மைசூரு, பெங்களூரு, பெலகாவி, சித்ரதுர்கா, பாகல்கோட்டை, யாதகிரி, கலபுரகி, ராய்ச்சூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அதே போல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கலபுரகி, பெங்களூரு, கோலார், கதக், யாதகரி, ராய்ச்சூர், பெலகாவி, உப்பள்ளி-தார்வார் என பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உப்பள்ளியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டார். ராகுல் காந்தியும் கர்நாடகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் பீதர், கோலார், ராய்ச்சூர், கலபுரகி, பெலகாவி, பல்லாரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் அவர் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்தார். இந்த முறை கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி முதல் முறையாக ஈடுபட்டார். அவரது வருகை காங்கிரஸ் தலைவர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரும் சிக்பள்ளாப்பூர், விஜயாப்புரா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்

    உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மத்திய மந்திரிகள் கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அதே போல் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். கர்நாடக பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோரும் தீவிர பிராரசம் மேற்கொண்டனர்.

    ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா (வயது 90) தனது வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் சுட்டெரிக்கும் வெயிலில் ஓட்டு சேகரித்தார். அக்கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் கடைசி நாளான நேற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெங்களூருவில் நேற்று பி.எம்.டி.சி. பஸ்சில் பயணம் செய்து பயணிகளுடன் கலந்துரையாடி காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார். அத்துடன் அவர் தனது பிரசாரத்தை முடித்து கொண்டார். பிரியங்கா காந்தி விஜயநகர், சிக்பேட்டை தொகுதிகளில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டு காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார். அத்துடன் பிரியங்கா காந்தி தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தான் போட்டியிடும் சிக்காவி தொகுதியில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு, அத்துடன் தனது பிரசாரத்தை முடித்து கொண்டார். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை தனது சொந்த தொகுதியான கனகபுராவில் நிறைவு செய்தார். கடைசி நாளான நேற்று சித்தராமையா, குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு, சாமுண்டீஸ்வரி ஆகிய தொகுதிகளில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டு அங்கு நிறைவு செய்தார். கடந்த 15 நாட்களாக நகரங்கள், கிராமங்கள் என்று இல்லாமல் அனைத்து பகுதிகளில் ஒலிபெருக்கி சத்தம் ஒலித்தப்படி இருந்தது. தங்களின் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுமாறு அதில் கேட்டு கொண்டனர்.

    தெருத்தெருவாக ஒலித்து வந்த ஒலிப்பெருக்கிகளின் சத்தம் நேற்று மாலை 6 மணியுடன் நின்றுவிட்டது. முன்னதாக மாலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை திடீரென்று பெங்களூருவில் பலத்த மழை கொட்டியது. சில வேட்பாளர்கள் மழையை பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்தனர். கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பகிரங்க தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தொகுதிகளில் தங்கியிருந்த வெளியூர்காரர்கள் இடத்தை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இனி வேட்பாளர்கள் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளனர்

    அதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விரிவாக மேற்கொண்டுள்ளது. கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர்.

    இந்த வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அந்த வாக்குச்சாவடிகளில் வீடியா மற்றும் இணையவழி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தேர்தல் பணியில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 153 அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். ஒரு லட்சத்து 56 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தேர்தல் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் தேர்தல் நடைபெறும் நாளன்று அரசு பஸ் போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்படும் என்று ஏற்கனவே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கர்நாடக சட்டசபைக்கு நாளை தேர்தல் நடக்கிறது.
    • சோதனை முறையில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு நாளை (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதற்காக 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் வாக்களிக்க ஒரு புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்க அனுமதிப்பது தான் அந்த புதிய வசதி. சோதனை முறையில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்த தேர்தலில் பெங்களூருவில் மாநில தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு அருகில் அரண்மனை ரோட்டில் உள்ள அரசு ராமநாராயண் செல்லாராம் கல்லூரி வாக்குச்சாவடியில் அறை எண் 2-ல் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு வாக்களிக்கும் வாக்காளர்கள், தங்களின் செல்போனில் 'சுனாவனா' (தேர்தல்) செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

    அதில் வாக்காளர் அடையாள அட்டை எண், செல்போன் எண் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு 'ஓ.டி.பி.' ரகசிய எண் வரும். அதனை உள்ளீடு செய்து, வாக்காளர் தனது செல்பி புகைப்படத்தை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்த பிறகு அந்த வாக்காளர், வாக்குச்சாவடி சென்று முகம் அடையாளம் காணும் ஸ்கேனர் கருவி முன்பு நிற்க வேண்டும். அந்த ஸ்கேனர் கருவி புகைப்படம், தேர்தல் ஆணைய விவரங்களுடன் பொருந்தினால், அவர் எந்த ஆவணத்தையும் காட்டாமல் நேரடியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்.

