என் மலர்tooltip icon

    சத்தீஸ்கர்

    • தேர்தல்களின்போது மக்களோடு தொடர்பு இல்லாத பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன.
    • காங்கிரசிடமிருந்து பெரும்பாலான எதிர்பார்ப்பு இருக்கிறது.

    ராய்ப்பூர் :

    சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் நடந்த 3 நாள் காங்கிரஸ் மாநாட்டின் இறுதி நாளான நேற்று, அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தையும் குறிவைத்து கவுதம் அதானி நாட்டுக்கு எதிராக செயல்படுகிறார். அதானிக்கும் பிரதமருக்கும் உள்ள தொடர்பு குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, ஒட்டுமொத்த பேச்சும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவருகிறவரையில், நாங்கள் நாடாளுமன்றத்தில் ஆயிரமாயிரம் முறை கேள்விகள் எழுப்புவோம். ஓய்ந்து விட மாட்டோம்.

    அதானியின் நிறுவனம், நாட்டைக் காயப்படுத்துகிறது என்று அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் பறித்துக்கொண்டிருக்கிறது.

    நாட்டின் அனைத்து வளங்களையும், துறைமுகங்களையும் ஒரே நிறுவனம் எடுத்துக்கொண்டு விட்டதை எதிர்த்து நாட்டின் சுதந்திரப்போராட்டம் நடைபெறுகிறது. வரலாறு திரும்புகிறது.

    பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பும்.

    இந்திய ஒற்றுமை யாத்திரை மூலம் பெற்ற சக்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சி ஒரு புதிய திட்டம் வகுக்க வேண்டும். அதில் ஒட்டுமொத்த நாட்டுடன் நானும் பங்கேற்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், இந்த மாநாட்டில் பேசினார். அவர் கூறியதாவது:-

    நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுதான் உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும் என்று (எதிர்க்கட்சிகளிடம்) நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.

    எல்லா எதிர்க்கட்சிகளும், பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்களும் கண்டிப்பாக ஒன்றிணைந்து போராட வேண்டும். ஒவ்வொருவரிடம் இருந்தும் எதிர்பார்ப்பு இருக்கிறது. காங்கிரசிடமிருந்து பெரும்பாலான எதிர்பார்ப்பு இருக்கிறது.

    கட்சிக்காக போராடுகிற காங்கிரஸ் தொண்டர்களைப் பாராட்டுகிறேன்.

    பா.ஜ.க.வை எதிர்த்து நின்று போராடுகிற துணிச்சல் உங்களுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அந்த தைரியத்தை நாட்டுக்காக வெளிக்காட்ட வேண்டிய தருணம் வந்திருக்கிறது.

    மண்டல அளவில் இருந்து காங்கிரஸ் அமைப்பினை கட்டமைத்து, பலப்படுத்த வேண்டும்.

    தேர்தல்களின்போது மக்களோடு தொடர்பு இல்லாத பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. வேலையில்லா திண்டாட்டத்தை எப்படி சமாளிப்பது, நாட்டின் பொருளாதாரத்தை எப்படி பலப்படுத்துவது என்பதில்தான் அரசியல் இருக்க வேண்டும்.

    நம் மீது பா.ஜ.க. அதிரடி சோதனைகளை நடத்தியது. ஆனால் நாம் வலிமையுடன் நிற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது.
    • கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது.

    ராய்பூர்:

    சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து 14-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் சந்தேகம் எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு தக்க பதில் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

    மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;

    "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து. கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது. நான் துவக்கத்தில் இருந்தே இதை வலியுறுத்தி வந்திருக்கிறேன். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றிருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது. அதன் செயல்திறன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது." இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    • பாரத் ஜோடோ யாத்திரையில் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
    • எனது நாட்டிற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி நான் நடைபயணம் மேற்கொண்டேன்.

    சத்தீஷ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி, கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் மாநாட்டின் இறுதி நாளான இன்று ராகுல்காந்தி பேசினார்.

    அப்போது அவர், " பாரத் ஜோடோ யாத்திரையில் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எனது நாட்டிற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி நான் நடைபயணம் மேற்கொண்டேன். யாத்திரையின் போது என்னுடனும், கட்சியுடனும் ஆயிரக்கணக்கானோர் இணைந்தனர். பாரத் ஜோடோ யாத்திரையின் போது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டேன்... அவர்களின் வலியை உணர்ந்தேன்" என்றார்.

