search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    படிக்கும் பெண் பிள்ளைகளின் மனநிலை
    X
    படிக்கும் பெண் பிள்ளைகளின் மனநிலை

    படிக்கும் பெண் பிள்ளைகளின் மனநிலை

    தாய்மார்களே பள்ளி மாணவிகளான உங்கள் மகள்களின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ளுங்கள். அவர்களுடன் தினமும் சிறிது நேரம் மனவிட்டு பேசுங்கள்.
    வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்த அந்த சிறுமி, பிரபலமான பள்ளிக்கூடம் ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளது மூத்த சகோதரி வெளிநாட்டில் படிக்கிறாள். பெற்றோர் தொழிலதிபர்கள். பள்ளி மாணவியான அவள் கனமான உடல்வாகு கொண்டவள். வயதை மீறிய உடல்வளர்ச்சியுடன் தோன்றியதால், அவள் உடலை கட்டுக்கோப்பாக மாற்றுவதற்காக ‘ஜிம்’ ஒன்றிற்கு உடற்பயிற்சிக்காக அனுப்பினார்கள். அவளும் ஆர்வமாக சென்றுகொண்டிருந்தாள்.

    பயிற்சிக்கு பின்பு உடல் எடை குறைய ஆரம்பித்தது. அது அவளுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது. அதன் பிறகு அவள் பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப்போட்டிகளில் பங்குபெறத் தொடங்கினாள். கலைநிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றாள். மகளிடம் ஏற்பட்ட மாற்றங்களால் பெற்றோர்கள் மகிழ்ந்தார்கள்.

    அவளது வீட்டில் உணவு விஷயத்தில் மிகுந்த ஆரோக்கிய முறைகளை கடைப்பிடிப்பார்கள். அவர்கள் நகரத்தில் வசித்தாலும், சற்று தூரத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சில ஏக்கர் நிலத்தை வாங்கி, ஆட்களை ஏற்பாடு செய்து அதில் இயற்கை விவசாயம் செய்தார்கள். அங்கு விளையும் உணவுப் பொருட்களைதான் தங்கள் வீட்டின் தேவைக்கும் பயன்படுத்திக்கொள்வார்கள்.

    தாயார், மகளிடம் உணவு விஷயத்தில் மிகுந்த கண்டிப்பு காட்டினார். தோழிகளோடு சேர்ந்து வெளியே சென்று சாப்பிட அவளை அனுமதிப்பதில்லை. எந்த உணவு தேவை என்றாலும் உடனே வீட்டில் அதை சமைத்து வழங்க ஏற்பாடு செய்துவிடுவார். ஆனால் அவளோ தன் தோழிகள் சிலரை போன்று கண்டதையும் வாங்கி சாப்பிடவிரும்பினாள். தாயார் தன்னை அதற்கு அனுமதிக்காதது அவளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த நிலையில் இரண்டு மூன்று மாதங்களில் திடீரென்று மீண்டும் அவள் உடல் குண்டாகத் தொடங்கியது. தாயாருக்கு அதற்கான காரணம் புரியவில்லை. வீட்டில் சமையல் செய்யும் பெண்ணிடம் விசாரித்தபோது ‘அவள் இப்போதெல்லாம் விதவிதமான உணவுகளை தயாரித்து கேட்பதாகவும், பெரும்பாலான நேரம் வீட்டில் தனிமையில் இருந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பதாகவும்’ சொன்னாள்.

    அதை கண்காணித்த தாயார், மகள் சாப்பிடும் உணவுகளின் அளவைப் பார்த்து பிரமித்து போனார். அவளது இயல்பான உணவுப் பழக்கம் அது இல்லை என்பதால், மகளின் சுபாவத்தில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை அவர் உணர்ந்தார்.

    இந்த நிலையில் பள்ளிக்கூடத்தில் அவளது தமிழாசிரியையிடமிருந்து, தாயாருக்கு தனிப்பட்ட முறையில் அழைப்புவந்தது. ‘உங்கள் மகள் விஷயமாக பேசவேண்டும். பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் தனியாக வந்து என்னை சந்தியுங்கள்’ என்றார்.

    கலக்கத்தோடு சென்ற தாயார் தமிழாசிரியையை சந்திக்க, அவர் ‘உங்கள் மகள் வகுப்பில் பெஞ்சின் கீழே அமர்ந்து ஒளிந்திருந்து அழுதுகொண்டிருந்திருக்கிறாள். அதை பார்த்து பயந்துபோன தோழிகள் என்னிடம் வந்து சொன்னார்கள். நான் அவளை அழைத்து பேசிப்பார்த்தேன். என்னிடமும் அழத்தான் செய்கிறாள். உண்மையை சொல்ல மறுக்கிறாள். அவள் விஷயத்தில் ஏதோ ஒரு தப்பு நடந்துகொண்டிருக்கிறது. அது என்னவென்று உடனடியாக கண்டுபிடியுங்கள்’ என்றார்.

    தாயார் அதிர்ந்துபோய் நடந்ததை கணவரிடம் கூற, இருவரும் சேர்ந்து காரணத்தை கண்டறிய வலைவிரித்தார்கள். அந்த வலையில், பள்ளிக்கு அருகில் ரோட்டில்வைத்து மாங்காய்களை கீறிவிற்கும் நடுத்தர வயது நபரும், அதில் இருந்து சற்று தூரத்தில் காரில் உட்கார்ந்திருந்த இளைஞரும் சிக்கினார்கள்.

    அந்த நபர் மாங்காயில் மிளகாய்த்தூள் கலந்து விற்பதை வாங்கி சாப்பிட அவள் ரொம்ப ஆசைப்பட்டிருக்கிறாள். ஆனால் ரோட்டில்வைத்து சாப்பிட்டால், அதை யாராவது பார்த்து தனது பெற்றோரிடம் சொல்லிவிடுவார்களோ என்று பயந்திருக்கிறாள். அவளது பயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மாங்காய் வியாபாரி, அங்கே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் உட்கார்ந்து சாப்பிடும்படி வற்புறுத்தியிருக்கிறார். காரில் சன்பிலிம் ஒட்டப்பட்டிருந்தது. பக்கத்து அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் இளைஞன்தான் அந்த காரின் உரிமையாளன். ‘பயப்படாமல் காரில் உட்கார்ந்து சாப்பிடு’ என்ற அவன், தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காரோடு அங்கு காத்திருந்து, அவள் மாங்காய் சாப்பிட உதவி செய்து அவளோடு நட்பை வலுப்படுத்தியிருக்கிறான். பின்பு மிரட்டி காருக்குள்வைத்து பாலியல் தொந்தரவு செய்திருக்கிறான்.

    அதில் இருந்து தப்பும் வழி அவளுக்கு தெரியவில்லை. தனக்கு ஏற்பட்ட பாதிப்பை அவளால் வெளியே சொல்லவும் முடியவில்லை. அதனால் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளாள். அந்த மனஅழுத்தமே அவள் அளவுக்கு அதிகமாக உணவு உண்ணவும், வகுப்பறையில் அழவும் காரணமாக இருந்திருக்கிறது.

    இப்போது அந்த குற்றவாளிகள் இருவரும் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

    தாய்மார்களே பள்ளி மாணவிகளான உங்கள் மகள்களின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ளுங்கள்!

    Next Story
    ×