என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    • 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
    • மொத்தம் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    கடந்த மாதம் 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 20-ந் தேதி முடிந்தது. இங்கு 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 2 ஆயிரத்து 430 பேரும், பெண் வேட்பாளர்கள் 184 பேரும் உள்ளனர். ஒரே ஒரு திருநங்கை வேட்பாளர் மட்டும் களத்தில் உள்ளார்.

    ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சுயேச்சையாக 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியிலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணாவிலும், முன்னாள் முதல்-மந்திரிகள் குமாரசாமி சென்னப்பட்டணாவிலும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

    இந்த தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும் உள்ளனர். 3-ம் பாலின வாக்காளர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் அடங்குவர். இந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37 ஆயிரம் இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குச்சாவடிகளில் இளம் வாக்காளர்கள், பெண்கள், இனக்குழுக்கள் போன்றோருக்கு சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இனக்குழுக்கள் வாக்குச்சாவடியில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள், அந்த சமூகத்தின் கலாசார உடைகளை அணிந்து வந்திருந்தனர். இது வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.

    பெண்களுக்கான 'சகி' வாக்குச்சாவடிகள் மாநிலம் முழுவதும் மொத்தம் 996 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் முழுக்க, முழுக்க பெண் தேர்தல் அலுவலர்கள் பணியாற்றினர். மாநிலம் முழுவதும் 239 வாக்குச்சாவடிகள் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் ரோஜாப்பூக்கள் கொடுக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுபோல் மாநிலம் முழுவதும் மொத்தம் 239 வாக்குச்சாவடிகள் இளம் வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் முழுக்க, முழுக்க இளம் தேர்தல் அலுவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

    திட்டமிட்டப்படி ஓட்டுப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணி முதலே பொதுமக்கள் வாக்குச்சாவடிகளை நோக்கி வந்தனர்.

    இதனால் காலை 7.30 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். விறுவிறுப்பான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்துவிட்டு சென்றனர். இந்த முறை வாக்காளர்களின் முகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்களிப்பதில் ஒரு விதமான ஆர்வம் காணப்பட்டது. பெங்களூரு சிவாஜிநகர், பேகூர், தொட்ட நாகமங்களா, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, ஸ்ரீராமபுரா, யஷ்வந்புரம் போன்ற பகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர்.

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவியில் உள்ள அரசு கன்னட உயர் மாதிரி தொடக்கப்பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்துவிட்டு சென்றார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    92 வயதாகும் முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது குடும்பத்தினருடன் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் வாக்களித்தார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது மனைவி அனிதா குமாரசாமி, மகன் நிகில் குமாரசாமி, மருமகள் ரேவதி ஆகியோருடன் வந்து பிடதி கேதகானஹள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். நடிகர்கள் கணேஷ், சுதீப், உபேந்திரா, யுவ ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், துருவ் சர்ஜா, யஷ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களித்தனர்.

    பெங்களூரு பத்மநாபநகரில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலை 12 மணியளவில் 30 பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டைகளுடன் வந்தது. அங்கு இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த கும்பலை விரட்டியடித்தனர்.

    இதைத்தவிர பெங்களூரு மாநகரில் ஓட்டுப்பதிவு எந்த விதமான வன்முறையும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய அளவில் வன்முறைகள், வாக்குவாதங்கள், தள்ளுமுள்ளுகள் நடைபெற்றன. பெரும்பாலும் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. விஜயாப்புரா மாவட்டம் மசபிநாலா கிராமத்தில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வட்ட அதிகாரி காரில் கூடுதல் மின்னணு வாக்கு எந்திரங்களுடன் வந்தார்.

    இதை பார்த்த கிராம மக்கள், தேர்தலில் ஏதோ முறைகேடு செய்ய வந்திருப்பதாக கருதி சந்தேகம் அடைந்து அந்த காரை தடுத்து நிறுத்தினர். அதில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்கு எந்திரங்களை வெளியே எடுத்து நடுரோட்டில் போட்டு அடித்து உடைத்து நொறுக்கினர். இதில் அந்த எந்திரங்கள் துண்டு, துண்டாக உடைந்து நொறுங்கியது. மேலும் அந்த காரையும் குண்டுக்கட்டாக தூக்கி கவிழ்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆனந்த்குமார், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அங்கு போலீஸ் படையும் விரைந்து வந்தது. வன்முறையில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் படை அங்கு வந்த பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. மொத்தம் 2 மின்னணு வாக்கு எந்திரங்கள், 2 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 3 வி.வி.பேட் எந்திரங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தன. அதே நேரத்தில் அங்கு அந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. அதில் எந்த தடையும் ஏற்படவில்லை.

