search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீடு வாங்குபவர்களுக்கு ரியல் எஸ்டேட் வல்லுனர்களின் ஆலோசனைகள்
    X
    வீடு வாங்குபவர்களுக்கு ரியல் எஸ்டேட் வல்லுனர்களின் ஆலோசனைகள்

    வீடு வாங்குபவர்களுக்கு ரியல் எஸ்டேட் வல்லுனர்களின் ஆலோசனைகள்

    இன்றைய காலகட்டத்தில், அரசாங்கம் அளிக்கும் வீட்டு வசதி திட்டங்கள், வங்கிகள் தரக்கூடிய வீட்டுக்கடன் திட்டங்கள் ஆகியவை சாமானிய மனிதருக்கும் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளதாக நிதியியல் ஆலோசகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
    பெருநகரமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும் அங்கு வசிக்கும் மக்களின் பொதுவான மனோபாவம், சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதுதான். இன்றைய காலகட்டத்தில், அரசாங்கம் அளிக்கும் வீட்டு வசதி திட்டங்கள், வங்கிகள் தரக்கூடிய வீட்டுக்கடன் திட்டங்கள் ஆகியவை சாமானிய மனிதருக்கும் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளதாக நிதியியல் ஆலோசகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சொந்தவீடு என்பது ஒரு தனிமனிதருடைய கனவாக மட்டும் இருப்பதில்லை. அது ஒட்டுமொத்த குடும்பத்தின் பெரு விருப்பமாகவும் இருந்து வருகிறது. பெரு நகரங்களில் உள்ள இடநெருக்கடி காரணமாக நில மதிப்பு என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாத நிலைக்கு சென்று விட்டது. அந்த நிலையில் வாடகை வீடு என்பதுதான் நடுத்தர மக்களின் வாழ்க்கை முறையாக இருந்து வருகிறது.

    வங்கிகள் அளிக்கும் கடன்

    வங்கி கடன் மூலமாகவே பெரும்பாலான நடுத்தர மக்களின் சொந்த வீடு அல்லது வீட்டு மனை என்ற கனவை நினைவாக்கி கொள்கிறார்கள். அவர்களது தேர்வு புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள வீட்டு மனை திட்டங்களாக இருக்கிறது. அதற்கேற்ப கட்டுனர்களும், அரசாங்கத்தின் வீட்டு வசதி திட்டத்தில் அளிக்கப்படும் சலுகைகளை கொண்ட, நடுத்தர மக்களுக்கு ஏற்ற பட்ஜெட்களில், பல்வேறு கட்டுமான திட்டங்களை புறநகர் பகுதிகளில் செயல்படுத்தி வருகிறார்கள். இன்றைய சூழலில் வங்கி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் சற்று எளிதாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.

    வீடு அல்லது வீட்டுமனை வாங்குவது என்று முடிவெடுப்பதற்கு முன்னதாக மூன்று முக்கியமான விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று ரியல் எஸ்டேட் நிதியியல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். கீழ்க்கண்ட மூன்று விதிகள் எல்லா காலங்களுக்கும் பொருந்தக்கூடிய விதத்தில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

    முதல் வீடு முதலீடு அல்ல

    முதல் வீடு என்பது அடிப்படை தேவைகளை பூர்த்து செய்வதற்காக என்ற நிலையில், யாரும் அதை ஒரு முதலீடாக நினைப்பதில்லை. மேலும், வங்கி கடன் பெற்று வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்ற நிலையில் அதற்கான வருமான வரி சலுகைகள் மற்றும் அரசு வீட்டு வசதி திட்டத்தில் அளிக்கப்படும் சலுகைகள் ஆகியவற்றையும் பெற இயலும். குறிப்பாக, மாதாந்திர வீட்டு வாடகை என்ற தொல்லை தவிர்க்கப்படும். இரண்டாவது வீடு என்பதை சம்பந்தப்பட்ட குடும்பம் அல்லது தனி நபரின் பொருளாதார நிலைகளுக்கேற்ப முடிவு செய்யப்பட வேண்டும்.

    அகலக்கால் வேண்டாம்

    வீடு வாங்குவது என்பது வாழ்வில் அடிக்கடி நடைபெறும் சம்பவம் அல்ல என்ற கருத்தில் முதல்முறையாக வீடு வாங்குபவர்கள் அல்லது வீடு கட்டுபவர்கள் ஆர்வம் காரணமாக தங்களது பொருளாதார எல்லைகளை கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டு விடுவது வழக்கம். அதன் நெருக்கடிகள் உடனடியாக தெரிவதில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பின்னர் அல்லது வேறு குடும்ப செலவுகள் ஏற்பட்டு, அதன் காரணமாக ஏற்படும் பொருளாதார பற்றாக்குறை மன உளைச்சலாக மாறக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். வீட்டுக்கடனுக்கான மாதாந்திர தவணை என்பது எப்போதும் குடும்பத்தின் மாத வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் இருப்பதே பாதுகாப்பானது.

    வீடுகளையே வாங்குங்கள்

    வீடு வாங்க திட்டமிடுபவர்கள் நேரடியாக கட்டி முடிக்கப்பட்ட அல்லது கட்டிட பணிகள் நடந்து கொண்டிருக்கும் கட்டுமான திட்டங்களை தேர்வு செய்வதே நல்லது. தற்போதைய சூழலில் ‘ரெரா’ சட்டம் மூலம் பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்கள், உறுதி அளிக்கப்பட்ட கால அளவுக்குள் முறைப்படி, வாடிக்கையாளர்களிடம் வீடுகளை ஒப்படைப்பு செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
    Next Story
    ×