search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புதுமை பெண்களுக்கு புதிய சிந்தனைகள்...
    X
    புதுமை பெண்களுக்கு புதிய சிந்தனைகள்...

    புதுமை பெண்களுக்கு புதிய சிந்தனைகள்...

    வீட்டில் ஒரு பெண் குழந்தையை சரியாக உட்காரு என்றும், அப்படி சிரிக்காதே என்றும் சொல்கிறார்கள். ஆனால் வீட்டில் தங்கள் மகனிடம் அவ்வாறு கண்டிப்பு காட்டுவதில்லை.
    மகளிர் தினம் கொண்டாட வேண்டியதுதான். ஆனால் அதைவிட மகளிரை தினமும் கொண்டாட வேண்டும். வருடத்தில் ஒருநாள் மகளிர் தினத்தை கொண்டாடிவிட்டு மற்ற நாட்களில் மகளிரை மறந்துவிடக் கூடாது. ஒரு பெண் எப்படிப்பட்டவள் என்பதை முடிவுசெய்ய வேண்டும் என்ற உரிமை யாருக்குமே கிடையாது. அவளுடைய உடை, பேச்சு, நடை இந்த உலகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாளோ அதை எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, ஒரு பெண் சிவனே என்று இருந்தாலும், அந்த பெண்ணை அவமானப் படுத்துவதற்காக எல்லா நிகழ்வுகளும் இன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    நம்நாட்டில் எந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் பலாத்கார சம்பவம் நடக்கும்போதும் அவளுடைய உடை சரி இல்லை, அவள் நடக்கும் விதம் சரி இல்லை. அவளுக்கு ஆண் நண்பர்கள் சரி இல்லை. அதனால் இப்படி நடக்கத்தானே செய்யும் என்கிறார்கள். ஆனால் நம்நாட்டில் 10 மாத குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது நமது சமுதாயத்தில் எதை வைத்து பலாத்காரத்திற்கு காரணம் பெண்தான் என்கிறார்கள்.

    ஒரு பெண் தன் நண்பர்களுடன் வெளியில் போனால், ‘அவளை யார், அவருடன் செல்ல சொன்னார்கள்?’ என்கிறார்கள். மகாத்மா காந்தி கூறும்போது, “சுதந்திரம் கிடைத்தது நாட்டுக்கு முக்கியம் கிடையாது. ஒரு பெண் இரவு 12 மணிக்கு நகை அணிந்து தைரியமாக தனியாக செல்கிறாளோ அப்போதுதான் சுதந்திரம் கிடைத்தது என்று அர்த்தம்” என்றார். ஆனால் இன்று இரவு 10 மணிக்கு ஒரு பெண் செயின் அணிந்து தனியாக செல்வதற்கு பயப்படுகிறாள். ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை குழந்தையின் தாத்தா, பாட்டி, அப்பா ஆகியோர் சேர்ந்து கொலை செய்துவிட்டனர் என்று பத்திரிகையில் செய்தி படித்தேன். இது ஏன் இன்னும் சமுதாயத்தில் மாறவில்லை. பெண் படித்துவிட்டு என்ன செய்ய போகிறாள்?, சமையல் அறையில்தானே இருக்கப்போகிறாள்! அவள் குழந்தை பெற்றுவிட்டு குடும்பத்தை கவனிக்கிற ஒரு ‘ரோபோ மெஷின்’ மாதிரி என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலைமை எப்போது மாறும்?.

    வீட்டில் ஒரு பெண் குழந்தையை சரியாக உட்காரு என்றும், அப்படி சிரிக்காதே என்றும் சொல்கிறார்கள். ஆனால் வீட்டில் தங்கள் மகனிடம் அவ்வாறு கண்டிப்பு காட்டுவதில்லை. ஒரு தாய், தன் மகனை வளர்க்கும்போது, நீ என்னை எப்படி பார்க்கனும் என்று நினைக்கிறாயோ, எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ, அதேபோல் மற்ற அனைத்து பெண்களிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும்.

    சமுதாயத்தில் பெண்களிடம் வன்முறை நடக்க சினிமா, டெலிவிஷன் தான் காரணம் என்று நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு யாருமே காரணம் கிடையாது. ஆண்களின் வக்கிரபுத்திதான் காரணம். தவறு நடக்கும்போது உடனடியாக தண்டனை கொடுக்கப்படுவது இல்லை. அது அவர்களுக்கு தைரியம் தருகிறது. பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் என்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமோ, அதை கொடுப்பது இல்லை. பெண்களுக்கு சமத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. பெண்கள் ஏதாவது ஒரு துறையில் சாதித்து விட்டால் அது பெரிதாக பேசப்படுகிறது. பெண்களை ஆண்களுக்கு சமமாக குறிப்பிடாதீர்கள்.

    பெண்களை அலட்சியமாக பார்க்காதீர்கள். எல்லா திறமையும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக உள்ளது. ஒரு பெண் வேலை பார்த்துக் கொண்டு, வீட்டு வேலையையும் செய்ய முடியும். குழந்தையையும் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு பன்முறை திறமைகள் பெண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் அவர்களே தங்களை தாழ்த்திக் கொள்கிறார்கள். அய்யோ என்னால் இந்த வேலையை செய்ய முடியுமா? என்று சந்தேக மனப்பான்மையோடு கேட்கிறார்கள். அப்படி ஏன் சொல்கிறீர்கள்?. எதற்கும் முயற்சி வேண்டும். தன்னம்பிக்கை, விடா முயிற்சியோடு செயல்பட்டால் எதிலும் வெற்றி பெறலாம். எனக்கு வீட்டிலும் சமுதாயத்திலும் எந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை என்று கூறி விசனப்பட்டால் நீங்கள் உங்களை அந்த அளவுக்கு தயார்படுத்திக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

