search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வலைத்தளத்தில் உண்மையை கண்டறிய பத்து வழிகள்...
    X
    வலைத்தளத்தில் உண்மையை கண்டறிய பத்து வழிகள்...

    வலைத்தளத்தில் உண்மையை கண்டறிய பத்து வழிகள்...

    தவறான செய்திகளின் பரிமாற்றத்தை தடை செய்வது இயலாத காரியம். இத்தகைய சூழலில், சரியான செய்திகள் எது என கண்டறிய இந்த பத்து விஷயங்களையும் மனதில் கொள்ளுங்கள்.
    “எல்லா விசைக்கும் சமமான எதிர் வினை உண்டு” என்ற நியூட்டனின் விதி இந்த டிஜிடல் உலகில் கிழிந்து தொங்குகிறது. எல்லா விசைக்கும் பத்து மடங்கு வேகமான எதிர்வினை உலவுகின்ற இணைய உலகம் இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது.

    நதியில் எறிகின்ற வலை மீன்களையும், குப்பைகளையும், அழுக்குகளையும் ஒரு சேர அள்ளி வருவதைப் போல, இணைய வலையும் அள்ளிக் கொண்டுவந்து கொட்டுகிறது. இவற்றில் எது நல்லது, எது சரியானது, எது விலக்கப்பட வேண்டியது என்பதை கண்டறிவதற்குள் ஒரு உயிர் போய் இன்னொரு உயிர் வந்து விடுகிறது. உண்மை செய்தி நத்தையின் தோளில் ஏறி நகர்வலம் போகும்போது, பொய் செய்தி மின்னலின் தோளிலேறி கண்டங்களை தாண்டி வருகிறது.

    ‘வாட்ஸ்-அப்’தான் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவ குழுவைப் போல பாவிக்கும் மக்கள் எக்கச்சக்கம் உண்டு. அவர்களும் சளைக்காமல் பூண்டு, வெங்காயம், இஞ்சி, அவரைக்காய், பீர்க்கங்காய் என வரிசையாக தங்களது வைத்தியங்களை பந்தி வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு புறம் என்றால், நோய்கள் வரும்போதும், கிருமிகள் வரும்போதும் எழுகின்ற திடீர் டாக்டர்களும், மருத்துவ ஆய்வாளர்களும், கருத்து கந்தசாமிகளும் எக்கச்சக்கம்.

    ‘இதெல்லாம் ஒரு மேட்டரா? கருஞ்சீரகத்தையும், பெருஞ்சீரகத்தையும் அரைத்து கூழாக்கி வடிகட்டி நாலு சொட்டு காது வழியா விட்டா சட்டுன்னு காணாம போயிடும்’ என அவர்கள் சொல்வதை வியந்துபோய் கைதட்ட ஏகப்பட்ட கூட்டம் இங்கே உண்டு என்பதுதான் கொடுமை. போலியான செய்திகள் பரவுவது சமூகத்தின் மிகப்பெரிய எதிரி என 74 சதவீதம் ஜெர்மானியர்களும், 54 சதவீதம் அமெரிக்கர்களும் நம்புவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தவறான செய்திகளின் பரிமாற்றத்தை தடை செய்வது இயலாத காரியம். இத்தகைய சூழலில், சரியான செய்திகள் எது என கண்டறிய இந்த பத்து விஷயங்களையும் மனதில் கொள்ளுங்கள்.

    1. நீங்கள் வாசிக்காத ஒரு செய்தியை பகிராதீர்கள். அதாவது, ஒரு செய்தி வாட்ஸ்-அப்பில் வந்தால் அது உண்மையா? பொய்யா? என்பதை கண்டறிய ஒரு ஐந்து நிமிடம் இணையத்தில் செலவிடுங்கள். நம்பகத்தன்மை உடைய பத்திரிகைகள், நபர்கள், வீடியோ தளங்கள் போன்றவற்றில் அது குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். அப்போது செய்தி உண்மையா? பொய்யா? என்பதை குறித்த புரிதல் நமக்குக் கிடைக்கும்.

    2. உங்களுக்கு தெரியாத புதிய வலைத்தளத்தில் போடப்பட்ட செய்தியை சட்டென நம்பிவிட வேண்டாம். அந்த செய்தி உண்மையா என்பதை மற்ற நம்பகத் தன்மை உடைய வலைத்தளங்களில் சோதித்து அறியுங்கள்.

