search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ‘ஆன்லைன்’ பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை
    X
    ‘ஆன்லைன்’ பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை

    ‘ஆன்லைன்’ பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை

    மக்களிடையே செல்போன் உபயோகிக்கும் பழக்கம் அதிகரித்தாலும் ‘ஆன்லைன்’ பண பரிவர்த்தனை செய்வதற்கு தயக்கத்தில் இருக்கின்றனர்.
    இன்டர்நெட் மற்றும் அதிநவீன ‘ஸ்மார்ட் போன்’கள் வருகையால் ஆன்லைனிலேயே பண பரிவர்த்தனை செய்து கொள்ள வசதிகள் வந்துவிட்டன.

    மக்களிடையே செல்போன் உபயோகிக்கும் பழக்கம் அதிகரித்தாலும் ‘ஆன்லைன்’ பண பரிவர்த்தனை செய்வதற்கு தயக்கத்தில் இருக்கின்றனர். இந்த தயக்கத்திற்கு காரணம் அன்றாடம் ஆங்காங்கே அரங்கேறும் நூதன ‘ஆன்லைன்’ குற்றச்செயல்களின் தாக்கம், ஆன்லைன் பண பரிவர்த்தனையில் போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் சாதாரணமாக நடக்கும் செல்போன் திருட்டு என்பன போன்ற காரணங்கள் மக்களிடையே ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மீதுள்ள தயக்கத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது என மும்பை ஐ.ஐ.டி. அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிகின்றன.

    இந்தியாவில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் மூலம் ‘ஆன்லைன்’ பண பரிவர்த்தனைகளை மக்கள் உபயோகிக்க ஊக்குவித்து வருகிறது.

    தொழில்நுட்பம் நேர்மறையாக வளர வளர எதிர்மறையான காரணிகளும் வளர்ந்து விடுவது காலத்தின் கட்டாயமாகி விடுகிறது. ‘ஆன்லைன்’ பரிவர்த்தனைக்கு மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அதற்காகவே சில செல்போன் செயலிகளை மத்திய அரசே ஏற்படுத்தியும் கொடுத்துள்ளது.

    ஆனால் தற்போது பல தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ள பல்வேறு செயலிகளை அந்த நிறுவனங்கள் கொடுக்கும் வணிக நோக்கத்தினாலான இலவச சலுகைகளுக்கு ஆசைப்பட்டு தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் மூலம் பண பரிவர்த்தனை செய்கின்றனர். அவ்வாறு பதிவிறக்கம் செய்யும் போது, நம் வங்கி கணக்கு முதல் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) வரை அனைத்தும் அது நம்மிடம் கேட்டு சேகரித்துக்கொள்கிறது.

    இது பாதுகாப்பான நடைமுறை என தனியார் நிறுவனங்கள் வாக்குறுதி அளித்தாலும், என்றாவது ஒரு நாள் பிரச்சினை வராது என உறுதியாக கூறிவிட முடியாது என்று ‘சைபர் கிரைம்’ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். ‘ஆன்லைன்’ பரிவர்த்தனை செய்யும் போது, அந்தந்த வங்கிக்கு உண்டான இணையதள பக்கத்திலோ அல்லது வங்கியின் இலவச மொபைல் செயலியிலோ சென்று பரிவர்த்தனையில் ஈடுபடுவதே நல்லது. அரசு பரிந்துரைக்கும் செயலிகளை தவிர மற்ற பல செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு, அதன் மூலம் பண பரிவர்த்தனை செய்வது பாதுகாப்பான முறை அல்ல.

    இப்போது ஏறக்குறைய அனைத்து வங்கிகளும் ஓ.டி.பி. எனப்படும் குறைந்த நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் பாஸ்வேர்டு சேவையை தன் வங்கி பயனீட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. நான்கு இலக்க எண்ணாக இருந்த ஓ.டி.பி. பாஸ்வேர்டு தற்போது ஆறு இலக்க எண்ணாகவும் பல வங்கிகள் தன் சேவைத்திறனை அதிகரித்துள்ளது.

    ஓ.டி.பி.-யை எந்த காரணத்தை கொண்டும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்த கூடாது என வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வலியுறுத்தி வருகின்றன. எந்த வங்கியும் தன் வாடிக்கையாளர்களிடம் ஏ.டி.எம். கார்டு எண்ணையோ, பாஸ்வேர்டையோ தொலைபேசி மூலம் கேட்டதில்லை. கேட்கவும் மாட்டார்கள். ஆனால், விஷமிகள் சிலர் வங்கியிலிருந்து பேசுவதாக ஏமாற்றி ஏ.டி.எம். எண்ணை கேட்டறிந்து பணத்தை அபகரிப்பது ஆங்காங்கே நடக்கிறது. இதில் அவசியம் கவனம் தேவை.