    எந்த பிரச்சினையும் வீட்டில் இருந்துதான் தொடர்கிறது. எங்கள் வீட்டில் இரண்டு குழந்தைகள். அவர்கள் என்ன ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ, அதை அவர்கள் வழியில் விட்டுவிட்டோம். உனக்கு படிப்பு இருக்க வேண்டும், அதுதான் உனக்கு மிகப் பெரிய சொத்து. நாங்கள் என்ன சம்பாதித்து கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நீ விரும்பும் படிப்பை படி. ஆனால் அதே நேரத்தில் பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நிற்க வேண்டும். அதுதான் பெண்களுக்கு சமுதாயத்தில் அந்தஸ்தை கொடுக்கும் என்பதை வீட்டில் உள்ளவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கு வெளியில் சென்றுதான் வேலை பார்க்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே தொழில் செய்யலாம். உங்களுக்கு என்ன திறமை இருக்கிறது என்பது உங்களுக்குத்தான் தெரியும். அந்த திறமையை நீங்கள் கண்டு பிடித்து வீட்டில் இருந்தபடியே செய்யலாம். வீட்டில் இருந்தபடியே ஊறுகாய், பப்படம் அல்லது கம்ப்யூட்டர் வேலை உள்பட எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யலாம்.

    நாம் ஏன் நம்மை ஒரு ஆணுக்கு சமமாகவே பார்க்கிறோம். அதை தாண்டி ஏன் பார்க்க கூடாது. ஒரு ஆண் உலகத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் ஒரு தாய்தான். கடவுள் எல்லாவற்றையும் விட ஒரு பெரிய பலத்தை பெண்களுக்கு கொடுத்திருக்கிறார் என்றால் அதுதான் தாய்மை. அது ஆண்களுக்கு கிடையாது. ஒரு பெண், பிரசவ நேரத்தில் மறுபிறவி எடுத்து வந்தாள் என்று சொல்கிறோம். அதிலேயே ஒரு சக்தி இருக்கிறது. அவ்வளவு பெரிய சக்தியுடன்தான் கடவுள் உங்களை படைத்திருக்கிறார். அந்த சக்தியை தைரியத்துடன் ஏன் பயன்படுத்தக் கூடாது. பாரம் வரும்போது மட்டும் கடவுள் மீது தூக்கி போடுகிறோம். உலகத்தில் உள்ளவர்களின் அத்தனை பேரின் பார்வையும் மாற வேண்டும். அது எப்போது மாறும். ஒரு பெண் தனக்காக மாற்றிக் கொள்கிற சூழ்நிலையை உருவாக்கினால்தான் இந்த சமுதாயம் மாறும். அதுதான் ரொம்ப முக்கியம்.

    இன்னொரு முக்கிய விஷயம் பெண் எல்லா இடத்திலும் தைரியமாக ‘நோ’ சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். நான்கு சுவர்களுக்குள் சொல்லக்கூடாது. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கே யாராவது தவறாக நடக்க முயற்சி செய்தால் ‘நோ’ சொல்ல வேண்டும். பொது இடத்தில் யாராவது இடுப்பில் கை வைத்தால் தைரியமாக அடிக்க முன் வரவேண்டும். அந்த தைரியம் ஏன் வரவில்லை. சந்தோஷத்துக்காக அழலாம். நமக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து எப்போதும் அழக்கூடாது.

    வாழ்க்கையில் நிறைய பெண்களை சந்திக்கிறோம். அவர்களிடம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் அதிகமாக பெண்கள் ‘ஹவுஸ் ஒய்ப்’ ஆக இருக்கிறேன் என்று வெட்கத்துடன் கூறுகிறார்கள். அதைக் கேட்டு எனக்கு கோபம்தான் வரும். ‘ஹவுஸ் ஒய்ப்’ என்றால் சாதாரண விஷயமா? நான்கு சுவர்கள் மட்டுமா வீடு?. ஒருநாள் வீட்டில் பெண் இல்லை என்றால் அந்த வீடே தலைகீழாக மாறிவிடும். காலையில் அனைவருக்கும் முன் எழுபவளும் இரவில் கடைசியாக தூங்கச் செல்பவளும் அந்த வீட்டில் இல்லத்தரசியே!. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வதுவும் இல்லத்தரசியே!. இதற்காக பெருமைப்பட வேண்டும். ஏன் வெட்கப்பட வேண்டும்?. இது பெருமைப்படக் கூடிய விஷயம். அதற்கு சகிப்புத்தன்மை அதிகமாக வேண்டும். ஒரு வீடு நன்றாக இருந்தால்தான், நாடு நன்றாக இருக்க முடியும்.

    ஒரு வீடு நன்றாக இருப்பதற்கும் அழிந்து போவதற்கும் காரணம் ஒரு பெண் என்பார்கள். மிக முக்கியமாக ஒரு பெண்ணுக்கு பொருளாதார ரீதியாக ஒரு ஸ்திரத்தன்மை மிக அவசியம். கணவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கட்டும். உங்கள் கைகளில் பணம் இருப்பது அவசியம். இந்த ஊர் உலகம் என்ன சொல்கிறது இந்த சமுதாயம் என்ன சொல்கிறது என்பதை பற்றி கவலைப்படக்கூடாது. இது நம்மால் உருவாக்கப்பட்டது. மாற்ற வேண்டுமென்றால் இதை நாம்தான் மாற்ற வேண்டும்.
    Next Story
    ×