search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேவை நல்ல மனப்பான்மை
    X
    தேவை நல்ல மனப்பான்மை

    தேவை நல்ல மனப்பான்மை

    இன்றைய வாழ்வில் ஒருவரின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது அவரது அணுகுமுறைதான் என்பதில் எவருக்கும் ஐயம் இருக்காது.
    இன்றைய உலகில் அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு சொல் அணுகுமுறை அல்லது மனப்பான்மை என்பதாகும். இன்றைய வாழ்வில் ஒருவரின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது அவரது அணுகுமுறைதான் என்பதில் எவருக்கும் ஐயம் இருக்காது. சில நல்ல மனிதர்கள் கூட நல்ல நோக்கங்களுக்காகப் போராடும்போது எதிர்பாராமல் தோல்விகளைச் சந்திப்பதற்கு அவர்களது அணுகுமுறைகளே காரணமாகி விடுகின்றன. அணுகுமுறை என்பது ஒருவர் ஒரு விஷயத்தை, ஒரு மனிதரை, ஒரு நிகழ்ச்சியைக் குறித்து என்ன நினைக்கிறார்? எப்படிப்பட்ட முடிவை மேற்கொள்கிறார்? ஏன் அத்தகைய முடிவை எடுக்கிறார் என்பதுடன் தொடர்புடையதாகும்.

    ஒருவர் தனது வாழ்க்கையில் மேற்கொள்ளும் முடிவு அவரது அணுகுமுறையுடன் தொடர்புடையது. இதனை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். மகாத்மா காந்தியடிகள் தம் சிறு வயதில் அரிச்சந்திரன் நாடகத்தை முதன்முதலாகப் பார்த்தபோது “வாழ்க்கையில் இனிமேல் எப்போதும் உண்மையே பேசுவது” என்ற முடிவை உறுதியாக மேற்கொண்டார் என்பதை நாம் அறிவோம். இது நேர்மறையான அணுகுமுறை கொண்ட ஓர் ஆளுமையின் மனநிலை; இந்த மனநிலைதான் அவரை உலகமே போற்றும் நிலைக்கு உயர்த்தியது.

    அதே அரிச்சந்திரன் நாடகத்தைக் காணும் ஒருவர் “ஒரு பொய் சொல்ல மறுத்ததற்காக ஒருவன் நாடு, சொத்து, மக்கள், மனைவி என எல்லாவற்றையும் இழந்து துன்புற்றான்; எனவே இனிமேல் பொய் மட்டும் தான் பேசுவது” என்று முடிவெடுத்தால் அது எவ்வளவு எதிர்மறையாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஒரே விஷயம் ஒவ்வொரு மனிதரின் அணுகுமுறைக்கும் பார்வைக்கும் ஏற்ப மாறுபடுவதை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். எனவேதான் மனித வள மேம்பாட்டுச் சிந்தனையாளர்கள், ஒருவரின் அணுகு முறையே அவரது வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கிறது என்று கூறுவார்கள்.

    ஒருவர் நம்முடன் உரையாடும்போது ஒரு சில சொற்களின் மூலமாகவே அவரது அணுகுமுறை எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒருவர் அவரது நண்பரிடம் தான் புதிதாக வாங்கிய விலையுயர்ந்த பேனாவைக் காட்டிய போது, “இவ்வளவு அதிக விலை கொடுத்துப் பேனாவை வாங்கலாமா? அது தொலைந்து போய் விட்டால் எவ்வளவு நஷ்டம்” என்று கூறினால், கூறுபவர் எதிர்மறை மனநிலை உடையவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்; இதையே அவர் “பேனா மிக நன்றாக இருக்கிறது; பத்திரமாக வைத்துக் கொண்டு நிறைய எழுது” என்று கூறினால் அது நேர்முறை மனநிலை. எனவே எதிர்மறை அணுகுமுறை உள்ளவர்களிடம் நாம் எச்சரிக்கையாகப் பழக வேண்டும்; ஏனென்றால் அவர்கள் நம்மையும் எதிர்மறை அணுகுமுறை உள்ளவர்களாக விரைவில் மாற்றி விடுவார்கள் அல்லது நிம்மதி இழக்குமாறு செய்து விடுவார்கள்.

    ஒரு மனிதனுக்குரிய அணுகுமுறை இளம் வயதிலேயே அவனது சுற்றுப்புறச்சூழல்களின் காரணமாக ஏற்பட்டு விடுகிறது. பெற்றோர், தங்களின் பிள்ளை உலகம் போற்றும் மனிதனாக வளர வேண்டும் என்று நினைத்தால் முதலில் தாங்கள் நேர்மறை அணுகுமுறை கொண்டவர்களாக வாழ வேண்டும்; லஞ்சம் வாங்கும் தந்தையை காணும் பிள்ளைகள் வளர்ந்த பிறகு நிச்சயம் லஞ்சம் வாங்கத் தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் சமூக கேடர்களாகவும் மாறிவிடுவார்கள். கம்பராமாயணத்தில் மந்தாரை எனும் கூனியால் நல்ல கைகேயியின் மனமும் கெட்டது. பாரதத்தில் கெட்ட சகுனியின் தொடர்பால் துரியோதனன் மேலும் சீரழிவை அடைந்தான். எனவே நல்ல அணுகுமுறை ஒரு மனிதனுக்கும் நாட்டுக்கும் மிக இன்றியமையாதது.