    கோலார் மாவட்டம் குமனி கிராமத்தில் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரின் மண்டை உடைந்தது. சித்தராமையா போட்டியிடும் வருணாவுக்கு பா.ஜனதா வேட்பாளர் சோமண்ணா வந்தார். அவர் வாக்குச்சாவடி ஒன்றில் ஆய்வு செய்தார். அப்போது, பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    கா்நாடகத்தில் மிக அதிக வாக்காளர்களை கொண்ட பெங்களூரு தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தொட்ட நாகமங்களாவில் 8 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரே ஒரு வாக்குச்சாவடி மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அங்கு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வாக்காளர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து வாக்களித்து சென்றனர். இதனால் அவா்கள், தேர்தல் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    பெலகாவி மாவட்டம் கித்தூரில் 9 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டது. அங்கு மின்னணு வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து வாக்குப்பதிவு பாதியில் நின்றது. இதனால் அங்கு வாக்காளர்கள் 2 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தனர். இதன் காரணமாக வாக்காளர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

    காலை 9 மணி நிலவரப்படி ஓட்டுப்பதிவு 8.26 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 52.18 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கொன்றும், இங்கொன்றுமான சம்பவங்களை தவிர்த்து, மற்ற இடங்களில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மொத்தம் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த தேர்தலில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் பா.ஜனதா 104 இடங்களையும், காங்கிரஸ் 80 தொகுதிகளையும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 37 இடங்களையும் கைப்பற்றின. அப்போது எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(13-ந் தேதி) நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
    • ஜீ மேட்ரைஸ் மற்றும் பி மார்க் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறற்து. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி உள்ளது. மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது வரும் 13ம் தேதி தெரிந்துவிடும். மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

    இதற்கிடையே வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கின. இதில் ஜன் கி பாத், மேட்ரைஸ் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக உள்ளது.

    பாஜக 94 முதல் 117 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 91 முதல் 106 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 14 முதல் 24 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    இதேபோல் மேட்ரைஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ்-86, மதச்சார்பற்ற ஜனதா தளம்-21 இடங்கள் பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் பாஜக 85 முதல் 100 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 94 முதல் 108 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 32 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    ஜீ மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் 108 தொகுதிகள், பாஜக 86 தொகுதிகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் 28 தொகுதிகளை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

    பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் கட்சிக்கு 94 முதல் 108 இடங்கள் வரை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது. பாஜகவுக்கு 85 முதல் 100 இடங்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 24 முதல் 32 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    ஒட்டுமொத்தமாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கும்போது எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்றே தெரிகிறது. ஆட்சியமைப்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேர்தலுக்காக மாநிலம்‌ முழுவதும்‌ 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள்‌ அமைக்கப்பட்டிருந்தன.
    • வாக்குச்சாவடிகளில்‌ சி.சி.டி.வி. கேமராக்கள்‌ பொருத்தப்பட்டுள்ளன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில் 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி (அதாவது இன்று) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி அறிவித்தது.

    அதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 13-ந்தேதி தொடங்கி 20-ந்தேதியுடன் நிறைவடைந்தது. 21-ந்தேதி மனுக்கள் பரிசீலனையும், 24-ந்தேதி மனுக்கள் வாபஸ் பெறுதலும் நடந்தது. தொடர்ந்து 24-ந்தேதி மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    அதன்படி 224 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில் பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் ஜனதாதளம் (எஸ்) கட்சி 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும், 918 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். ஒரே ஒரு திருநங்கை போட்டியிடுகிறார்.

    தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாநிலத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53, பெண்கள் 2 கோடியே 64 லட்சத்து 74, மூன்றாம் பாலினத்தவர் 4 ஆயிரத்து 927, மாற்றுத்திறனாளிகள் 5 லட்சத்து 71 ஆயிரத்து 281 அடங்குவர். 11 லட்சத்து 71 ஆயிரத்து 558 புதிய வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்கின்றனர்.

    தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். மேலும் தேர்தலையொட்டி 1 லட்சத்து 65 ஆயிரத்து 389 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3.5 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளார்கள்.

    வாக்குப்பதிவிற்கு 76 ஆயிரத்து 603 மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை நேற்று முன்தினமே அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. விவிபேட் எனப்படும் வாக்காளர்கள் அளித்த வாக்கை சரிபார்த்துக்கொள்ளும் 76,202 கருவிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.

    வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    பெண்களுக்கான வாக்குச்சாவடிகள், மாற்றுத்திறனாளிகள், இளம் வாக்காளர்கள், மலைவாழ் மக்களுக்கான வாக்குச்சாவடிகள் பல்வேறு வகையான வாக்குச்சாவடிகள் வாக்காளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

    பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் அந்த வாக்குச்சாவடிகள் இணைய (வெப்) கேமரா மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

    அதிகாலை முதலே வாக்களிக்க ஓட்டுச்சாவடிகள் முன்பு ஏராளமானோர் திரண்டனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலையில் இருந்தே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தார்கள்.

    காலை 11 மணி நிலவரப்படி 21 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    வாக்குப்பதிவை எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக நடத்த பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 5 பேருக்கு மேல் ஒன்றாக செல்ல கூடாது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம் நடத்த தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூரு விஜய் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பா 7 முறை வெற்றிபெற்ற தொகுதி, ஷிகாரிபுரா. இத்தொகுதியை அவரது மகன் பி.ஒய். விஜயேந்திராவுக்கு பா.ஜ.க. தற்போது ஒதுக்கியுள்ளது.

    இந்நிலையில், ஷிகாரிபுரா பகுதியில் உள்ள ராகேவந்திர சுவாமி கோவிலில் எடியூரப்பா, விஜயேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர். இதன்பிறகு எடியூரப்பா அங்குள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்பு அவர் கூறும்போது, அருதிப் பெரும்பான்மை பெற்று கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

    பெங்களூரு ஆர்.ஆர். நகரில் உள்ள வாக்குச் சாவடியில் கன்னட நடிகை அமுல்யாவும் அவரது கணவரும் வாக்களித்தனர். கர்நாடக மந்திரி சி.என். அஸ்வத் நாராயண் பெங்களூரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார். கர்நாடக அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான கே.சுதாகர் சிக்கபள்ளாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வெளியூர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்துள்ளனர்.
    • அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த ராகவேந்திரசேத் அங்கிருந்து ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தார்.

    'சர்கார்' படத்தில் வெளிநாட்டில் வசிக்கும் விஜய் தனது வாக்குரிமையை நிறைவேற்ற பல லட்சம் செலவு செய்து இந்தியா வருவார். அவரது ஓட்டினை வேறு ஒருவர் போட்டதால் தனது அதிரடியை தொடங்குவார்.

    அதுபோன்ற சம்பவம் கர்நாடக தேர்தலிலும் நடந்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வெளியூர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்துள்ளனர்.

    கர்நாடகாவை சேர்ந்த அவர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த ஆர்வத்துடன் வந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த ராகவேந்திரசேத் அங்கிருந்து ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தார்.

    இதற்காக அவர் 14,000 கிலோமீட்டர் பயணம் செய்து ரூ.1.50 லட்சம் செலவு செய்து வந்தார். ஆனாலும் அவர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். ராகவேந்திரசேத்தின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அவர் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடப்போவதாக தெரிவித்தார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
    • கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

    பெங்களூரு :

    இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று முதல் சட்டவிரோதமாக பணம் எடுத்து செல்வது, நகைகள், போதைப்பொருள், மதுபானம் கொண்டு செல்வதை கண்காணிக்க சோதனை சாவடிகள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.

    கர்நாடகத்தில் இதுவரை விதிகளை மீறியதாக ரூ.379 கோடி மதிப்பீட்டிலான ரொக்கம், தங்க நகைகள், மதுபானம், பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது சிக்கிய பொருட்களை விட 4½ மடங்கு அதிகம்.

    தீவிரமான கண்காணிப்பு, சோதனைகள், அண்டை மாநிலங்களுடன் ஒருங்கைிணைந்து செயல்பட்டது, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் இந்த முறை பணம், பொருட்கள் வினியோகத்தை தடுத்துள்ளோம்.

    இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • 75 புதிய முகங்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • தென்இந்தியாவில் ஒரே ஒரு மாநிலத்தில் அதாவது கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜனதா ஆட்சி நடக்கிறது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்த்ல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை என்பது அதிகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த எதிர்ப்பு அலையை சமாளிக்க ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது. 75 புதிய முகங்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் பிரதமர் மோடி மாநிலம் முழுவதும் சுமார் 20 மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். பெங்களூருவில் 33 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்டமான ஊர்வலம் நடத்தினார்.

