search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டில் இருப்போம்; பாதுகாப்பாக இருப்போம்
    X
    வீட்டில் இருப்போம்; பாதுகாப்பாக இருப்போம்

    வீட்டில் இருப்போம்... பாதுகாப்பாக இருப்போம்...

    மக்கள் நினைப்பதுபோல, கொரோனா சாதாரண நோய் அல்ல. கொடிய நோய். இது, வேகமாகப் பரவும் ஆபத்தைக்கொண்டது. இதற்கு ஒரே தீர்வு சமூக விலகல்தான். அதாவது மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து விலகி நிற்கவேண்டிய கட்டாயமாகும்.
    உலகம் முழுவதும் இப்போது எல்லா பிரச்சினைகளையும் பின்னே தள்ளிவிட்டு, கண்முன்னால் கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது, கொள்ளை நோய் கொரோனா. முதலில் சீனாவில் மட்டும் பரவத்தொடங்கிய இந்த நோய், இப்போது 169 நாடுகளில் வேகமாகப் பரவிவிட்டது. உலகம் முழுவதும் 4 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர்.

    இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் மதுரையைச் சேர்ந்த 54 வயதுள்ள ஒருவர் உயிரிழந்ததன் மூலம் நமது மாநிலத்திலும் கொரோனாவின் பலிக்கணக்கு தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், கொரோனா வந்தால் உயிரிழப்புதான் ஏற்படும் என்று பயப்படவேண்டியது இல்லை. அனைத்து நாடுகளிலும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். தகுந்த முன்னெச்சரிக்கையோடு இருந்தால் கொரோனாவின் பாதிப்பில் இருந்து தப்பிவிடமுடியும். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியதுபோல, கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, எல்லோருடைய உயிரையும் காப்பாற்றுவதில் மிகவும் அக்கறையோடு ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்தியா முழுவதிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். மக்கள் நினைப்பதுபோல, கொரோனா சாதாரண நோய் அல்ல. மனிதகுலத்திற்கே பேரழிவை ஏற்படுத்தும் கொடிய நோய். இது, வேகமாகப் பரவும் ஆபத்தைக்கொண்டது. இதற்கு ஒரே தீர்வு சமூக விலகல்தான். அதாவது மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து விலகி நிற்கவேண்டிய கட்டாயமாகும்.

    அடுத்த 21 நாட்களுக்கு கடைப்பிடிக்க இருக்கும் ஊரடங்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கைவிட மிகக்கடுமையாக கடைப்பிடிக்கப்படும். இந்த நாட்களில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. வெளியே வந்தால் வீட்டுக்குள் கொரோனா நுழைந்துவிடும். வீட்டுக்குள் உறவினர்களையோ, வெளியாட்களையோ அனுமதிக்கவேண்டாம். சுயகட்டுப்பாட்டுடன் வீட்டிலேயே இருந்தால் வைரசின் பாதிப்பை பெருமளவில் குறைத்துவிடலாம். இல்லையென்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் உயிரை நாம் இழக்கவேண்டியது இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த 21 நாட்களும் மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. ஆனால், அத்தியாவசிய பணிக்கான அலுவலகங்கள் இயங்கும். அதுபோல இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய பொருட்கள் எதற்கும் தட்டுப்பாடு இருக்காது.

    ரேஷன் கடைகள் உள்பட உணவுப்பொருட்கள், மளிகைப்பொருட்கள், பழம், காய்கறிகள், பால் பொருட்கள் விற்கும் கடைகள், பால் பூத்துகள், மருந்துக் கடைகள், இறைச்சி, மீன் கடைகள், வங்கிகள், ஏ.டி.எம்.கள் திறந்து இருக்கும். பத்திரிகைகள், டெலிவிஷன், எப்.எம். போன்ற அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் பீதியடைய வேண்டாம், அதேநேரத்தில் பிரதமர் கூறியபடி, நம் வீட்டு முன்னால் ஒரு லட்சுமண கோடு போட்டுவிட்டு, அதைத்தாண்டி நான் செல்லமாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.

    இந்த 21 நாட்களையும் விடுமுறை நாட்களாக யாரும் கருதிவிடக்கூடாது. நம் உயிரை காப்பாற்றிக்கொள்ள மத்திய அரசாங்கம் அளித்திருக்கும் ஒரு தற்காப்பு கவசம் என்று நினைத்து செயல்படவேண்டும். பத்திரிகை, டெலிவிஷன் போன்றவற்றுக்கு கட்டுப்பாடு இல்லை என்பதால், வீட்டில் இருந்தாலும் பயனுள்ள வகையில் கொரோனாவை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளமுடியும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டதே என்று ஒரு பதற்ற உணர்வோடு மக்கள் எதிர்கொள்ளவேண்டாம். குழப்பத்திற்கும் உள்ளாகவேண்டாம். பிரதமரின் ஒரே நோக்கம், சீனா, இத்தாலி போன்ற நாடுகளைப்போல, கொரோனா வைரஸ் வேகமாக பரவிவிடக்கூடாது என்பதுதான். தயவு செய்து வெளியே வராதீங்க என்று பிரதமரின் வேண்டுகோளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு தாரக மந்திரமாக எடுத்துக்கொண்டு, அத்தியாவசிய பணிகளைத்தவிர, எதற்கும் வெளியேவராமல் வீட்டிலேயே இருப்போம், கொரோனா பாதிப்பில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வோம்.
    Next Story
    ×