    இந்த வசதியால் கள்ள ஓட்டு போடுவது தடுக்கப்படுவதுடன் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் ஏற்படும் காலவிரயமும் தவிர்க்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர்.

    • என்னை பாதுகாக்க அம்பேத்கரின் அரசியல் சாசனம் உள்ளது.
    • நான் கடந்த 52 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன்

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது சொந்த ஊரான கலபுரகியில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் உள்பட எனது குடும்பத்தினரை கொலை செய்வதாக பா.ஜனதா வேட்பாளர் கூறியுள்ளார். இந்த விஷயம் பா.ஜனதா தலைவர்களின் மனதில் தோன்றி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு யாருக்கு கார்கே குடும்பத்தை அழிக்க இத்தகைய தைரியம் வரும். அவரது மிரட்டலுக்கு பின்னணியில் சில பா.ஜனதா தலைவர்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த மிரட்டல் வந்திருக்காது.

    என்னை பாதுகாக்க அம்பேத்கரின் அரசியல் சாசனம் உள்ளது. எனக்கு ஆதரவாக கலபுரகி மற்றும் கர்நாடக மக்கள் உள்ளனர். நான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு எனக்கு ஆதரவாக இந்திய மக்களும் இருக்கிறார்கள். என்னையும், எனது குடும்பத்தினரையும் அழித்தால், எனது இடத்திற்கு வேறு நபர் வருவார். நானும், எனது மகனும் பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக பேசுவதால், எங்களை ஒழிக்க திட்டமிடுகிறார்கள். பிரதமர் மோடியும் அதே போல் தான் நடந்து கொள்கிறார்.

    என்னை பற்றி நீங்கள் (மோடி) பேசுங்கள், அது சரி. ஆனால் எனது மகனை பற்றி பேசுவது ஏன்?. எனது மகன் உங்களுக்கு (மோடி) சமமானவர் இல்லை. நான் கடந்த 52 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். ஆனால் எனது குடும்பத்தினரை எதற்காக இழுக்கிறீர்கள்?. நான் சிறுவயதாக இருந்தபோது, ஒட்டுமொத்தமாக எனது குடும்பத்தினரை இழந்து தனியாக நின்றேன்.

    நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். மக்களின் ஆசியுடன் நாங்கள் தொடர்ந்து வாழ்வோம். பா.ஜனதாவினர் என்ன நினைக்கிறார்களோ அதை செய்யட்டும், நானும் வலுவாக தான் உள்ளேன்.

    எனக்கு தற்போது 81 வயது ஆகிறது. நான் இன்னும் 8 முதல் 10 ஆண்டுகள் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு என்னை நீங்கள் கொலை செய்ய விரும்பினால் அதுபற்றி நான் கவலைப்படவில்லை. உங்களின் பிரச்சினை தீரும் என்றால் என்னை கொல்லுங்கள். நான் அதற்கு தயாராக உள்ளேன். ஆனால் எனது உயிர் மூச்சு உள்ளவரை ஏழை மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

    • ராகுல்காந்தி, பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • ஒரு பெண் ராகுல் காந்தியின் கன்னத்தை தொட்டி தடவி பாச மழை பொழிந்தார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வந்த ராகுல்காந்தி, காலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களில் பணியாற்றும் உணவு, பொருட்கள் விற்பனை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அத்துடன் ஆன்லைன் பொருட்கள் விற்பனை பிரதிநிதி ஒருவருடன் ஸ்கூட்டரில் பயணித்தார்.

    அதைத்தொடர்ந்து ஆனேக்கல், சிவாஜிநகர் தொகுதிகளில் நடந்த பிரசாரக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று இருந்தார். இரவில் பெங்களூரு கன்னிங்காம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். நேற்று காலை அவர் ஓட்டல் அருகே உள்ள டீக்கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்தார். அப்போது அங்கிருந்தவர்களிடம் அரசியல், பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

    பின்னர் அவர் அங்கிருந்து பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பி.எம்.டி.சி. பஸ்சில் ஏறினார். டிக்கெட் எடுத்து பொதுமக்களுடன் ராமமூர்த்தி நகர் வரை அந்த பஸ்சில் பயணம் செய்தார்.