    அது மட்டுமின்றி மைசூரு, கலபுரகி உள்ளிட்ட நகரங்களிலும் அவர் ஊர்வலம் மேற்கொண்டார். பிரதமர் மோடியின் இந்த தீவிரமான பிரசாரத்தால் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களிடையே நிலவும் எதிர்ப்பு மனநிலை குறையும் என்று கர்நாடக பா.ஜனதா நம்புகிறது. அந்த எதிர்ப்பு மனநிலையில் இருந்து வெளியே வந்து, பா.ஜனதா வெற்றி பெற பிரதமர் மோடியின் புகழ் கை கொடுக்கும் என்று அந்த தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்

    தென்இந்தியாவில் ஒரே ஒரு மாநிலத்தில் அதாவது கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. எக்காரணம் கொண்டும் இந்த ஆட்சியை பறிகொடுத்து விடக்கூடாது என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள். நாட்டின் பெரிய, வேகமாக வளர்ந்து வரும் வளமான மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தை தக்கவைத்துக்கொள்ள பா.ஜனதா தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

    பிரதமர் மோடி மட்டுமின்றி, உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல்வேறு மத்திய மந்திரிகள், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களின் பா.ஜனதா முதல்-மந்திரிகள், பிற மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் கர்நாடகத்தில் தங்கி பிரசாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர்.
    • பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பெங்களுரு:

    224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர். இந்த வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கர்நாடக சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது.
    • பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என முதல் மந்திரி தெரிவித்தார்.

    பெங்களூரு:

    முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

    கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். எங்கள் கட்சிக்கு அனைவரின் ஆசிர்வாதமும் உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைவது உறுதி. சித்தராமையா, டி.கே.சிவகுமாரின் தொலைக்காட்சி பேட்டியை பார்த்தேன். காங்கிரசில் எதுவும் சரியாக இல்லை என்பது தெரிகிறது.

    மக்களுக்கு ஒற்றுமையாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் முயற்சி செய்துள்ளனர். இது போன்ற நாடகம் பா.ஜ.க.வில் நடக்காது. ஏனெனில் எங்கள் கட்சியில் ஒற்றுமை உள்ளது. எங்களுக்கு மக்களின் ஆதரவும் உள்ளது.

    மக்களின் பிரச்சினைகளை அறிந்து செயல்படுவது என்பது மிக முக்கியமானது. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கிறேன். சிக்காவி தொகுதியில் எனது குடும்பத்தினருடன் வாக்களிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

    • இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று காங்கிரஸ் கூறியது.
    • காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. அதன்பின்னர் வாக்குப்பதிவு முடியும் வரை யாரும் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடக மக்களுக்கு கடிதம் எழுதினார். அதில், கர்நாடகாவை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்றும் பணிக்காக உங்கள் ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறேன் என கேட்டுக்கொண்டார்.

    தேர்தலுக்கு முந்தைய நாளில் பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோள், தேர்தல் விதிமீறல் என பலரும் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியும் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று கூறியது. அத்துடன், இந்த விஷயத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் (கர்நாடகா பொறுப்பு) ரன்தீப் சுர்ஜேவாலா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததற்காக, அவர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். சட்டங்கள் பிரதமருக்கு பொருந்துமா இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • பிரவீன்குமாரை நீங்கள் முதலமைச்சர் பதவியில் அமர்த்தினால் தெலுங்கானா ஒரு மின் மிகை மாநிலமாக உருவாக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
    • மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 114 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர்களை ஆதரித்து பெங்களூர் அரண்மனை மைதானத்தில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேசிய தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்-அமைச்சருமான மாயாவதி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அதன்பின்பு பெங்களூரில் தனியார் விடுதியில் தங்கி இருந்த மாயாவதியை புத்த பூர்ணிமா தினத்தன்று பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவருடைய மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

    அப்பொழுது ஆம்ஸ்ட்ராங் தம்பதியினரின் பெண் குழந்தைக்கு இந்திய முதல் பெண் ஆசிரியரான சாவித்திரி பாய் பெயரை மாயாவதி சூட்டி, குழந்தையை முத்தமிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

