என் மலர்
சத்தீஸ்கர்
- யாருடைய மதம் பற்றியும் பேச நான் இங்கு வரவில்லை. ஏழைகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன்.
- மதமும், அரசியலும் வெவ்வேறானவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை.
ராய்ப்பூர்:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்றார். சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து அவரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
யாருடைய மதம் பற்றியும் பேச நான் இங்கு வரவில்லை. ஏழைகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன்.
மதமும், அரசியலும் வெவ்வேறானவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, ராஜ்நந்தகோன் மாவட்டம் தேக்வா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுக்காக நாங்கள் 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்தோம். உடனே, நாட்டின் பெயர் 'பாரதம்' என்று மாற்றப்பட வேண்டும் என்று பா.ஜனதா சொல்கிறது.
இந்தியா, பாரதம் என்ற இரண்டுமே அரசியல் சட்டத்தில் இருக்கிறது. எனவே, ஏன் சர்ச்சையை உருவாக்க வேண்டும்?
பாரதம் என்ற வார்த்தையை காங்கிரஸ் வெறுப்பதாக பா.ஜனதா சொல்கிறது. நாங்கள் பாரதத்தை நேசிக்கிறோம்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தப்பட்ட ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு 'பாரத ஒற்றுமை பயணம்' என்றுதான் பெயர் சூட்டப்பட்டது.
நாங்கள் பாரதத்தை ஒன்றுபடுத்த பாடுபடுகிறோம். பா.ஜனதாவோ, நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது.
'இந்தியா' என்ற வார்த்தை மீது வெறுப்பு இருந்தால், ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்ட்அப் இந்தியா என்று திட்டங்களுக்கு பெயர் வைத்தது ஏன்?
இவ்வாறு அவர் பேசினார்.
- சரண் அடைந்த நக்சலைட்டுகளில் 3 பேர் பெண்கள்.
- பெரும்பாலானோர் நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மர்ஜூம் பகுதியில் வசிப்பவர்கள்.
புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள். இவர்கள் பல ஆண்டுகளாக நக்சல் அமைப்பில் செயல்பட்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மர்ஜூம் பகுதியில் வசிப்பவர்கள்.
காவல்துறை நடவடிக்கையால் இதுவரை மொத்தம் 639 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே தண்டேவாடாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது 6 நக்சலைட்டுகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருந்து வெடிபொருட்கள் மற்றும் ரூ.54 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடந்த 2 மாதங்களில் அமித்ஷா சத்தீஸ்கர் மாநிலத்தில் மேற்கொள்ளும் 4-வது சுற்றுப்பயணம் இதுவாகும்.
- காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நாளை சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வருகிறார்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
மத்திய மந்திரி அமித் ஷா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 2 நாட்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் பட்டியலை வெளியிடுகிறார். தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள சாரிபாலிக்கு பழங்குடியினர் சமூக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். கடந்த 2 மாதங்களில் அமித்ஷா சத்தீஸ்கர் மாநிலத்தில் மேற்கொள்ளும் 4-வது சுற்றுப்பயணம் இதுவாகும். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நாளை (சனிக்கிழமை) சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வருகிறார். கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் அவர் 'யுவ சம்வாத்' நிகழ்ச்சியில் இளம் வாக்காளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
- இருவரும் மாவட்டத்தின் பெஜ்னி பகுதியில் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
- மாநில அரசின் சரணடைதல் கொள்கையின்படி இருவருக்கும் மறுவாழ்வு அளிக்க முடிவு.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா என்ற பகுதயில், சட்டவிரோத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாத குழு உறுப்பினர் உள்பட இரண்டு நக்சலைட்டுகள் இன்று சரணடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சரணடைந்த தேவா மற்றும் எர்ரா ஆகிய இருவரும், "மனிதாபிமானமற்ற மற்றும் வெற்று மாவோயிஸ்ட் சித்தாந்தத்தால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், எனவே ஆயுதங்களைக் கீழே போட முடிவு செய்துள்ளதாகவும்" போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தேவா ஒரு போராளி படைப்பிரிவின் உறுப்பினராகவும், எர்ரா போராளிகளின் ஒரு பிரிவாகவும், சட்டவிரோதமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) கொரோஷேகுடா புரட்சிகர மக்கள் கவுன்சிலின் (ஆர்பிசி) விவசாயக் குழு உறுப்பினராகவும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் மாவட்டத்தின் பெஜ்னி பகுதியில் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.
இந்நிலையில், மாநில அரசின் சரணடைதல் கொள்கையின்படி தேவாவுக்கும், எர்ராவுக்கும் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று மேலும் கூறினர்.
- சத்தீஸ்கர் முதல் மந்திரியின் அரசியல் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
- அவரது வீட்டில் நடந்த சோதனையின்போது பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலத்தில், சுரங்க ஊழல், மதுபான ஊழல், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதிய முறைகேடு, ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் ஆகிய ஊழல்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2 நாளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர், துர்க் ஆகிய நகரங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வந்தது.