    அப்போது அவர் சிறிது நேரம் நின்றபடியும், சிறிது தூரம் இருக்கையில் அமர்ந்தும் பயணம் செய்தார். அந்த சமயத்தில் ராகுல்காந்தி, பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களிடம் அவர்களின் வேலை பற்றியும், அவர்கள் பஸ் பயணம் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

    அப்போது சில பெண்கள் விலைவாசி உயர்வு பற்றி கூறினர். அதையடுத்து ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையும், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். அவர் பயணிகளுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதுபோல் பயணிகளும் அவரை தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    ராமமூர்த்தி நகர் வந்ததும் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அவர் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அங்கு நின்றிருந்த பெண் பயணிகள் ராகுல்காந்தி அருகில் வந்து பேசினர். அப்போது ஒரு பெண் ராகுல் காந்தியின் கன்னத்தை தொட்டி தடவி பாச மழை பொழிந்தார். அந்த பெண்ணை ராகுல்காந்தி ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த பெண்ணின் தோளில் கைப்போட்டு படம் எடுத்துக்கொண்டார்.

    பின்னர் ராகுல்காந்தி காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பஸ்சில் அவர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது ராகுல்காந்தி, பஸ்சில் பயணித்து, பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.
    • மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான அழைப்பு பிரிவினைவாத அழைப்புக்கு சமம் என பாஜக கூறி உள்ளது.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசியதை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. 'சோனியா காந்தி, 6.5 கோடி கன்னடர்களுக்கும் உறுதியான செய்தியை தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படுத்த ஒருவரையும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது" என்று அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதில் கர்நாடகாவின் இறையாண்மை என்ற வார்த்தைதான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. கர்நாடகாவின் இறையாண்மை என்று பேசியதன்மூலம் கர்நாடகாவை இந்தியாவிடம் இருந்து பிரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரஸ் மீதும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.

    'இந்திய யூனியனில் கர்நாடகா ஒரு முக்கியமான உறுப்பு மாநிலமாகும். இந்திய யூனியனின் எந்த ஓர் உறுப்பு மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான எந்த ஒரு அழைப்பும் பிரிவினைவாத அழைப்புக்கு சமம்' என பாஜக தனது கடிதத்தில் கூறி உள்ளது.

    இந்த புகார் மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு தொடர்பாக விளக்கம் அளித்து, திருத்த நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறி உள்ளது. 

    • பிரதமர் மோடி தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நேற்று நிறைவு செய்தார்.
    • தேர்தலுக்காக கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 2,430 பேரும், பெண் வேட்பாளர்கள் 180 பேரும், 3-ம் பாலின வேட்பாளர் ஒருவரும் போட்டியிடுகிறார்கள்.

    இதில் பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரசில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் அடங்குவர்.

    சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். இவர்களில் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் பொது வாக்காளர்கள் ஆவர். 47 ஆயிரத்து 488 பேர் அரசு ஊழியர்கள் ஆவர். வருகிற 10-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

    சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. கடைசி நாளான இன்று தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்தனர்.

    கர்நாடக தேர்தல் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகளின் தலைவர்கள் நாடு முழுவதிலும் இருந்து கர்நாடகாவில் குவிந்துள்ளனர். பா.ஜ.க.வை பொருத்தவரை பிரதமர் மோடி  7 நாட்கள் பிரசாரம் செய்துள்ளார். தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்று நிறைவு செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்க ளின் முதல்-மந்திரிகள், மத்திய, மாநில அமைச்சர் கள் என 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அடுத்தடுத்த கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருப்பதால் அக்கட்சியினர் உற்சாகமாக பிரசாரம் செய்து வருகின்றனர். கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிர தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலைமையில் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா, முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி, கட்சியின் மாநிலத் தலைவர் சி.எம். இப்ராகிம் ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டனர். மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே இன்று பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். இருப்பார் மற்றும் கபு மற்றும் உடுப்பி நகரத்தில் அவர் வாக்குகள் சேகரித்தார். முன்னதாக அவர் ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது சொந்த ஊரான ஹாவேரியிலும், கனகபுரா தொகுதியிலும் பிரசாரம் செய்தார். பா.ஜனதா வேட்பாளர்க ளுக்கு ஆதரவாக நடிகர் சுதீப், நடிகைகள் ஸ்ருதி, தாரா ஆகியோரும் திறந்த வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தார்கள்.

    பெங்களூரு சிவாஜிநகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் ஒரே மேடையில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்கள். அதற்கு முன்பாக பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல், பெங்களூரு புலிகேசிநகர் தொகுதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் செய்திருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தனது சொந்த மாவட்டமான கலபுரகியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறற்றது. அதன்பின்பு தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல், நட்சத்திர பேச்சாளர்கள் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. நாளை மறுநாள் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பதிவினை பாஜக தனது புகாருடன் இணைத்துள்ளது.
    • மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான அழைப்பு பிரிவினைவாத அழைப்புக்கு சமம்.

    கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தின் ஹுப்ளியில் சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

    சோனியா காந்தி பேசியதை குறித்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "சோனியா காந்தி, 6.5 கோடி கன்னடர்களுக்கும் உறுதியான செய்தியை தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படுத்த ஒருவரையும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சோனியா காந்தியின் இந்த கருத்து தேர்தல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரசுக்கு பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவின் இறையாண்மை என்று பேசியதன்மூலம் கர்நாடகாவை இந்தியாவிடம் இருந்து பிரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், காங்கிரஸ் மீதும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.

