search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களின் பாதுகாப்பு
    X
    பெண்களின் பாதுகாப்பு

    பெண்களுக்கான எல்லைக் கோடு

    ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும்தானா? இன்று நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்களைப் பார்க்கையில் ஆண் பெண் இருபாலருக்கும் அது தேவை என்று புரிகிறது.
    “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்கிறது குறள். உயிரை விட உயர்வானது ஒழுக்கம் என்கிறது. அந்த ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும்தானா? இன்று நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்களைப் பார்க்கையில் ஆண் பெண் இருபாலருக்கும் அது தேவை என்று புரிகிறது. அதை கற்றுக் கொடுக்க தகுதியானவர்கள் பெற்றோர்களே. பெண்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகள் அளவுக்கு ஆண் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கப்படுவதில்லை. ஒரு ஆண் தன்னைப் போலவே பெண்ணும் ஒரு உயிர் உடல் தன்னைப் போலவே சகல உரிமையுடன் வாழும் உரிமை அவளுக்கும் உண்டு என்று உணர வேண்டும். அதை அவனுக்கு உணர்த்த வைக்கும் கடமை பெற்றோர்களுக்கே உண்டு.

    இன்றைய சமுதாய சூழலில் பெண் பொருளாதார வசதிக்காக படித்து வேலை என்று வெளியில் வரும்போது பல ஆண்களுடன் பழக வேண்டிய அவசியம் அவளுக்கு நேருகிறது. என்றாலும் அதிலும் அவள் ஒரு எல்லைக் கோட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும். எந்த நேரமும் யாரோ ஒருவர் அவளுக்கு துணைக்கு வந்து கொண்டிருக்க முடியாது.

    எத்தனை பேர் வந்தாலும் அவளுக்கு அவள்தான் துணை. எல்லோருடனும் பழகு. யாரையும் நம்பாதே என்பதே அவளுக்கான மந்திரம். அவளின் இளமை வயசில் குதூகலமும் சந்தோஷமுமாகப் பேச பழக அவள் வயதொத்த ஒரு துணையை மனம் தேடும்போது சட்டென்று அதே குணங்களுடன் அறிமுகம் ஆகும் இளைஞன் அவளுக்கு பிடித்தமாகிப் போகிறான். இன்றைய சூழலில் உண்மையான காதல் என்று எதுவும் இல்லை. ஒரு வடிகால். அவ்வளவே.

    வீட்டில் பெற்றோர்களின் சண்டை பொறுப்பில்லாத்தனம் அதிகப் படியான கண்டிப்பு அல்லது அதிக சுதந்திரம் வறுமை ஏழ்மை என்று இவையெல்லாம் காதல் என்று தடை மீறிப் போக காரணம். நான் படித்தவள் அதீத நாகரிகம் தெரிந்தவள் ஆணும் பெண்ணும் கலந்து பழகுவது சகஜம் என்று கூறும் பெண்களே ஒன்றை நினைத்துப் பாருங்கள். ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் அழிவது நீங்கள் மட்டுமல்ல உங்கள் பெற்றோரின் மானம் மரியாதை கவுரவமும்தான். நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கிறோம் என்று பெற்றவர்களை தலை குனிய வைத்து விடாதீர்கள்.

    உங்கள் முன் இரண்டு பாதை இருக்கிறது. ஒன்று அழகான நேர்மையும் ஒழுக்கமுமான மதிப்பும் மரியாதையுமான தரமான வாழ்க்கை. மற்றது தீயில் வீழ்ந்து கருகி ஒழுக்கம் கெட்டு அவமானகரமான வாழ்க்கை. எதைத் தேர்ந்தெடுப்பது என்ற அறிவு நம்மிடம் உள்ளது. காலம் காலமாக பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் வகுத்தது யார்? சமூகம் வகுத்த பண்புகளே பெண்ணுக்கு பாதுகாப்பு. அதை மீறினால் அவளுக்கு ஆபத்து துயரம் என்று செல்லரித்துப் போன வாதமே ஒவ்வொரு பாலியல் வன்முறை சம்பவத்தின் போதும் அவள் முன் வைக்கப்படுகிறது. பெண் விண்வெளிக்குப் போகும் இந்தக் காலத்திலும் அவள் ஒரு உடலாகவே பார்க்கப்படுகிறாள். ஒவ்வொரு நிலையிலும் அவள் மீது வார்த்தைகள் செயல்கள் என்று பிரயோகிக்கப்படும் பாலியல் வன்முறைகளைத் தாண்டிதான் அவள் சாதிக்க வேண்டியிருக்கிறது. அப்படியே சாதித்தால் அது அவள் திறமையினால் அல்ல என்ற சேரும் சிலரால் அவள் மேல் வீசப்படுகிறது.