இதற்கிடையே, நேற்று முதல் மந்திரி பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா, பூபேஷ் பாகலின் சிறப்பு அதிகாரி ஆகியோரது ராய்ப்பூர் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
துர்க் நகரில் ஒரு தொழிலதிபரின் வீட்டிலும் சோதனை நடந்தது. வினோத் வர்மா வீட்டில் நடந்த சோதனையின்போது, பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
எந்த வழக்குக்காக இச்சோதனை நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடப்பதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல் மந்திரி பூபேஷ் பாகல் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா அவர்களே, எனது பிறந்தநாளில், என் அரசியல் ஆலோசகர் மற்றும் சிறப்பு அதிகாரி வீடுகளுக்கு அமலாக்கத் துறையை அனுப்பி எனக்கு விலைமதிப்பில்லாத பரிசு அளித்து இருக்கிறீர்கள்.
ராய்ப்பூரில் எங்கள் கட்சியின் தேசிய அமர்வு நடைபெற்ற போது அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தப்பட்டன. எனது பிறந்தநாளான இன்றும் சோதனை நடத்தப்படுகிறது. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை துணை கொண்டு பா.ஜ.க. தேர்தலில் போட்டியிடுகிறது. நிரந்தரமாக ஆட்சியில் இருப்போம் என்று பாஜக நினைக்கக் கூடாது. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இப்படியே குறிவைத்துக் கொண்டே இருந்தால் இந்த முறை 15 சீட் கூட கிடைக்காது என தெரிவித்தார்.
- நிருபர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.
- அந்த பாம்பை அடிக்க முயன்ற அதிகாரிகளை பூபேஷ்பாகல் தடுத்தார்.
ராய்ப்பூர்:
சத்தீஷ்கர் மாநிலத்தில் பூபேஷ்பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடை பெற்று வருகிறது.
சத்தீஷ்கர் முதல் மந்திரி பூபேஷ்பாகல் இன்று காலை நிருபர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தின் நடுவே பாம்பு புகுந்தது. இதனால் நிருபர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பாம்பை அடிக்க முயன்ற அதிகாரிகளை பூபேஷ்பாகல் தடுத்தார். அது விஷ பாம்பு அல்ல. ஒன்றும் செய்யாது விட்டு விடுங்கள் என்று கூறினார். அந்த பாம்பை வேறு பகுதிக்கு எடுத்து சென்று விடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். பாம்புகளை கொல்ல வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
நிருபர்கள் கூட்டத்தில் பாம்பு புகுந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியானது.
- சட்டீஸ்கர்ஹி மொழியில் அவர் உரையை தொடங்கி வரவேற்பை பெற்றார்
- மாநில அரசாங்கத்தின் எந்த வேலையிலும் சேரும் தகுதியை இழப்பார்கள்
இந்தியாவின் மத்திய பகுதியிலுள்ளது சட்டீஸ்கர் மாநிலம். இதன் தலைநகரம் ரய்பூர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பகேல், அம்மாநில முதல்வராக உள்ளார்.
இன்று இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரய்பூரிலுள்ள காவல்துறை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பூபேஷ் உரையாற்றினார்.
அம்மாநிலத்தில் சுமார் 1.6 கோடி மக்கள் பேசும் சட்டீஸ்கர்ஹி மொழியில் அவர் உரையை தொடங்கி வரவேற்பை பெற்றார். அப்போது அவர் பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, "பெண்களின் பாதுகாப்பு அதி முக்கியம் வாய்ந்தது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும். பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்கள் இனி மாநில அரசாங்கத்தின் எந்த வேலையிலும் சேரும் தகுதியை இழப்பார்கள்" என அறிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் நகரங்களில் இருந்து தொலைதூர பகுதியில் வாழும் மாணவர்களும் மாணவிகளும் இந்தியாவின் முக்கிய நுழைவுத்தேர்வுகளை எழுத தங்களை தயார்படுத்தி கொள்ளும் வகையில் ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், பள்ளி பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற மென்பொருள் துறையின் உயர் தொழில்நுட்பங்களுக்கான பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதுபோன்று பல திட்டங்களை பூபேஷ் பகேல் அறிவித்திருந்த போதும், பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்துபவர்களுக்கு அரசு வேலை இல்லை என அவர் கூறியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- காதலி எந்த விபரீத முடிவும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக அவரிடம் காதலன் பேச்சு கொடுத்துள்ளார்.
- காதல் ஜோடி மின் கோபுரத்தில் ஏறி சண்டை போட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் கோரேலா- பென்ட்ரா-மார்வாகி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து அப்பகுதியில் உள்ள 150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி உள்ளார். இதைப்பார்த்த அவரது காதலனும் மின் கோபுரத்தில் காதலியின் பின்னாலேயே ஏறி உள்ளார். தனது காதலி எந்த விபரீத முடிவும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
ஆனால் அது மேலும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு வைத்தும் இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதுபற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். போலீசார் அந்த ஜோடியை கீழே இறங்குமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து அரை மணிநேரத்துக்கு பிறகு இருவரும் மின் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே காதல் ஜோடி மின் கோபுரத்தில் ஏறி சண்டை போட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
- அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனரா என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
காரணம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகு அந்த இடத்தில் நக்சலைட்களின் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிந்தாகுஃபா மற்றும் கிஸ்டாரம் காவல் நிலைய எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகளின் கோட்டையான சோடேகெட்வால் கிராமத்தின் வனப்பகுதியில் நடந்த இந்த என்கவுண்டரில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- துர்பூர் கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
- ஆசிரியையின் இந்த உணர்வு பூர்வமான அர்ப்பணிப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.