    நேர்மறை அணுகுமுறையை நாம் எப்போதும் வளர்த்துக்கொள்ள வேண்டும்; எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். ‘வாழ்க்கை முழுவதும் நேர்மறை அணுகுமுறையைப் பின்பற்றி இந்த ஒரு முறைதானே சிறு தவறு செய்தால் உலகம் புரண்டு விடவா போகிறது’ என்று நல்ல அணுகுமுறையைக் கைவிட்டு விடக்கூடாது. ஒரு சிறந்த கட்டிடக் கலைஞர் பல ஆண்டுகள் ஒரு ஒப்பந்தக்காரரிடம் நல்ல முறையில் வேலை செய்து பலமான அழகிய கட்டிடங்களைக் கட்டி முடித்தார்;

    வேலை செய்தது போதும், இனி ஓய்வு எடுக்கலாம் என்று அவருக்குத் தோன்றியதும் முதலாளியிடம் தனது எண்ணத்தைத் தெரிவித்தபோது, முதலாளி மேலும் ஒரே ஒரு வீட்டை மட்டும் முடித்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டினார்; கட்டிடக் கலைஞர் வேண்டா வெறுப்பாக அக்கட்டிடத்தைக் கட்டினார்; அது அவரால் முன்னர் கட்டப்பட்ட வீடுகளைப் போல இல்லாமல் பலவீனமாக அமைந்தது. வீட்டைகட்டி முடித்த செய்தியை முதலாளியிடம் தெரிவித்ததும் கட்டிட மேஸ்திரியை அழைத்துக் கொண்டு கட்டி முடித்த வீட்டுக்குச் சென்ற முதலாளி அவ்வீட்டின் சாவியை வீட்டைக் கட்டியவரிடம் கொடுத்து “இது உங்களுக்குத்தான்; என் அன்பளிப்பு” என்று கூறியதும் கட்டிடக் கலைஞருக்கு தலை சுற்றியது; “முதலிலேயே தெரிந்திருந்தால் மற்ற வீடுகளைப் போல இதையும் நன்றாகக் கட்டியிருப்பேனே” என்று மனம் நொந்து நின்றார். நல்ல அணுகுமுறையைக் கைவிட்டால் ஏற்படுவது இதுதான்.

    நேர்முகமான நல்ல அணுகுமுறைகள் உடையவர்களுக்குத் தடைகள் ஏற்படலாம்; ஆனால் அவை நிரந்தரமானவையல்ல; தடைகள் மாறி வெற்றிகள் ஏற்படும். ஒரு அரசன் தான் வழக்கமாகப் பயணம் செய்யும் ராஜபாட்டையில் ஒரு கனமான பாறையை நடுவில் வைத்து விட்டு மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்தான்; தன் நாட்டு மக்களின் மன நிலைகளைப் புரிந்து கொள்வதற்காக இச்சோதனையை அவன் ஏற்பாடு செய்திருந்தான். அந்த வழியாக முதலில் சில செல்வர்கள் சென்றனர்; அவர்கள் பாறையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு விலகிச் சென்றனர். பின்னர் சில வணிகர்கள் கூட்டமாக வந்தனர்; அவர்களும் பாறையை விட்டு விலகிச் சென்றனர்.

    பாறை அப்படியே சாலையில் கிடந்தது. சிறிது நேரம் கழித்து இரண்டு உழவர்கள் அந்தவழியே வந்தார்கள்; அவர்கள் தங்கள் கையில் இருந்த உணவு மூட்டைகளை ஓரத்தில் வைத்து விட்டுப் பாறையை நகர்த்திச் சென்று ஓரத்தில் நிறுத்தினார்கள்; திரும்பி வந்து தங்கள் மூட்டையைத் தேடிய போது அவற்றுக்குப் பதிலாகத் தங்கக் காசுகள் நிறைந்த இரண்டு பைகள் இருந்தன; “அவற்றில் உங்கள் நேர்முக அணுகுமுறைக்கு அரசன் தரும் பரிசு” என்று எழுதப்பட்ட துண்டுச் சீட்டுகள் இருந்தன. உழவர்கள் அவற்றை எடுத்துக் கொண்டு சென்றனர் என்று ஒரு கதை கூறப்படுவதுண்டு. இதுவும் நேர்மறை அணுகுமுறையை வற்புறுத்துவதற்குக் கூறப்படும் ஒரு கதை தான்.

    ஒரு மனிதனின் வெற்றிக்கும், தோல்விக்கும் அவனது நல்ல மனப்பான்மையும், அணுகுமுறையும்தான் காரணம் என்பதை நமது வள்ளுவப் பேராசான் ஒப்புக்கொண்டு கூறுகிறார். ஒருவரது பெருமைக்கும், சிறுமைக்கும் அவரது செயல்களே காரணம் என்று அவர் கூறுகிறார்.

    முனைவர் ம.திருமலை,

    முன்னாள் துணைவேந்தர்,

    தமிழ்ப் பல்கலைக்கழகம்.
    Next Story
    ×