    • சத்தீஷ்கர் ஆயுத படை போலீசார் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • தலைமை காவலர் சஞ்சய் லக்ரா, நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை மிதித்து விட்டார்.

    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் பதும் கிராமம் அருகே நக்சலைட்டுகள் பாதாள அறைகள் வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் சத்தீஷ்கர் ஆயுத படை போலீசார் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தலைமை காவலர் சஞ்சய் லக்ரா, நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை மிதித்து விட்டார். இதில் குண்டு வெடித்து அவர் உயிரிழந்தார்.

    நேற்று சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 போலீசார் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கட்சிக்காக துணிச்சலுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன் என்றார் பிரியங்கா காந்தி.
    • காங்கிரஸ் தொண்டர்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும்.

    காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பேசினார்.

    அப்போது அவர் பாரத ஒற்றுமை யாத்திரையுடன் எனது பணி நிறைவடைகிறது என்பதில் மிகவும் மன நிறைவாக உள்ளது என்று பேசினார். இதனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தகவல் பரவி உள்ளது.

    இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநாட் டின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பங்கேற்று காங்கிரஸ் பொதுச் செயலா ளர்களில் ஒருவரான பிரியங்கா பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று மக்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்கள். எல்லா எதிர்க்கட்சிகளும் ஒற்றிணைந்து பாரதீய ஜனதாவை எதிர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியிடம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். எனவே எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வரும் மிகப் பெரிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது.

    இந்த சூழ்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தவறுகளை காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் நாட்டு மக்களிடம் எடுத்து சென்று சொல்ல வேண்டும். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை பிரசாரம் செய்ய வேண்டும். இதற்கான பணிகளை காங்கிரஸ் தொண்டர்கள்தான் மேற்கொள்ள வேண்டும்.

    பாரதீய ஜனதாவை எதிர்த்து போராடும் தைரியமும், துணிச்சலும் காங்கிரஸ்காரர்களிடம் இருக்கிறது. கட்சிக்காக துணிச்சலுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன். உங்கள் வீரத்தை நாங்கள் அறிவோம்.

    உங்கள் துணிச்சலை நாட்டுக்காக வெளிப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. இதை சரியாக பயன்படுத்துங்கள்.

    காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் வலிமைப்பெற்று வருகிறது. மண்டல அளவிலும் உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே காங்கிரஸ் தொண்டர்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு பிரியங்கா பேசினார்.

    • சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    • தப்பி ஓடிய நக்சலைட்டுகளை போலீசார் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒழிக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இன்று காலை 9 மணி அளவில் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுக்மா மாவட்டம் ஜாகர்குண்டா மற்றும் குண்டேட் கிராமங்களில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் திருப்பி சுட்டார்கள். சிறிது நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ராமுராம் நாக், குஞ்சம் ஜோகா மற்றும் சைனிக் வஞ்சம் பீமா ஆகிய 3 போலீஸ்காரர்கள் இறந்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    தப்பி ஓடிய நக்சலைட்டுகளை போலீசார் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் இலக்கை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் அடைய வேண்டும்.
    • காங்கிரஸ் கட்சியின் தலைவராக தனது இன்னிங்ஸ் "பாரத் ஜோடோ யாத்ரா" மூலம் நிறைவடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் வரும் பாராளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, ராகுல்காந்தி, மூத்த தலைவர்கள், பிரியங்கா காந்தி, கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, "சிறுபான்மையினர், பெண்கள், தலித்கள் மற்றும் பழங்குடியினர் மீது பாஜக குறிவைத்து வெறுப்பு நெருப்பை தூண்டுகிறது" என்றார்.

    மேலும் அவர் பேசியதாவது:-

    தொழிலதிபர் கௌதம் அதானியின் வணிக சாம்ராஜ்யம் தொடர்பான சர்ச்சையில் தொழிலதிபருக்கு ஆதரவாக பாஜக அரசு பொருளாதார அழிவை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, அது அனைத்து மதங்கள், சாதிகள் மற்றும் மக்களின் குரலைப் பிரதிபலிக்கிறது. அவர்கள் அனைவரின் கனவுகளையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும். காங்கிரஸுக்கும் நாட்டிற்கும் இது மிகவும் சவாலான நேரம். பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

    சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரை பாஜக கடுமையாக குறிவைத்து வெறுப்பு நெருப்பை தூண்டுகிறது.

    அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்பில் பொதிந்துள்ள மதிப்புகளை அவமதிப்பதைக் காட்டுகிறது.

    2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் இலக்கை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் அடைய வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களை காந்தி வலியுறுத்துகிறேன்.

    பாஜக ஆட்சியை நாம் வீரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். மக்களிடம் நமது செய்தியை தெளிவுடன் தெரிவிக்க வேண்டும். நம் தனிப்பட்ட லட்சியங்களை ஒதுக்கி வைக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

    இன்றைய சூழ்நிலை நான் முதன்முதலில் பாராளுமன்றத்தில் நுழைந்த காலத்தை நினைவூட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக தனது இன்னிங்ஸ் "பாரத் ஜோடோ யாத்ரா" மூலம் நிறைவடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த மாநாடு 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • பல உறுப்பினர்கள், காரியக்கமிட்டி தேர்தலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

    ராய்ப்பூர் :

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் பிப்ரவரி 24-ந் தேதி (நேற்று) தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த மாநாட்டில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான உத்தி வகுக்கப்படும், கூட்டணி குறித்து இறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்த நிலையில், நவராய்ப்பூரில் உள்ள ராஜ்யோத்சவ் ஸ்தலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது.

    காங்கிரஸ் மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக, காரியக்கமிட்டிக்கு மாற்றாக கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவால் அமைக்கப்பட்ட வழிகாட்டும் குழுவின் கூட்டம் நடைபெற்றது.

    கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த வழிகாட்டும் குழு கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

    இந்தக் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, " காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் நீங்கள் அனைவரும் உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக எடுத்துக்கூறுவதுடன், கூட்டாக முடிவு எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் என்ன முடிவு செய்தாலும், அதுதான் என் முடிவு. அதுதான் ஒவ்வொருவரின் முடிவும் ஆகும்" என குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

    ஜனநாயகமும், அரசியல் சாசனமும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ள நிலையில், பாராளுமன்ற அமைப்புகள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலில், அரசியல் நடவடிக்கைகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிற நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.

    1885-ம் ஆண்டில் இருந்து (காங்கிரஸ் கட்சி தோன்றியதில் இருந்து) இதுவரை கட்சியின் 84 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதின் நூற்றாண்டில் இந்த மாநாடு நடைபெறுவது சிறப்பு ஆகும். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநாடுகளில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் பல எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில முடிவுகள் மைல்கள் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. இதை கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    காங்கிரஸ் காரியக்கமிட்டி தேர்தல்கள் குறித்து வழிகாட்டும் குழு சுதந்திரமாக விவாதித்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட கிட்டத்தட்ட 45 பேரும், காரியக்கமிட்டி உறுப்பினர்களை கட்சித்தலைவர் நியமிக்க ஒருமனதாக தீர்மானித்தார்கள்.

    பல உறுப்பினர்கள், காரியக்கமிட்டி தேர்தலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

    வழிகாட்டும் குழுவின் ஒருமித்த முடிவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் அனைவரும் ஆதரிப்பார்ககள் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.

    காங்கிரஸ் மாநாடு, கட்சியின் சாசனத்தில் 32 விதிகளில் 16 திருத்தங்களை கொண்டு வருவது பற்றி முடிவு செய்யும்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர்களுக்கும், கட்சியின் முன்னாள் தலைவர்களுக்கும் காங்கிரஸ் காரியக்கமிட்டியில் பிரதிநிதித்துவம் தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பிற்பகல் 2½ மணிக்கு ராய்ப்பூர் வந்தனர்.

    சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய அவர்களுக்கு மேளதாளத்துடன், பாரம்பரிய நடனங்களுடன் உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது.

    இதில் சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்க்கம், கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாநாட்டு நிகழ்ச்சிகளில் சோனியாவும், ராகுலும் கலந்து கொண்டனர்.

    • முதல் நாளான இன்று காலை மாநாடு தொடங்கியதும், காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    • இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் வழிகாட்டும் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

    அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தது. மேலும் டெல்லி உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, மூத்த தலைவர்கள் சிலர் கட்சியை விட்டு சென்றது என கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து வந்தது.

    இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் தேசிய நடைபயணம் கட்சிக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், இன்று தொடங்கி உள்ள இந்த மாநாட்டில் கட்சியின் பல்வேறு வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

    சிறப்பு விருந்தினர்களாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல், இமாச்சல பிரதேசம் முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    முதல் நாளான இன்று காலை மாநாடு தொடங்கியதும், காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பழைய காரிய கமிட்டி கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக வழிகாட்டும் குழு அமைக்கப்படுகிறது. பின்னர் அந்த குழுவின் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் காரிய கமிட்டிக்கு தேர்தல் நடத்துவதா? அல்லது நியமனம் முறையில் உறுப்பினர்களை நியமிக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் வழிகாட்டும் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

    நாளை (சனிக்கிழமை) அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்கள் குறித்தும், 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் மற்றும் இளைஞர்கள் நலன், வேலைவாய்ப்பு தொடர்பான தீர்மானங்களும், கல்வி குறித்த தீர்மானங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    26ம் தேதி மதியம் 2 மணிக்கு காங்கிரஸ் தலைவர் உரையும், அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

    இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கர்நாடகா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோராம், நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலஙகளில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களை சந்திப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

    மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும், காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

    முக்கியமாக பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி குறித்தும் விவாதிக்கப்படுகிறது. ஒத்தக்கருத்துடைய சில கட்சிகள் மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, சமாஜ் வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.

    3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் உள்பட 15 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழகத்தில் இருந்து மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 91 பேர் பங்கேற்றனர்.

    • 4 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்.
    • விபத்தில், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம், பலோடபஜார்- பட்டாபரா மாவட்டத்தில் உள்ள பாடாபரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கமாரியா கிராமம் அருகே டிரக் மீது பிக்-அப் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில், 4 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விபத்தில் சிக்கியவர்கள் சிம்கா பகுதியில் உள்ள கிலோரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அர்ஜூனி பகுதியில் ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    விபத்தில், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தீஷ்காரில் புதுமணத் தம்பதி, திருமண வரவேற்புக்கு முன்பாக வீட்டு அறையில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்துகிடந்தனர்.
    • மணமகளை குத்தி கொலை செய்துவிட்டு, மணமகன் கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கார் மாநிலம் பிரிஜ்நகரில் அஸ்லம் (வயது 24), ககாஷா பானு (வயது 22) ஆகிய இருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.

    அவர்களின் திருமண வரவேற்பு நேற்று முன்தினம் இரவு நடைபெறுவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்ற நிலையில், புதுமணத் தம்பதி தங்கள் வீட்டு அறையில் தயாராகிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த அறையில் இருந்து மணப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மணமகனின் தாய் ஓடிச்சென்றார். உள்புறம் தாழிடப்பட்டிருந்த அந்த அறைக்கதவை தட்டினார்.

    கதவு திறக்கப்படாததால் அவரும், மற்றவர்களும் அறை ஜன்னல் வழியே உள்ளே பார்த்தனர். அப்போது அறைக்குள் மணமகனும், மணமகளும் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மணமகனும், மணமகளும் உயிரிழந்திருந்தனர். அவர்களின் உடம்பில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

    புதுமண ஜோடியின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்து ஒரு கத்தியையும் கைப்பற்றினர்.

    ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பாக புதுமணத் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் மணமகளை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, மணமகன் தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிகிறது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

    • போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் ராஜேஷ்சிங்ராஜ்புத் மற்றும் அணில்குமார்சாம்ராட் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மராட்டிய மாநில எல்லையையொட்டி உள்ள போலீஸ் நிலைய முகாமுக்கு சென்று கொண்டு இருந்தனர்.அவர்கள் துப்பாக்கி எதுவும் எடுத்துசெல்லவில்லை.

    அப்போது நக்சலைட்டு கும்பல் போலீஸ்காரர்களை சுற்றி வளைத்தது.இதனால் போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . அவர்கள் சுதாரிப்பதற்குள் நக்சலைட்டுகள் 2 பேரையும் நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.இதில் சம்பவ இடத்திலேயே ஒரு போலீஸ்காரர் உயிர் இழந்தார்.மற்றொருவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார்.

    போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது. தப்பி ஓடிய நக்சலைட்டுகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×