search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வங்கி டெபாசிட்டுகள் பாதுகாப்பானதா?
    X
    வங்கி டெபாசிட்டுகள் பாதுகாப்பானதா?

    பெண்களே அறிந்து கொள்ளுங்கள்: வங்கி டெபாசிட்டுகள் பாதுகாப்பானதா?

    பொதுமக்களுக்கு தங்கள் வங்கிகளில் வைத்துள்ள சேமிப்புகள் பாதுகாப்பாக உள்ளதா, உரிய நேரத்தில் திரும்ப பெற முடியுமா என்ற சந்தேகம் வருகிறது.
    நமது நாட்டில் பலதரப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. 1969-ம் ஆண்டு 14 தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அதன் பின்னர் 1980-ம் ஆண்டு மேலும் 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இந்த வகையில் இப்போது பாரத ஸ்டேட் வங்கியையும் சேர்த்து 20 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகும். இதுபோக 1968-க்கு முன்பிருந்தே செயல்பட்டு வரும் தனியார் வங்கிகள் மற்றும் 1993-க்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வரும் 8 தனியார் வங்கிகள், லோக்கல் ஏரியா வங்கிகள் என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட வங்கிகள், கிராமப்புற வங்கிகள், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள், 2015-ம் ஆண்டுக்கு பின்னர் தொடங்கப்பட்ட ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் மற்றும் பேமென்ட் வங்கிகள் இவை அனைத்தும் வணிக வங்கிகள் ஆகும். மேலும் மாநில, மத்திய கூட்டுறவு வங்கிகள், பிரைமரி கூட்டுறவு வங்கிகள் இவை அனைத்தும் கூட்டுறவு வங்கிகள் ஆகும். மேலே சொல்லப்பட்ட அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் தங்கள் சேமிப்பை டெபாசிட் தொகையாக வைத்துள்ளார்கள்.

    வங்கிகள், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் பணத்தை டெபாசிட்டாக வாங்கி அதையே பலவித கடன்களாக தருகின்றன. இந்த கடன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் திரும்ப செலுத்தப்பட வேண்டும். ஆனால் வங்கிகளின் வாராக்கடன்களின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரிசர்வ் வங்கியின், வங்கிகளுக்கான ஆண்டறிக்கை 2018-19-ன் படி, அனைத்து வங்கிகளின் நிகர வாராக்கடன் அளவு ரூ.3,55,076 கோடிகள் ஆகும். இது கடந்த 2017-18-ம் ஆண்டின் அளவான 6 சதவீதத்திலிருந்து 2018-19-ம் ஆண்டு 3.7 சதவீதமாக குறைந்துள்ளது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ரிசர்வ் வங்கியும், வங்கிகள் தங்கள் முதலீட்டை ஒரு குறிப்பிட்ட அளவில் வைக்குமாறு அறிவுறுத்துகிறது. இருந்தாலும், பொதுமக்களுக்கு தங்கள் வங்கிகளில் வைத்துள்ள சேமிப்புகள் பாதுகாப்பாக உள்ளதா, உரிய நேரத்தில் திரும்ப பெற முடியுமா என்ற சந்தேகம் வருகிறது.

    பல வருடங்களுக்கு முன்னால் கேரளாவில் செயல்பட்டு வந்த பாலை சென்ட்ரல் பேங்க் என்னும் தனியார் வங்கி 1960-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் அறிவுரைப்படி மூடப்பட்டது. இது பொதுமக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் தங்கள் வங்கி சேமிப்புக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்பதை உணர்ந்தார்கள். இதன் பின்னணியில்தான் டெபாசிட் இன்சூரன்ஸ் சட்டம் 1961 இயற்றப்பட்டது. டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேசன் என்ற நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டது. இது ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனம் ஆகும். இதன் மூலம் வங்கி டெபாசிட்டுகளுக்கு காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலே சொல்லப்பட்ட அனைத்து வங்கிகளும் டெபாசிட் இன்சூரன்ஸ் கார் கார்பரேசன் கீழ் கொண்டுவரப்பட்டு அனைத்து வகையான டெபாசிட்டுகளுக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த காப்பீட்டுக்கான ஆண்டு பிரீமியம் தொகையை அந்தந்த வங்கிகளே செலுத்துகின்றன. இந்த தொகை தற்போது ரூ.100 ரூபாய் தொகைக்கு 12 காசு ஆகும்.

    டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேசன் வழங்கும் ஒரு தனி நபருக்கான அதிகபட்ச காப்பீடு ரூ.1,00,000 ஆக இருந்தது. 2020-ம் வருடம் பிப்ரவரி 4 முதல் இந்த அதிகபட்ச காப்பீட்டு தொகை ரூ.5,00,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? நீங்கள் உங்கள் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு, தொடர் சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு கணக்கு(எப்.டி) வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் மொத்த தொகை ரூ.7,00,000 என்றால் உங்களுக்கான அதிகபட்ச காப்பீடு ரூ.5,00,000 ஆகும். இது உங்கள் பெயரில் உள்ள தனிப்பட்ட கணக்குகளுக்கான காப்பீடு ஆகும். நீங்கள் உங்கள் மனைவி பெயரையும் இணைத்து கூட்டு கணக்கு (ஜாயிண்ட் அக்கவுண்ட்) வைத்திருந்தால், அதற்கான காப்பீடு தனியாக ரூ.5,00,000 ஆகும்.

    டெபாசிட் இன்சூரன்ஸ் என்பது ஒரு பாதுகாப்புதான் என்பதை உணர வேண்டும். இது எப்போது அமலுக்கு வரும்? ஒருவேளை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி மூடப்பட்டால் அப்போது உங்கள் அதிகபட்ச காப்பீட்டு தொகை அமலுக்கு வரும். ஆனால் வங்கிகள் மூடப்படுமா என்ற பயம் உங்கள் மனதிலிருந்து அகல வேண்டும். பாலை சென்ட்ரல் பேங்க் லிமிடெட் 1960-ம் ஆண்டு மூடப்பட்ட பிறகு, வங்கிகளின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. வங்கிகளுக்கு நேரடியாக சென்று அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறது. மேலும் பலதரப்பட்ட விவரங்களை தொடர்ந்து வங்கிகளிடம் பெற்று அவற்றின் மூலம் வங்கிகளின் ஸ்திர தன்மையை உறுதி செய்கிறது. வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவோடு நேரடி கூட்டம் நடத்தி செயல்பாடுகளின் முன்னேற்றங்கள் குறித்து அறிவுரை வழங்குகிறது.

    இந்த விதமான நடவடிக்கைகளினால்தான் 1960-ல் ஏற்பட்ட நிலைமை இன்று இல்லை. ஒரு வங்கியின் செயல்பாடு ஆரோக்கியமாக இல்லை என்றால் அந்த வங்கியை வேறொரு வங்கியுடன் இணைத்து, பொதுமக்களின் டெபாசிட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த வகையில்தான் க்ளோபல் டிரஸ்ட் பேங்க் என்ற தனியார் வங்கியை ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் என்ற பொதுத்துறை வங்கியுடன் இணைத்ததும் மற்றும் இதுபோன்ற சில வங்கிகளை மற்ற வங்கிகளோடு இணைத்ததும் ஆகும். ஆனால் சில நிர்வாக காரணங்களுக்காக இணைக்கப்பட்ட வங்கிகள் இந்த நோக்கத்தில் நடந்த இணைப்பு ஆகாது. உதாரணமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் துணை வங்கிகளை ஸ்டேட் பேங்க் உடன் இணைத்ததும் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள பொதுத்துறை வங்கிகள் இணைப்பும் நிர்வாக காரணங்களுக்கு மட்டுமே ஆகும்.

    எனவே, வங்கிகளின் செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப்படுகிறது. இதன் நோக்கமே வங்கிகளில் வடிக்கையாளர்களின் டெபாசிட்டுகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கே ஆகும். எனவே டெபாசிட்டுகளின் காப்பீடு என்பது நாம் வெளிநாடுகள் செல்லும் போது எடுக்கும் டிராவல் இன்சூரன்ஸ் போன்றதுதான். இதை ஒரு பாதுகாப்பிற்கு தான் எடுக்கிறோம். இதை எடுப்பதன் காரணம் நமது பயணம் பாதுகாப்பானது அல்ல என்று நாம் நினைக்க மாட்டோம். தற்போது உள்ள விமான பயணங்கள், விமான நிலைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்கின்றன. அது போலவே ரிசர்வ் வங்கியும் பொதுமக்களின் வங்கி டெபாசிட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேசன் மூலம் செய்யப்படும் காப்பீடு ஒரு பாதுகாப்பே என்பதை நாம் உணர்வோம்.

    எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி
    Next Story
    ×