search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    போக்சோ வழக்கும்...விழிப்புணர்வும்
    X
    போக்சோ வழக்கும்...விழிப்புணர்வும்

    போக்சோ வழக்கும்...விழிப்புணர்வும்

    போக்சோ சட்டம் அமலுக்கு வந்த பின்னர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வர தொடங்கியுள்ளது.
    டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்தியா மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இந்த வழக்கின் மூலம் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்களில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அது தான் சிறுமிகளை பாலியல் பலாத்கார குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம். அந்த சட்டம் 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் குழந்தைகள் தினமான அதே ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

    துணிந்து புகார்

    போக்சோ சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் வெளியே தெரியாமல் இருந்தன. புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?. அப்படி புகார் அளித்தால் சிறுமிகளின் பெயர் வெளியே தெரிந்து அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பன போன்ற காரணங்களினால் அவை வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டன.

    ஆனால் போக்சோ சட்டம் அமலுக்கு வந்த பின்னர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வர தொடங்கியுள்ளது. புகார் அளிக்கும்போது பெண் பிள்ளைகளின் பெயர் மற்றும் முகவரி வெளியே தெரிந்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் அதற்கும் போக்சோ சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. பாலியல் புகார் கூறும் சிறுமிகளை அடையாளம் தெரியாத அளவிற்கு அவர்களை பற்றிய தகவல்களை வெளியே சொல்லக்கூடாது என்று போக்சோ சட்டம் கூறுகிறது. அப்படி கூறுபவர்களும் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என்ற பாதுகாப்பினால் தற்போது சிறுமிகளும் அவர்களின் பெற்றோரும் துணிந்து புகார் கூற முன்வந்துள்ளனர்.

    விழிப்புணர்வால் அதிகரிக்கும் வழக்குகள்

    போக்சோ சட்டம் அமலான பின்னர் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்று கூறுவதை விட அதுபற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் தான் புகார்கள் வெளியே தெரிந்து வழக்குகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளன என்கின்றனர் போலீஸ் உயர் அதிகாரிகள்.

    மேற்கு மண்டலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 325 போக்சோ வழக்குகளும், 2019-ம் ஆண்டு 425 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இதில் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரகத்தில் 2018-ம் ஆண்டில் 145 வழக்குகளும், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்தில் 180 வழக்குகளும், 2019-ம் ஆண்டில் கோவை சரகத்தில் 199 வழக்குகளும், சேலம் சரகத்தில் 226 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

    75 சதவீதம் அறிமுகமானவர்களால்

    18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் 75 சதவீதம் அவர்களை சுற்றி உள்ள அறிமுகமானவர்களால் தான் நடக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மீதி 25 சதவீதம் குழந்தைக்கு அறிமுகமில்லாதவர்களால் நடக்கிறது. சிறுமிகள் பெரும்பாலும் வீடுகள், வீட்டிற்கு அக்கம் பக்கத்தில் உள்ள பகுதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் தான் இருக்கிறார்கள். அதாவது குடும்ப நண்பர்கள், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள், தாத்தா, மாமா போன்றவர்களால் மட்டுமல்லாமல், அதிலும் குறிப்பாக தந்தையால் கூட பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    போக்சோ சட்டத்தில் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் புகார் கொடுத்த சிறுமியின் தரப்பில் அந்த குற்றத்தை நிரூபிக்க வேண்டியதில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தான் அதை நிரூபிக்க வேண்டும். மேலும் 18 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறினால் அதையே ஆதாரமாக கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு தொடர முடியும். அதற்கு ஆதாரம் தேவையில்லை. ஆனால் அந்த புகாரை பாதிக்கப்பட்ட சிறுமியை தவிர வேறு யார் கொடுத்தாலும் அதற்கான ஆதாரத்தை கொடுக்க வேண்டும். அப்படி அந்த புகார் தவறாக இருக்கும்பட்சத்தில் புகார் கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும்.

    பொய் புகார்

    உதாரணத்துக்கு சமீபத்தில் சென்னையில், தனது மகளை கணவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று ஐகோர்ட்டில் ஒரு பெண் புகார் அளித்தார். உடனே பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியை அழைத்து கோர்ட்டில் விசாரித்த போது தந்தை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று அந்த சிறுமி கூறினார். இதையடுத்து வழக்கிலிருந்து சிறுமியின் தந்தை விடுவிக்கப்பட்டார். பின்னர் நடத்திய விசாரணையில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பழிவாங்க அந்த பெண் பொய் புகார் கொடுத்தது தெரிந்தது. பொய் புகார் அளித்த தாயார் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. எனவே புகார் அளிக்கும் உரிமை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மட்டுமே போக்சோ சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. குடும்ப பிரச்சினைக்காக சிறுமியை பயன்படுத்துவதை தவிர்க்கவே இத்தகைய முக்கியத்துவம் போக்சோவில் அளிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×