search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சமூகதளத்தில், பெண்கள் வாழ்வை தொலைக்கலாமா?
    X
    சமூகதளத்தில், பெண்கள் வாழ்வை தொலைக்கலாமா?

    சமூகதளத்தில், பெண்கள் வாழ்வை தொலைக்கலாமா?

    பெண்கள் சமூகதளத்தில் வாழ்வை தொலைக்காமல் இதுபோன்ற பரிமாறுதல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
    “ஏன் என் தங்கச்சியை பெயரைச் சொல்லி கூப்பிட்டே” “பெயரைச் சொல்லி கூப்பிடாம பிறகு எப்படி கூப்பிடுவாங்க” “நடுரோட்டில ஆம்பளைங்க எல்லாம் இருக்கும் போது ஏன் அவ பெயரைச் சொல்லி எல்லோருக்கும் கேட்கிற மாதிரி கூப்பிடுறே.. அவ பேரு தெரிஞ்சுகிட்டு ஆம்பிளைப் பசங்க நாளைக்கு அவளை தொந்தரவு பண்ண மாட்டாங்களா?”

    அந்த பெண் கண்களை உருட்டிக் கொண்டு கேட்டாள். எனது தோழி நடுங்கி விட்டாள். “ரொம்ப சாரி.. அக்கா..” “இனிமே ரோட்டில போகும்போது அவளைப் பேரைச் சொல்லி கூப்பிடாதே” “சரி அக்கா.. இனிமே இப்படி கூப்பிட மாட்டேன்.”

    தன்னுடன் படிக்கும் சக தோழியை பெயர் சொல்லி அழைத்ததை, அவளது மூத்த சகோதரி ஆட்சேபித்து கடிந்து கொண்ட இந்த சம்பவம் நடந்தது 40 ஆண்டுகளுக்கு முன்பு. பதினைந்து வயது பெண்ணின் பெயர் வெளியில் தெரியக் கூடாது என்றிருந்த சமூகம், இன்று பூப்புனித நீராட்டு விழா என்று பருவம் அடைந்த சின்ன பெண்ணின் படத்தை பல கோணங்களில் அச்சிட்டு போஸ்டர் ஒட்டி ஊரையே அழைக்கிறது. ஒரு பெண்ணுக்குள் இயல்பாக நடக்கும் பருவ மாற்றத்திற்கு ஏன் இத்தனை விளம்பரம்? எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்?

    மேலைநாட்டு ஆண் ஒருவன் தனது பெண் குழந்தை 13 வயது தொடங்கிய பின்னர் யாருடன் பழகுகிறது என்று கவலை கொள்வதில்லை. மனைவியானவள் தன்னை மணப்பதற்கு முன்னர் யாருடன் இருந்திருந்தாள் என ஆராய்ச்சிகளும் செய்வதில்லை. ஆனால் நமது சமூகத்தில் ஒரு பெண்ணானவள் தாய் என்ற நிலையிலும், சகோதரி என்ற நிலையிலும், மனைவி என்ற நிலையிலும், மகள் என்ற நிலையிலும், குடும்ப மானத்தின் அடையாளம் என கருதப்படும் பட்சத்தில் அவளை போஸ்டர் போன்ற பொதுவெளி பகிர்தலுக்கு அப்பாற்பட்டு வைப்பதே புத்திசாலித்தனமாகும்.

    இன்று கைபேசி இல்லாத மனிதர்களே இல்லை. கைபேசியின் பயன்பாட்டில் ஆணுக்கும், பெண்ணுக்கும் பேதம் இருப்பதில்லை. கைபேசி மற்றும் கணினியின் உதவியோடு யாருடனும், எப்போதும், எது குறித்தும், எப்படி வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கருத்து வெளிப்பாட்டில் பல நிலைகளைக் கையாளலாம் என்ற சமன்பாட்டை சமூகம் சாத்தியமாக்கியுள்ளது. வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பு குறையேதுமின்றி நிறை நிலை காண்கிறது. டிக்டாக் போன்ற சிறப்பு செயலிகளின் ஆதிக்கமோ இன்றைய காலகட்டத்தில் ஏகபோகம். பல நூற்றாண்டுகளாக தங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த பொதுவெளி புலம்பல்களை தற்போது பெண்கள் சமூக ஊடகங்களில் கொட்டித் தீர்த்து ஆறுதலும், ஆனந்தமும் அடையத் தொடங்கியிருக்கிறார்கள். தங்களது பலவீனங்களையும் சேர்த்தே பகிர்கிறார்கள். ஆட்டம், பாட்டம் என அமர்க்களப்படுத்துகிறார்கள்.

    காலையில் எழுந்தால் பதிவு, பல் துலக்கினால் பதிவு, சமையல் செய்தால் பதிவு, தலையை சீவினால் பதிவு, உடையை உடுத்தினால் பதிவு, உறங்கப் போனால் பதிவு, நின்றால், நடந்தால், விழித்தால், விழுந்தால் என செய்யும் செயல்கள் அனைத்திற்கும் பதிவு. திரையில் நடிக்க கிடைக்காத வாய்ப்பை டிக்டாக் செயலி வழங்கியது என மகிழ்ந்து, ஆடை குறைத்து, அங்கம் அசைத்து, கண்களைச் சிமிட்டி, கனவுகளை வெளியே சொல்லி சிலாகித்து மனம் சிலிர்க்க முடிகிறது. பிழைப்புக்காக திறன் காட்டும் நடிகைகளுக்கே பெரும் சவாலாக இயங்கி வரும் இக்கூட்டத்தினர், விருப்புகளை பெருமளவில் வேண்டி குவிப்பதற்காக இந்த சங்கட வேலையில் சங்கமமாகி உள்ளனர்.