    3. ஒரு செய்தியை நம்புவதற்கு முன், அல்லது பகிரும் முன் ஐந்து கேள்விகளை கேளுங்கள். இந்த செய்தி புதிய விஷயம்தானா? அல்லது காலாவதியான செய்தியா?, இந்த செய்தி தொடர்புடைய செய்திதானா?, இதை எழுதிய எழுத்தாளருக்கு இந்த விஷயத்தில் அனுபவம் உண்டா?, இந்த செய்தி ஆய்வுகள் ஆராய்ச்சி கட்டுரைகள் போன்றவற்றால் நிரூபிக்கப்பட்டதா?, இந்த செய்தி பகிரப்பட்டதன் நோக்கம் என்ன? இந்த ஐந்து கேள்விகளுக்கும் நீங்கள் பெறும் பதிலை பொறுத்து அந்த செய்தியை நம்புவதா இல்லையா எனும் முடிவை எடுங்கள்.

    4. இன்றைய மிக முக்கியமான சவால் இந்த மீம்ஸ்தான். எந்த ஒரு செய்தியையும் போட்டு அதை நகைச்சுவையாக மாற்றி விடுவார்கள். அல்லது ஒரு தவறான தகவலை, “கனடா பிரதமர் தினமும் பழங்கஞ்சி சாப்பிடுகிறார்” என வடிவேலுவின் ‘ஆகாங்’ எனும் வாக்கியத்துடன் பரப்புவார்கள். மீம்ஸ் வரும்போது செய்திகளின் நம்பகத் தன்மையை பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அதுதான் சாமானிய மக்களை சட்டென சென்று சேர்கிறது.

    5. தவறான செய்திகளை கண்டறிய பேக்ட் ஆர் பிக்ஷன், பேக்ட் செக், ட்ரூத் ஆர் பிக்ஷன், ஹோக்ஸ் போன்ற பல வலைத்தளங்கள் உள்ளன. அவற்றில் ஒரு தகவலை போட்டால் அது உண்மையா இல்லையா என்பதைக் குறித்த வரலாற்றை புட்டுப் புட்டு வைப்பார்கள். இதன் மூலம் நாம் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியலாம்.

    6. பல வேளைகளில் வலைத்தளமே போலியானதாய் இருக்கும். உண்மையான வலைத்தளத்தைப் போல ஒரு வலைத்தளத்தை உருவாக்கி அதில் போலியான செய்திகளைப் போட்டு நம்மை முட்டாளாக்கும் முயற்சிகளும் நடப்பதுண்டு. எனவே அதுகுறித்து கவனமாக இருக்க வேண்டும். வலைத்தள முகவரியில் ஸ்பெல்லிங், என்ன டொமைன் போன்றவற்றை விழிப்புடன் கவனிக்க வேண்டும்.

    7. மனிதர்களைப் போல ரோபோக்களும் தவறான தகவல்களை பரப்புகின்றன. கேட்கவே ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. இன்றைக்கு தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்திருக்கும் பாட்ஸ் பல தகவல்களை பயனர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இணையத்தில் இருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் இவை இயங்குகின்றன. ஆனால் அவை சரியா தவறா என்பதைப் பகுத்தறிவதில் இன்னும் மென்பொருட்கள் தேர்ச்சியடையவில்லை.

    8. தவறான செய்தி தருபவர்கள், நம்மை குழப்ப ஒரு உத்தி வைத்திருப்பார்கள். சொல்கின்ற செய்தியில் 70 சதவீதம் உண்மையும், 30 சதவீதம் பொய்யும் கலந்து தருவார்கள். நாம் பெரும்பாலான செய்திகள் உண்மை என்பதால் மிச்சத்தையும் உண்மை என நம்பி விடுவோம். இந்த உத்தியில் வீழ்ந்து விடாமல் கவனமாய் இருக்க வேண்டும்.

    9. தத்துவங்கள், பொன்மொழிகள் போன்றவற்றில் பெரும்பாலானவை போலிகள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். மதம், இனம், சாதி எல்லாவற்றையும் கடந்து இத்தகைய பொன்மொழிகள் உலாவரும். இவற்றைக் கண்டறிவது எளிது.

    10. பல வேளைகளில், செய்திகள் உண்மையா என சோதித்தறியும் நாம், பகிரப்படும் படங்கள் உண்மையா என்பதை பார்ப்பதில்லை. அதை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது புகைப்படங்களின் உண்மைத் தன்மையை உரசிப் பார்க்கவும் வலைத்தளங்கள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    ஒரு செய்தியைப் பகிர்வதும், நம்புவதும் சின்ன விஷயம் அல்ல. இன்றைய உலகம் உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டதை விட, இறுக்கமாய் தகவல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே நம்மை சந்திக்கும் தகவல்களையும், நாம் சிந்திக்கும் தகவல்களையும், நாம் பகிரும் தகவல்களையும் உண்மையா என்பதை ஆழமாய் அறிந்து கொள்ள வேண்டும்.

    சேவியர், எழுத்தாளர்.
    Next Story
    ×