search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பணத்துடன் வாழ்கிறோம்.. மனபயத்துடன் இருக்கிறோம்..
    X
    பணத்துடன் வாழ்கிறோம்.. மனபயத்துடன் இருக்கிறோம்..

    பணத்துடன் வாழ்கிறோம்.. மனபயத்துடன் இருக்கிறோம்..

    இன்றைய பெண்களிடம் எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகமாக இருக்கிறது. தகுந்த வாழ்வியல் பாதுகாப்பு இல்லை என்று கருதுகிறார்கள். பணம் கிடைக்கிறது. ஆனால் அதைவிட அதிகமாக வேலைப்பளுவும், பிரச்சினைகளும் ஏற்படுவதாக கருதுகிறார்கள்.
    ‘வாழ்க்கையின் வெற்றியை எதைவைத்து தீர்மானிக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை பெண்களிடம் கேட்டால், பெரும்பாலும் அவர்கள் சொல்லும் பதில் என்னவாக இருக்கிறது தெரியுமா? ‘நன்றாக படிக்கவேண்டும். உயர்ந்த பணியில் சேரவேண்டும். தேவைக்கு பலமடங்கு அதிகமாக சம்பாதிக்கவேண்டும். பணம்தான் நமது வெற்றியை தீர்மானிக்கிறது’ என்று சொல்கிறார்கள்.

    நினைத்ததுபோலவே நல்ல கல்வி, உயர்ந்த வேலை, அதிக சம்பளம் மூன்றும் அவர்களுக்கு கிடைத்துவிட்டது. கிடைத்த அவைகளைவைத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் அவர்களிடம் போய், ‘வாழ்க்கையில் வெற்றியடைந்துவிட்டீர்களா?’ என்று கேட்டால் ‘வாழ்க்கையில் நினைத்ததெல்லாம் கிடைத்துவிட்டது. ஆனால் மகிழ்ச்சி மட்டும் இல்லை’ என்கிறார்கள். மகிழ்ச்சி என்பது படிப்பிலோ, வேலையிலோ, சம்பாதிக்கும் பணத்திலோ இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள கிட்டத்தட்ட 30 வயது வரை தேவைப்படுகிறது.

    மகிழ்ச்சியாக வாழ்க்கையை நகர்த்த முடியாமல் தடுமாறிப்போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி என்றால் என்னவென்று உணரத்தெரியாமல், அது மதுவோ, போதையிலோ, முறையற்ற பாலியல் இன்பங்களிலோ இருப்பதாக கருதுகிறவர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகி விடுகிறார்கள்.

    முற்காலத்தில் பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்தது. திருமணத்திற்குப் பின்பு மாமியார் வீட்டிற்குப் போய் வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் உயிரை விட்டார்கள். எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் அவர்களிடம் இல்லாமல் இருந்தது. அத்தகைய ஆற்றலை அவர்கள் பெற, பெண்கள் கல்வியையும், விழிப்புணர்வையும் நோக்கி திருப்பிவிடப்பட்டார்கள். படித்தார்கள். பொது அறிவை பெற்றார்கள். எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வாழும் ஆற்றலையும் பெற்றார்கள். எல்லாம் சரிதான். ஆனால் எளிதாக விரக்தி அடைந்து விடுகிறார்களே அது ஏன்? அப்படியானால் முன்பைவிட பெண்கள் இப்போது மனதளவில் பலகீனமாகிவிட்டார்களா?

    இன்றைய பெண்களிடம் எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகமாக இருக்கிறது. தகுந்த வாழ்வியல் பாதுகாப்பு இல்லை என்று கருதுகிறார்கள். பணம் கிடைக்கிறது. ஆனால் அதைவிட அதிகமாக வேலைப்பளுவும், பிரச்சினைகளும் ஏற்படுவதாக கருதுகிறார்கள். அதுவே அவர்களுக்கு தாங்க முடியாத மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. அதனால் ‘பணத்துடன் வாழ்கிறோம். ஆனால் பயமாக இருக்கிறது’ என்று சொல்லும்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    குழந்தைகள் எல்.கே.ஜி. படிக்கும்போதே அவர்களிடம் போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடுகிறோம். அங்கே ஆரம்பித்த போட்டி வாழ்க்கையை, பருவ வயதை எட்டி பக்குவம் வந்த பின்பும் தொடர்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரர் களிடமோ, உறவினர்களிடமோ செல்வாக்கில், செல்வத்தில் போட்டிப்போடுவதாக நினைத்துக்கொண்டு கண்டபடி கடன் வாங்குகிறார்கள். அதுவே அவர்களை பல்வேறு விதமான சிக்கலுக்குள் தள்ளிவிடுகிறது. அதிலிருந்து மீள பல வழிகளில் முயற்சித்து உழைக்கிறார்கள். அப்போது ஏற்படும் ஓய்வற்ற நிலையும், தெளிவற்ற சிந்தனையும் அவர்களுக்குள் விரக்தியை விதைத்துவிடுகிறது.