    ஒரு குழந்தையைப் பெற்று நல்ல பண்புகளை கற்றுத் தந்து சமூகத்தில் சான்றோன் ஆக்குவது பெற்றோர்களின் கடமை. அதில் தவறும்போதுதான் சீர்கேடு அடைகிறது. ஒரு ஆண் வாழ்வின் மேன்மைக்கான அனைத்திற்கும் ஆதாரம் பெண்ணே. அவனது வளர்ச்சி வாழ்வியல் நெறிகள் கல்வி பொறுப்புகள் எல்லாமே ஆரம்பத்தில் தாயினாலேயே கற்றுத் தரப்படுகின்றன ஆண் பெண்களுக்கு உரிய ஏழு பருவங்களில் கவனமாக இருக்க வேண்டியது பெண்ணின் மங்கைப் பருவம்(11-15 வயது) வரை ஆணின் விடலைப் பருவம்(16 வயது) வரை அவர்களை கவனமுடன் வளர்த்தால் அதன் பிறகு வரும் காலங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் பிறரை மதிக்கும் குணமும் தானாக வளர்ந்து விடும். அதுவரை பெற்றோர்களின் கவனம் அவர்களின் மேல் இருக்க வேண்டும்.

    பெற்றோர்களே காசு சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் குழந்தைகளின் மேல் கவனம் செலுத்துங்கள். அவர்களுடன் நேஇரத்தைச் செலவிடுங்கள். அவர்கள் கூறும் விஷயங்களுக்கு செவி கொடுங்கள். அவர்களின் சந்தோஷம் துக்கம் பயம் வேதனை என்று எல்லா உணர்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுங்கள்.

    இறுக்கமான மன நிலையிலிருந்து விடுபடவே அவர்கள் செல்போன் நண்பர்கள் என்று நேஇரத்தைக் கழிக்கிறார்கள். இன்று விஞ்ஞான வளர்ச்சி அதிகரித்துவிட்ட நிலை. அவசர உலகம். செல்போன் விரல் நுனியில் எல்லாவற்றையும் கொண்டு வருகிறது. நல்லது எது கேட்டது எது என்று பிரிக்க கற்றுக்கொடுங்கள். ஆண் குழந்தைகளுக்கு பெண்ணை மதிக்கவும் அவளும் உன்னைப் போல் ஒரு உயிர் என்றும் சொல்லி வளருங்கள். ஒரு முறை உன் பெயர் கெட்டுவிட்டால் பிறகு உன் வாழ்வே அஸ்தமித்து விடும் என்று உணர்த்துங்கள்.

    பெண் பருவம் அடைந்தவுடன் தாயார் அவளுக்கு போதிக்கிறாள். அதேபோல் ஆணின் உடலிலும் மாற்றங்கள் இருக்கிறது. தந்தை அதை கவனித்து வழி நடத்துங்கள். எந்த ஒரு பெண்ணுக்கும் உன்னால தீங்கு வரக்கூடாது என்று ஆண்களுக்கும் தைரியத்துடன் நிமிர்ந்து நில் என்று பெண் குழந்தைகளுக்கும் சொல்லி வளருங்கள் பெற்றோர்களே. துணிவு தைரியம் நாகரிகம் என்று இருப்பது தவறு இல்லை. அது எல்லை மீறக்கூடாது. பெற்றோர்களுக்குத் தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது. எது நடந்தாலும் பெற்றோர்களிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை முதலில் உங்கள் குழந்தைகள் மனதில் விதையுங்கள். ஆண் குழந்தைகள் நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டாலே பாதிக் குற்றங்கள் மறைந்து விடும். அழித்துக் கொள்வதற்காக இந்த வாழ்க்கை இல்லை. அழகாக நிம்மதியாக மன நிறைவுடன் வாழ்வதற்காக. பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கும் இதைச் சொல்லிக் கொடுத்து வாழ்வை வாழப் பழக்குங்கள்.

    ஜி.ஏ. பிரபா எழுத்தாளர்
    கோபிசெட்டிப்பாளையம்.
    Next Story
    ×