    'இந்திய யூனியனில் கர்நாடகா ஒரு முக்கியமான உறுப்பு மாநிலமாகும். இந்திய யூனியனின் எந்த ஓர் உறுப்பு மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான எந்த ஒரு அழைப்பும் பிரிவினைவாத அழைப்புக்கு சமம். அத்துடன், இது மோசமான பின்விளைவுகளுக்கும் வழிவகுக்கும்' என பாஜக தனது கடிதத்தில் கூறி உள்ளது.

    மேலும் இத்தகைய ட்வீட், தேசியவாதிகள், அமைதியை விரும்புபவர்கள், முற்போக்கான மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் செயல் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

    மேலும், சோனியா காந்தி பேச்சு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பதிவினையும் பாஜக தனது புகாருடன் இணைத்துள்ளது.

    • தொழிலாளர்களுக்கு பிடித்த கால்பந்து வீரர்களை பற்றி ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
    • ஸ்விக்கீ, சுமோட்டா, ப்ளிங்க்கிட் உள்ளிட்ட உணவு வினியோக நிறுவன ஊழியர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

    பெங்களூர்:

    கர்நாடகா மாநில சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

    இறுதி கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்திற்காக கர்நாடகம் வந்துள்ள ராகுல்காந்தி பெங்களூரில் சிறுசிறு வேலைகள் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தொழிலாளர்கள் தங்களது அவல நிலையை ராகுல்காந்தியிடம் பகிர்ந்து கொண்டனர்.

    தொடர்ந்து, அங்குள்ள ஒரு உணவகத்தில் தொழிலாளர்களுடன் அமர்ந்து ராகுல்காந்தி மசாலா தோசைகள் மற்றும் காபி ஆர்டர் செய்து சேர்ந்து சாப்பிட்டார். அப்போது ராகுல்காந்தியிடம் தொழிலாளர்கள் கூறுகையில், வேலையில்லா திண்டாட்டத்தால் குறைவான ஊதியம் பெறும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

    அவர்களின் குறைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி தொடர்ந்து அவர்களுடன் உரையாடினார். அப்போது விளையாட்டுகள் பற்றியும் விவாதித்தார்.

    மேலும் தொழிலாளர்களுக்கு பிடித்த கால்பந்து வீரர்களை பற்றியும் அவர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து ஸ்விக்கீ, சுமோட்டா, ப்ளிங்க்கிட் உள்ளிட்ட உணவு வினியோக நிறுவன ஊழியர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

    அப்போது அவர்களின் வாழ்க்கை, நிலையான வேலையின்மை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை பற்றி விவாதித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக சட்டசபை தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.
    • வாழ்க்கை அறிவியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும், எதிர்காலம் உருவாக வேண்டும் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்திய அறிவுசார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மங்களூரு டாக்டர் நரேந்திர நாயக் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

    அதன்படி கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும்? காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? கட்சி அல்லாதவர்கள் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள்? எத்தனை பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது உள்ளிட்ட 20 கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.

    இந்த கேள்விகளுக்கு பதில்களை சரியாக கணித்து கூறும் ஜோதிடர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்போவதாக அவர் தெரிவித்து உள்ளார். அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் அளிப்பவர்கள் பரிசுக்கு தகுதி பெறுவார்கள்.

    பல வருடங்களாக ஜோதிடர்களுக்கு கேள்விகள், பரிசுகள் என்று சவால் விட்டு வரும் டாக்டர் நரேந்திர நாயக், 2009-ஆம் ஆண்டு 25 கேள்விகள் கொண்ட சவாலை தொடங்கி ரூ.1 லட்சம் பரிசு அறிவித்தார். 1976-ல் தட்சிண கன்னட விசாரவாதி சங்கத்தை நிறுவினார்.

    மக்களிடையே அறிவியல் உணர்வை வளர்க்கும் வகையில் நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார். 9 மொழிகளை சரளமாக பேசக்கூடிய திறன் படைத்த இவர் மங்களூரு கஸ்தூரபா மருத்துவக் கல்லூரியின் உயிர் வேதியியல் துறையில் விரிவுரையாளராகவும், உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

    இதுபற்றி அவர் கூறுகையில், மக்களிடம் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் அறிவியல் உணர்வை வளர்ப்பதே எனது நோக்கம். ஜோதிடமும் ஒரு அறிவியல் என்று நிரூபிக்கப்பட்டால் நான் ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வாழ்க்கை அறிவியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும், எதிர்காலம் உருவாக வேண்டும் என்றார்.

    ×