    பெண்கள் படித்து முன்னேறி சொந்தகாலிலேயே நிற்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கனவு. தங்களைப் போல பணப் பிரச்சினை இல்லாமலிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை. அதெல்லாம் சரிதான். ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் அனுபவிக்கும் நெருக்கடிகளை பலரும் அறிவதில்லை. அலுவலகத்தில் வேலைப் பளுவால் மனம் வருந்தி சோர்ந்து போகும்போது அதை சரி செய்யும் பக்குவம் பல குடும்பங்களில் பெரியவர்களுக்கு இல்லை என்ற குறையும் நிலவுகிறது. இந்த விஷயத்தில் இளமைக்கும்- முதுமைக்கும் இடையே சரியான புரிதல்கள் இல்லை.

    நாம் இப்போது மின்னணு சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதில் இருந்து இடைவிடாத கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவை நமது உடல் இயக்கத்தை பாதித்து, மனநோய்களையும், உடல் நோய்களையும் உருவாக்குகிறது. அதனால் மனதடுமாற்றமும், எதிலும் பிடிப்பற்ற நிலையும்தோன்றி பெண்கள் விரைவாக தளர்ந்துபோகிறார்கள். இந்த தளர்ச்சியை போக்க தியானம் உதவுகிறது. முறைப்படி கற்றுக்கொண்டு அதனை அன்றாடம் செய்துவந்தால், மனதில் நிறைவும், தெளிவும் கிடைக்கும். அந்த சக்தியைக் கொண்டு, எந்த பிரச் சினைகள் ஏற்பட்டாலும் அதை முறியடிக்கும் ஆற்றல் கிடைக்கும். தியானம் செய்தால் ஆரோக்கியம் பெருகும். மனத் தெளிவும், ஆரோக்கியமும் கிடைக்கும் போது, உடல் அழகுபெறும். உள்ளமும் மகிழ்ச்சியை அனுபவிக்கும்.

    வேலைக்காக பிறப்பெடுத்திருக்கிறோம். வேலைக்காகவே வாழ்கிறோம் என்று பலரும் நினைக்கிறார்கள். எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும். எப்போதும் பணம் சம்பாதித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் பலரும் கருதுகிறார்கள். பணத்திற்காக மட்டுமே நேரம் ஒதுக்காமல் மனதிற்காகவும் நேரம் ஒதுக்கவேண்டும். அப்படி நேரம் ஒதுக்கி, மனதிற்கு பிடித்த செயல்களை செய்தால், மனம் மகிழ்ச்சி அடையும். பாட்டு கேட்பது, கடற்கரைக்கு சென்று அலைகளை ரசிப்பது, ஊஞ்சல் ஆடுவது, நாய்க்குட்டியோடு விளையாடுவது, பூச்செடி வளர்ப்பது, புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, சிற்பங்கள் மற்றும் விலங்குகளை கண்டு ரசிப்பது என்று ஏராளமான மகிழ்ச்சி தரும் விஷயங்கள் உள்ளன. அவைகளில் உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்ந்தெடுத்து அதை அனுபவிக்கவும் நேரத்தை ஒதுக்குங்கள்.

    குடும்ப உறவினர்கள், நண்பர்களோடு சேர்ந்து பொழுதைக்கழிக்க திட்டமிடுங்கள். அவர்களோடு உணவருந்துங்கள். பொழுதுபோக்குங்கள். ஒருவரின் அனுபவங்கள் மூலம் மற்றவர்களின் மனச்சுமையை குறையுங்கள். நட்பு, உறவோடு கலகலப்பாக பொழுதுபோக்குவது, பல வருடங்கள் மனதை அழுத்தும் சுமையை அகற்றும். அதன் மூலம் மனதில் புது உற்சாகம் பிறக்கும்.
    Next Story
    ×