search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா...
    X
    வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா...

    வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா...

    சுற்றுலா என்பதும் நமது வாழ்க்கை முறையில் அத்தியாவசியமாகிவிட்டது. சுற்றுலா செல்வது மகிழ்ச்சியாகவும், சிறந்த அனுபவமாகவும் மாற சில பொருளாதார திட்டமிடுதல்கள் அவசியம்.
    நமது வாழ்க்கை முறை எவ்வளவோ மாறிவிட்டது. செலவு செய்வதன் கண்ணோட்டமும் மாறியுள்ளது. அத்தியாவசிய செலவுகள் தவிர, மகிழ்ச்சிக்காகவும் தாராளமாக செலவு செய்கிறோம். அந்த வகையிலான ஒரு செலவுதான் சுற்றுலாச் செலவு. கோடைக் காலம் தொடங்கிவிட்டால் எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற மனநிலைக்கும் வந்துவிட்டோம்.

    தனிக்குடும்பமும், நகர வாழ்க்கை முறையும் சேர்ந்து குழந்தைகளை ‘லீவு போரடிக்கும்பா’ என்று சொல்ல வைத்துவிட்டது. அதனால்தான் சுற்றுலா என்பதும் நமது வாழ்க்கை முறையில் அத்தியாவசியமாகிவிட்டது. சுற்றுலா செல்வது மகிழ்ச்சியாகவும், சிறந்த அனுபவமாகவும் மாற சில பொருளாதார திட்டமிடுதல்கள் அவசியம். குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலா சிறப்பாக அமைய திட்டமிட்டு செயல்படுவது முக்கியம். உள்நாட்டு சுற்றுலா என்றால் அதிகபட்சமாக ஏ.டி.எம். கார்டில் பணம் இருந்தால் போதும். நினைத்த நேரத்தில் கிளம்பிவிடலாம்.

    ஆனால் வெளிநாட்டுச் சுற்றுலா அப்படி செல்ல முடியாது. முதலில் சுற்றுலாவுக்கான நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். பொழுதுபோக்கு, ‌ஷாப்பிங், குழந்தைகளுக்கான சுற்றுலா, தேனிலவு என சுற்றுலா செல்வதில் தெளிவு இருந்தால் அதற்கான செலவை மதிப்பிட முடியும். பட்ஜெட்டை பொறுத்தும் திட்டமிடலாம்.

    அந்தந்த நாடுகளில் சீசன் காலத்துக்கு ஏற்ப செல்ல வேண்டும். இல்லையென்றால் வெட்டிச் செலவாக உங்கள் பயணம் அமைந்துவிடும். மேலும் நமக்கு கிடைத்த விடுமுறையை மட்டும் கணக்கில் கொண்டு திட்டமிடக்கூடாது. செல்ல விரும்பும் நாட்டின் விடுமுறை தினங்களையும் கவனிக்க வேண்டும். ஒரு இடத்தை பார்க்க விரும்புகிறோம் என்றால், அந்த தேதியில் அங்கு விடுமுறை விடப்பட்டிருந்தால் சுற்றுலா சொதப்பலாகிவிடும். எனவே சுற்றுலா சீசனுக்கு ஏற்ப திட்டமிட்டால் நமது பட்ஜெட்டை கட்டுப்படுத்தலாம்.

    வெளிநாட்டு சுற்றுலாவில் இந்திய ரூபாய் செலவிடுவதற்கான தேவை இருக்காது. எனவே பணத்தை வங்கியில் இருப்பு வைத்துக் கொண்டு இன்டர்நே‌‌ஷனல் மணி கார்டு வாங்கிக்கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ப அந்த நாட்டின் கரன்சிகளாக மாற்றி வைத்துக் கொள்ளலாம். மேலும் அந்த நாட்டின் பண மதிப்புக்கு நிகரான ரூபாயின் மதிப்பை கணக்கிட்டு வங்கி இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டால் விமான கட்டண சலுகைகளையும் பயன்படுத்தலாம். நாடுகளின் சீசனுக்கு ஏற்பவோ அல்லது சீசன் அல்லாத நாட்களிலோ விமான கட்டணம் மாறுபடும்.
    Next Story
    ×