search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அறிவியலில் பெண்கள் அரசாள வேண்டும்...
    X
    அறிவியலில் பெண்கள் அரசாள வேண்டும்...

    அறிவியலில் பெண்கள் அரசாள வேண்டும்...

    சமீப காலங்களில் பெண்கள் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் அணுசக்தி போன்ற உயர் கட்ட ஆராய்ச்சிகளில் பரிணமிக்க ஆரம்பித்திருப்பதும் இந்த அறிவிப்பிற்கு ஒரு காரணமாகும்.
    இன்று (பிப்ரவரி 28-ந்தேதி) தேசிய அறிவியல் தினம்.

    இன்றைய நிலையில் வருடத்தின் ஒவ்வொரு சூரிய உதயமும் யாராவது ஒருவரின் நினைவு நாளாகவோ அல்லது ஏதாகிலும் ஒன்றின் நினைவு நாளாகவோ, சர்வதேச அளவிலோ அல்லது தேசிய அளவிலோ கொண்டாடப்படும் நாளாக மலர்கிறது. அந்த வழியில் ஆங்கில தேதியான பிப்ரவரி 28-ஆன இன்றைய நாள் இந்திய நாட்டின் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.

    பொதுவாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாடு சுதந்திரம் பெற்ற நாள், நாடு குடியரசான நாள் அல்லது தேசத் தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே தேசிய அளவில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும். இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர்.சி.வி. ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற, “ராமன் விளைவு” என்ற கண்டுபிடிப்பின் ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28-ந் தேதியை தேசிய அறிவியல் தினம் என இந்திய அரசு ஒவ்வொரு வருடமும் அதைக் கொண்டாட வழிவகை செய்திருக்கிறது.

    சர்.சி.வி. ராமன் தனது புகழ்பெற்ற “ராமன் விளைவை” 1928-ம் வருடம் பிப்ரவரி 28-ல் உலகிற்கு அறிவித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்கு பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசையும் (1930) ராமனுக்கு பெற்றுத் தந்தது. அந்நிகழ்வின் நினைவாகவும், அறிவியல் விழிப்புணர்வும், அறிவியலின் மேல் ஒரு ஆர்வமும் அடித்தட்டு மக்களையும் கூடச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளை தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

    1965-ல் இந்திய பாகிஸ்தான் யுத்தத்திற்கு பின், அன்றைய இந்தியப் பிரதமர், இந்தியாவின் முழக்கமாக முன்னிறுத்தியது, “வெல்க ராணுவம், வெல்க வேளாண்மை” என்பதாகும். ஆனால் நாட்டின் முழுமையான முன்னேற்றத்திற்கு, மூன்றாவது அங்கமாக அறிவியலும் சேர வேண்டும் என உணரப்பட்டது. அதன் பயனாய், 1987-ம் ஆண்டு முதற்கொண்டு இந்திய தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. அதன் மற்றொரு அங்கமாய், 1998-ல் இந்தியாவின் முதல் அணுகுண்டு வெடிப்பு பரிசோதனைக்கு பின், அன்றைய இந்திய பிரதமர், அடல் பிகாரி வாஜ்பாயால் முன்னிறுத்தப்பட்ட நவீன இந்தியாவின் முழக்கம் “வெல்க ராணுவம், வெல்க வேளாண்மை, வெல்க அறிவியல்” என்பதாகும்.

    1999-ல் இருந்து தேசிய அறிவியல் தினம் இன்னுமொரு சிறப்பை பெற்றது. அதன் பயனாய், ஒவ்வொரு வருடமும் ஒரு நோக்கத்தை முன்னிறுத்தி தேசிய அறிவியல் தினம் கொண்டாட வகை செய்யப்பட்டது. அதன்படி, ‘அறிவியல் அனைவருக்கும்’, ‘கழிவிலிருந்து செல்வம்’, ‘ஒரு துளியில் பெரும் விளைச்சல்’, ‘இயல்பியலை கொண்டாடுவோம்’, ‘சிறப்பு திறன் கொண்டோருக்கு அறிவியல்’ என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பல உயரிய நோக்கங்களை முன்னிறுத்திக் கொண்டாடப்பட்டு வருகிறது, தேசிய அறிவியல் தினம். இந்த 2020-ம் வருடத்திற்கான நோக்க மிகு தலைப்பு, ‘அறிவியலில் பெண்கள்’.

    நவீன இந்தியாவில், ஆண், பெண் என்ற பேதமின்றி இரு பாலரும் அரசியல், கல்வி, மருத்துவம், கணினி, மேலாண்மை, விளையாட்டு என்று எல்லாத் துறைகளிலும் சரிசமமான பங்களிக்கும் வாய்ப்பிருந்தால் நாட்டின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதும், சமீப காலங்களில் பெண்கள் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் அணுசக்தி போன்ற உயர் கட்ட ஆராய்ச்சிகளில் பரிணமிக்க ஆரம்பித்திருப்பதும் இந்த அறிவிப்பிற்கு ஒரு காரணமாகும்.

    சமீப காலங்களில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத பெண்கள் உயர் கல்விக்கு வந்திருப்பது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையைக் காட்டுகிறது. ஆயினும் ஆராய்ச்சி துறைகளில் பெண்கள் முப்பது சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளனர். ஆயினும் இந்திய விண்வெளித்துறை, பாதுகாப்புத்துறை, மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடும் படியாக உள்ளது.

    மங்கள்யான் மற்றும் சந்திரயான் திட்டங்களில் பணியாற்றிய பெண் அறிவியலாளர்களும், பல்கலைக்கழகங்களின் சில பெண் துணை வேந்தர்களும், வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் எங்களாலும் முடியும் என்று உலகிற்குப் பறை சாற்றுவதாய் நான் உணர்கிறேன். அத்தகு பெண் சாதனையாளர்களை இன்றைய அறிவியல் தினத்தன்றும், அடுத்து வரும் நாட்களிலும் முன்னிறுத்தும் போது இன்னும் நிறையப் பெண்கள் அறிவியல் துறைக்கு வர வாய்ப்பளிக்கும் என நம்புகிறேன்.

    எனது இந்த நம்பிக்கையைத்தான், சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் சந்திரயான்-2வின் திட்ட இயக்குனர் வனிதாவிற்கு விருது வழங்கிப் பேசும் போது சொன்னேன், அறிவியலுக்கு இன்னும் நிறைய பெண்கள் வரவேண்டும், இந்த விருது அதற்கான விதையாக இருக்கட்டும் என்று.

    “அறிவியலில் பெண்கள்” என்ற இன்றைய அறிவியல் தினம் மென்மேலும் பெண்களை அறிவியல் நோக்கி ஈர்க்கட்டும்.

    முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, துணைத்தலைவர்,

    தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம்.
    Next Story
    ×