    பின்னர் ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கானா நம்பிக்கை மாநாட்டில் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார். மாநாட்டிற்கு தெலுங்கானா மாநிலத் தலைவரும் முன்னாள் டிஜிபி ஆர். எஸ். பிரவீன் குமார், (ஐபிஎஸ்) தலைமை தாங்கினார். இந்த மாநாட் டில் மாயாவதி கலந்து கொண்டு பேசியதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைத்தால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு சமமான இட ஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த தெலுங்கானா நம்பிக்கை மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரும் நம்பிக்கையோடு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து அதனை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

    எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சி அமைந்தால் உங்கள் நம்பிக்கையின் நட்சத்திரமான பிரவீன்குமாரை நீங்கள் முதலமைச்சர் பதவியில் அமர்த்தினால் தெலுங்கானா ஒரு மின் மிகை மாநிலமாக உருவாக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் சித்தார்த்த மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • கர்நாடகத்தில் இதுவரை ஆட்சி செய்த பா.ஜனதா மக்களை ஏமாற்றி கொள்ளையடித்துள்ளது.
    • காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கர்நாடகத்தில் 21 நாட்களில் 557 கிலோ மீட்டர் தூரம் பாரத் ஜூடோ யாத்திரை மேற்கொண்டேன். விவசாயிகள், தொழிலாளர்கள், டிரைவர்கள், பெண்கள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசினேன். கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம். 2-வது யுவநிதி திட்டம்.

    இதன் முலம் வேலையில்லாமல் உள்ள பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000-ம், வேலை இல்லாத டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500-ம் உதவித்தொகையும், 2½ லட்சம் அரசு வேலையும், 10 லட்சம் தனியார் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உத்தரவாதம்.

    3-வது உத்தரவாதம், அன்னபாக்ய திட்டம். மாதந்தோறும் 10 கிலோ அரிசி வழங்கப்படும். 4-வது உத்தரவாதம் கிரக ஜோதி திட்டம். இதன்படி வீட்டுக்கு 200 யுனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 4.5 கோடி மக்கள் பயன் அடைவார்கள்.

    5-வது உத்தரவாதம், அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் சவுகரியமாக பயணிக்க இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

    இந்த 5 திட்டங்களையும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் நாளில், அமல்படுத்தப்படும். கர்நாடகத்தில் இதுவரை ஆட்சி செய்த பா.ஜனதா மக்களை ஏமாற்றி கொள்ளையடித்துள்ளது. அந்த கட்சி 40 சதவீத ஊழல் செய்துள்ளது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இது கர்நாடகத்தின் சுயமரியாதையை காக்க நடைபெறும் தேர்தல்.
    • பா.ஜனதாவினர் மக்களை மிரட்டி ஓட்டு வாங்க முயற்சி செய்கிறார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதாவினர் மக்களை மிரட்டி ஓட்டு வாங்க முயற்சி செய்கிறார்கள். பா.ஜனதாவுக்கு வாக்களிக்காவிட்டால், திட்டங்களை ஒதுக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். இந்த நாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது. மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் 41 சதவீதம் கர்நாடகத்தில் இருந்து செல்கிறது. இதில் நமக்கு மீண்டும் கிடைப்பது சொற்ப அளவில் தான்.

    பா.ஜனதாவினரின் மிரட்டலுக்கு கன்னடர்கள் பயப்பட மாட்டார்கள். இது கர்நாடகத்தின் சுயமரியாதையை காக்க நடைபெறும் தேர்தல். மேகதாது திட்டத்திற்கு இந்த பா.ஜனதா அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது. இந்த திட்டத்திற்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அனைத்து அனுமதிகளையும் பெற்று கொடுத்திருக்க வேண்டும். அந்த வேலையை அவர் செய்யவில்லை.

    மகதாயி திட்ட பணிகளை இன்னும் தொடங்காமல் இருப்பது ஏன்?. மத்திய அரசுக்கு கர்நாடகம் தான் வருவாய் கொடுத்து உதவுகிறது. காங்கிரஸ் கட்சி 141 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களின் இலக்கு. அந்த இலக்கை நாங்கள் உறுதியாக எட்டுவோம். வருகிற 13-ந் தேதி நீங்கள் தேர்தல் முடிவை பாருங்கள். வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் ஆட்சி அமைப்போம். பா.ஜனதா குறித்து அவதூறாக வெளியான விளம்பரத்திற்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டிசு அனுப்பியது.

    அந்த நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளேன். இங்குள்ள பா.ஜனதாவினர் சரியான முறையில் ஆட்சி நடத்த முடியாமல், பாவம் பிரதமர் மோடியை வீதி வீதியாக அலைய விட்டனர்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    ×