ராய்ப்பூர்:
கிராமப்புற பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இன்றளவும் சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கல்வி கற்றுக்கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஆட்டோ டிரைவராக மாறி பஸ் வசதி இல்லாத கிராமங்களில் இருந்து குழந்தைகளை தினமும் பள்ளிக்கு இலவசமாக அழைத்து வருகிறார். இதற்காக அவர் காலையிலேயே பள்ளிக்கு வந்து எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இந்த சேவையை செய்து வருகிறார். பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் இக்காலத்தில் இப்படி ஒரு ஆசிரியரா?என எல்லோரையும் திரும்பி பார்க்கவைக்கும் இவருக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.
இவரை போலவே வடமாநிலத்தில் ஒரு ஆசிரியை தினமும் 2 ஆறுகளை கடந்து சென்று மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கிறார் ,அவரது பெயர் சர்மிளா தோப்போ. சத்தீஸ்கர் மாநிலம் துர்பூர் கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த பள்ளி வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் இந்த பள்ளிக்கு வராமல் பணி மாறுதல் வாங்கி கொண்டு சென்று விடுவார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக சர்மிளா தோப்போ இதை ஒரு சவாலாக ஏற்று பணியில் சேர்ந்தார்.
பள்ளியில் இருந்து அவரது வீடு சிறிது தூரம் உள்ளது. ஆனால் அவரால் வாகனத்திலோ, சைக்கிளிலோ பள்ளிக்கு செல்ல சாலை வசதிகள் எதுவும் இல்லை.
இதனால் தினமும் தனது ஊருக்கும், பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஓடும் 2 ஆறுகளை கடந்து தான் அவர் பள்ளிக்கு சென்று வருகிறார். அடர்ந்த காட்டுப் பகுதியில் பாறைகளுக்கு இடையே முட்டளவு ஓடும் தண்ணீரில் அவர் கஷ்டப்பட்டு நடந்து செல்கிறார். தோளில் கைப்பையை தொங்க விட்டுக்கொண்டு அவர் இந்த 2 ஆறுகளை கடந்து தான் பள்ளிக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த சிரமங்களை எல்லாம் பொறுத்துக்கொள்வதாக ஆசிரியை சர்மிளா தோப்போ பெருமையுடன் கூறினார். ஆசிரியையின் இந்த உணர்வு பூர்வமான அர்ப்பணிப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.
அந்த மாவட்ட கலெக்டர் அவரை வெகுவாக பாராட்டி உள்ளார். நிச்சயமாக சர்மிளா தனது பணியை நேர்மையாக செய்கிறார், இவரை போலவே மற்ற ஆசிரியர்களும் விசுவாசமாக பணியாற்றி சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும் என கூறி உள்ளார்.
- நள்ளிரவு 1 மணிக்கு பிறகு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- பா.ஜனதா கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் பூபேஷ்பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியில் ஊழல் நடைபெறுவதாகவும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும் கூறி காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜனதா நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.
மாநில சட்டசபையில் பா.ஜனதா கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 13 மணி நேரம் நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு பிறகு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பா.ஜனதா கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றது.
90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 71 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதாவுக்கு 13 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
- ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் பள்ளி, சுகாதாரம், கல்வி உள்ளிட்டவை சிறப்பாக உள்ளன.
- டெல்லியில் அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது என்றார் கெஜ்ரிவால்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் சட்டசபைக்கு வரும் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
காய்கறிகள், பால், தானியங்களின் என அனைத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏன் உயருகிறது என்று எப்போதாவது நினைத்திரீகளா? இந்த பொருட்கள் மீது மோடி அதிக அளவில் வரிவிதித்துள்ளார்.
இது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதிக அளவில் விதிக்கப்பட்ட வரி விதிப்பு. டீ, காபி, எண்ணெய் போன்றவற்றையும் மோடி விட்டுவைக்கவில்லை. அதற்கும் அதிக அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷார் 250 ஆண்டுகள் கொள்ளையடித்ததை விட கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு அதிகம் கொள்ளையடித்துவிட்டது. கடந்த 75 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட இந்த அளவிற்கு கொள்ளையடிக்கவில்லை.
முதல் மந்திரி பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்திற்கு 24 மணி நேர மின்சாரம் வழங்கி வருகிறார். ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் பள்ளி, சுகாதாரம், கல்வி உள்ளிட்டவை சிறப்பாக உள்ளன.
டெல்லியில் அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேர்மையான முறையில் அரசியல் செய்யும் கட்சி ஆம் ஆத்மி மட்டும் தான் என தெரிவித்தார்.