    மேலும் சில ஹேக்கர்கள் செல்போனுக்கு லாட்டரி விழுந்தது, கடன் வேண்டுமெனில் கீழ்க்கண்ட லிங்கை கொடுக்கவும் என்பன போன்ற ஏமாற்று வேலைகளை பார்த்து வருகின்றனர். இதற்கும் தகுந்த விழிப்புணர்வு அவசியம் தேவைப்படுகிறது. உழைத்து சம்பாதிக்கும் பணத்தை நொடிப்பொழுதில் விட்டுவிடக் கூடாதவாறு பண பரிவர்த்தனையில் பாதுகாப்பான பரிவர்த்தனையில் ஈடுபடுவது நல்லது.

    செல்போன் தொலைந்து விட்டால், உடனே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க பட வேண்டும். மேலும் வேறொரு போன் மற்றும் மெயில் மூலமாகவும் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி, வேறு யாரும் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியாதபடி உடனே பிளாக் செய்து விட வேண்டும். சமீபகாலமாக சர்வதேச இணையத் திருடர்கள் செல்போனை ஹேக் செய்து தனிமனித தகவல்களான போட்டோக்கள், முகவரி, இமெயில் முகவரி, வங்கி தகவல்கள், செல்போன் எண் போன்றவற்றை நமக்கு தெரியாமலேயே எடுத்து வருகின்றனர்.

    சமீபத்தில் பேஸ்புக், ட்ரூகாலர் போன்ற பெரிய மென்பொருள் நிறுவனங்களிலும் இந்த ஹேக்கர்களினால் பயனீட்டாளர்களின் சில தகவல்களை திருடியது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்லைனில் எளிமையாக பண பரிமாற்றம் செய்ய வங்கிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. என்.இ.எப்.டி. மூலமாக பணம் அனுப்பினால் பரிவர்த்தனை முழுமை பெற குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் ஆகும். இதில் பண பரிவர்த்தனை வரம்பு, வங்கிகளைப் பொருத்து மாறுபடுகிறது. வங்கி வேலை நாட்களில் மட்டுமே என்.இ.எப்.டி. மூலமாக பண பரிவர்த்தனையை செய்ய முடியும். பரிவர்த்தனைகளுக்குக் குறைந்தது 2.5 முதல் 25 ரூபாய் வரை கட்டணம்.

    ஐ.எம்.பி.எஸ். என்ற சேவையில் பணம் அனுப்பினால் சில நிமிடங்களிலேயே பண பரிவர்த்தனை நடந்துவிடும். இந்த முறையில் ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 2 லட்சம் ரூபாய் வரையில் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.

    இந்த சேவையை பயன்படுத்தி 24 மணி நேரமும் பண பரிவர்த்தனை செய்ய முடியும். இதற்கு குறைந்தது 5 முதல் 15 ரூபாய் வரை சேவை கட்டணம். ரூ.2 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான தொகையை ‘ஆன்லைனில்’ பரிவர்த்தனை செய்ய ஆர்.டி.ஜி.எஸ் சேவை உதவுகிறது. அதிகபட்ச பரிவர்த்தனை என வரம்பு ஏதுமில்லை. இந்த சேவையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பண பரிவர்த்தனை செய்ய முடியும். குறைந்தது ரூ.25 முதல் ரூ.65 வரை பரிவர்த்தனை கட்டணம்.

    மொபைல் செயலி மூலம் பரிவர்த்தனை செய்யும் ஒரு முறையே யூ.பி.ஐ. இதன் மூலமாக 24 மணி நேரமும் பரிவர்த்தனை செய்ய முடியும். வங்கிக் கணக்கு, ஐ.எப்.எஸ்.சி. குறியீடு போன்றவை இந்த முறைக்கு தேவையில்லை. ஒரு நாளைக்குள் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரையில் பண பரிவர்த்தனை செய்ய முடியும். ஆனாலும் பல திட்டங்கள் இருப்பினும் பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவது, பணத்தை வங்கி கணக்கிலிருந்து எடுப்பது போன்ற சேவைகளை வங்கிக்கு நேரில் சென்றே அணுகுகின்றனர்.

    இரா. ராஜ்குமார், பேராசிரியர்,

    கணினி பொறியியல் துறை,

    தனியார் பல்கலைக்கழகம், சென்னை.
    Next Story
    ×