search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் போக்சோ சட்டம்
    X
    சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் போக்சோ சட்டம்

    சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் போக்சோ சட்டம்

    நிர்பயா வழக்கிற்கு பிறகு சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு எதிராக தண்டனை கடுமையாக்கப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் முழுக்க முழுக்க சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    கோவை மூத்த வக்கீலும், அரசு சிறப்பு வக்கீலுமான சங்கரநாராயணன் கூறியதாவது:-

    கற்பழிப்பு குற்றங்களுக்கு ஏற்கனவே இந்திய தண்டனை சட்டம் 376-ன்படி அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதில் தற்போது பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் தன்னை கற்பழிப்பு செய்து விட்டதாக புகார் செய்தால் அதற்கு ஆதாரங்களை கோர்ட்டு கேட்பதில்லை. பாதிக்கப்பட்ட பெண் புகார் மட்டுமே போதுமானது.

    இதுதவிர மருத்துவ சான்றிதழில் கூட கற்பழிப்பு நிரூபணமாகாத பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறினால் அதை கற்பழிப்பு வழக்காக பதிவு செய்ய வேண்டும்.

    3 பிரிவுகள்

    இந்த நிலையில் தான் நிர்பயா வழக்கிற்கு பிறகு சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு எதிராக தண்டனை கடுமையாக்கப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் முழுக்க முழுக்க சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிறுமிகளுக்கு மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கும் பொருந்தும். போக்சோ சட்டத்தில் பாலியல் பலாத்கார குற்றங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஒன்று பாலியல் பலாத்கார தாக்குதல்(செக்சுல் அசால்ட்). இதில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் செயல்பட்டாலே போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும். இதில் பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த நோக்கத்தில் செயல்பட்டாலே அது தண்டனைக்குரிய குற்றம். இதற்கு குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    2-வதாக பாலியல் பலாத்காரம் செய்தல். இதன்படி சிறுமிகளின் உடல் பாகங்களை கைகளால் மட்டுமல்ல. வேறு பொருளால் உதாரணத்துக்கு பேனாவால் தொட்டாலே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தான் அர்த்தம். இதற்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

    மோசமான பாலியல் பலாத்காரம்

    3-வதாக மிக மோசமான பாலியல் பலாத்காரம் செய்தல். அதன்படி பாதுகாப்பு அளிக்க வேண்டியவர்களே குற்றங்களில் ஈடுபடுவது. அதாவது போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தல், அரசு அலுவலகங்களில் கோரிக்கைக்காக வரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தல். சிறை, பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, பாதுகாக்க வேண்டிய ரத்த உறவு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், வளர்ப்பு தந்தை, உறவினர்கள், நண்பர்கள், கொலை மிரட்டல் விடுத்து பாலியல் பலாத்காரம் செய்தல், பலாத்காரம் செய்யும்போது சிறுமிக்கு காயம் ஏற்படுத்துதல் அல்லது அந்த சிறுமி இறந்துபோதல், கூட்டு பாலியல் பலாத்காரம்.

    பாலியல் பலாத்காரம் செய்து அதன் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுதல். 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தல் மற்றும் அதன் மூலம் கர்ப்பம் அடைதல், கலவரத்தின்போது பாலியல் பலாத்காரம் செய்தல், என்பன உள்பட 21 வகையான சூழலில் பாலியல் பலாத்காரம் செய்தால் அது மோசமான பாலியல் பலாத்காரம் என்று கூறப்படுகிறது. இதற்கு தண்டனை குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.

    மோசமான பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படும் நபர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது. அது விரைவில் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

    மூத்த வக்கீல் சங்கரநாராயணன்
    Next Story
    ×