    தமது குடும்பத்து மானத்தின் ஊற்றுக் கண்ணென பெண்ணின் உடலைக் கருதும், இச்சமூகத்தில் தன்னைச் சார்ந்தவளுக்கு நிகழும் ஊடக இடரை தன் தனிப்பட்ட அவமானமாக தலைமேல் கருதி எதிர்வினையாற்றும் சினமிகு ஆண்களும் இருந்து வருவது நிதர்சன உண்மை. எனவே பெண்கள் சமூகதளத்தில் வாழ்வை தொலைக்காமல் இதுபோன்ற பரிமாறுதல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

    பெண்ணின் பெருமையைக் குறிப்பிடும்போது தெய்வப்புலவர் திருவள்ளுவ பெருமான் ‘தற்காத்து’ என்ற சொல்லையே முதலில் வைக்கிறார். வாட்ஸ் அப்பில் செய்தித் தொடர்பு கொண்டிருந்தாள், டிக் டாக்கில் சமூக தொடர்பு தொடர்ந்திருந்தாள் என்ற காரணங்களுக்காக கழுத்தை அறுத்தும், கல்லைப் போட்டும் தமது மனைவிகளைக் கொன்று போடும் கணவர்களை செய்திகளில் பார்க்கிறோம். தனிப்பட்ட படங்களைப் பகிர்ந்து கொண்டு சில நாள் கழித்து உறவு கசந்த நிலையில், அப்படங்களை வெளியிட்டு விடுவதாக வரும் அச்சுறுத்தலுக்குப் பயந்து பணம் இழந்து வரும் பெண்களும், பிரச்சினையை எதிர்கொள்ள திறனின்றி வெதும்பி தன் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் பெண்களும் அடிக்கடி செய்திகளில் அடுத்தடுத்து வருகின்றனர்.

    செல்பேசிகளும், பிற ஊடக செயலிகளும் அறிவைப் பெருக்கவும், அதைத் தேடுதலின் திசையில் பயணிக்கவும் கிடைத்த அற்புத கூறுகள். ஆனால் பிறரைக் கவரவும், பிறர் விருப்புகளைப் பெறவும், பிறர் நிலை உறவைப் பேணி வளர்க்கவும் இந்த செயலிகள் பயன்பட்டு வருவது வேதனையின் உச்ச நிலை. தினமும் தன்னை ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்திக் கொண்டு, அதனைப் பிறர் ஆராதிக்க வேண்டும் என ஆவலாய் காத்துக் கிடக்கும் பெண்கள் அடிப்படையிலேயே தன்னம்பிக்கை இல்லாதவர்கள். சுயமதிப்பு குறைந்தவர்கள். எப்போதும் பிறரது பாராட்டை எதிர் நோக்கி சுயத்தை தொலைத்த மனம் திரிந்த கைதிகள். இவர்களை வீழ்த்துவதென்பது மிகவும் சுலபம். பாராட்டு இவர்களைப் புரட்டி விடலாம் அல்லது பாராட்டு மறுப்பு இவர்களை முடக்கி விடலாம். தனது பதிவுக்கு ‘லைக்’குகள் வரவில்லை என சில பெண்கள் தற்கொலை கூட செய்து கொள்வது ஊடகம் உறுத்து வந்து ஊட்டும் மனப்பிறழ்வின் உச்சம்.

    பெண்களின் சுதந்திரத்தை தடுக்கும் முயற்சி என பெண்ணியம் பேசுவோர் வாதம் செய்யலாம். சமூக ஊடகம் மூலமே பழகி தன்னிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்ட பெண்ணை மிரட்டி அச்சுறுத்தி மகிழும் ஆண்களும், தன் குடும்பத்து பெண்ணின் கண்ணியம் காக்க தன் எதிர்காலத்தை இழக்கும் சகோதரர்களும், தன் மனைவியின் சமூக செயல்பாடுகளில் சந்தேகம் கொண்டு அவளையே கொலை செய்யும் கணவன்மார்களும், இந்த சமூகத்தில் அறவே இல்லாது போகுங்கால் இச்சுதந்திரத்தைப் பெண்கள் வரையறையின்றி ஏற்க முன்வரலாம்.

    தற்காப்பு ஏதுமின்றி, தானே வழியப்போய் ஊரார் இல்லங்களிலும், நெஞ்சங்களிலும் புகுந்து சிறைபட செய்வது இச்செயலிகளின் செயல்பாடு. அதனின்று வெளிவரத் தெரியாமல் தவிக்கும் பெண்கள் அல்லது வெளிவர மனமின்றி மயங்கி கிடக்கும் பெண்கள் இனி ஒரு விதி செய்து அதை எந்த நாளும் காக்க உறுதியேற்க வேண்டும். சிறையிடச் செய்யும் இந்த சாகச் செயலிகளை மறுதலித்து கொஞ்சம் தொலைவில் வைப்போம். அடுத்தவரின் பாராட்டை எதிர்நோக்கி எப்போதும் தயார் நிலையிலேயே தன்னை வைத்து சுயத்தை தொலைக்கும் நிலையைத் தவிர்ப்போம்.

    பா.ஜோதிநிர்மலா சாமி, ஐ.ஏ.எஸ்.
    Next Story
    ×