search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெற்றி கொடுக்கும் வெள்ளைக் கொடி
    X
    வெற்றி கொடுக்கும் வெள்ளைக் கொடி

    வெற்றி கொடுக்கும் வெள்ளைக் கொடி

    பொதுவாக வெள்ளைக் கொடி காட்டப்பட்டு விட்டால் எதிர் தரப்பினரும் அதற்கு ஒத்துக் கொண்டு சமாதானமாக போவதே இயல்பு.
    வெள்ளைக் கொடி பற்றி தெரிந்திருப்பீர்கள். படங்களில் பார்த்திருக்கலாம் இரண்டு கும்பல்களுக்கிடையே போட்டி நிலவும் போது, சண்டைகள் உச்சம் தொடும் போது, அதை தொடர விரும்பாத அல்லது தொடர முடியாத ஒரு கோஷ்டி வெள்ளைக் கொடியை காட்டுவர்கள். அதாவது நாங்கள் சமாதானத்திற்குத் தயாராக இருக்கிறோம் என்பதாக.

    பொதுவாக வெள்ளைக் கொடி காட்டப்பட்டு விட்டால் எதிர் தரப்பினரும் அதற்கு ஒத்துக் கொண்டு சமாதானமாக போவதே இயல்பு. வெள்ளைக் கொடி என்றவுடன் தொண்டைமானுக்கும் அதியமானுக்கும் இடையில் ஒளவையார் நடத்திய சமாதான பேச்சு வார்த்தையை அறியாதவர்கள் இருக்க முடியாது. போரில் மிக தேர்ந்த வல்லமையுடைய அதியமான், போரில் அனுபவம் இல்லாத, அதன் சாதக பாதகங்களை கொஞ்சமும் உணராமல், தன்னுடன் போருக்குத் தயாராக இருந்த தொண்டைமானிடம் வெள்ளைக் கொடிக்கு தயாராகிறார்.

    போரால் இரு நாட்டுக்கும், மக்களுக்கும் பெரும் சேதமும் கஷ்டமும் ஏற்படுமே, அதனால் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகள் தானே அதிகம் இருக்கும் என சாத்வீகம் உணர்ந்த ஒளவையார் இரு நாட்டுக்கும் தூது சென்று, நடக்கவிருந்த பெரும் போரை தடுத்து நிறுத்தி, அவர்களை வெள்ளைக் கொடி ஏற்ற செய்கிறார். இரு நாடுகளும் சுபிட்மாக வளம் பெறுகிறது. வீரத்தின் உச்சமே சமாதானம் என்பதை இந்த சரித்திரம் நமக்கு சொல்லித் தருவதோடு சமாதானத்தின் பலனையும் சொல்கிறது.

    போர் என்றவுடன் இப்படி ஏதாவது சரித்திர நிகழ்வுகள் நம் நினைவுக்கு வந்தாலும் நம் எல்லோருமே அன்றாடம் ஏதாவது ஒன்றுடன் ஏதாவது ஒரு வகையில் போர் தொடுத்துக் கொண்டும் போராடிக் கொண்டும் தான் இருக்கின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இன்னும் சாதிக்க வேண்டி இருக்கிறது என்னும் உங்கள் எண்ணத்துடன் எத்தனை பேர் போராடுகிறீர்கள். சிலருக்கு தங்களுடைய அலுவலக வேலையே பெரும் போராட்டமாகத் தோன்றும். சிலருக்கு உறவுகள் போராட்டமாக இருக்கும். சிலருக்கு தன்னுடைய நண்பர்களுடன், சேர்ந்து வேலை செய்பவர்களுடன் எப்போதும் போராட்டமாகவே இருக்கும். சொந்த பந்தங்கள் என யாரிடமும் எதற்காகவும் எதை விட்டுக் கொடுத்தாலும் தோற்றுப் போனது போல் இயலாமையாகவே தோன்றும். அதுவே மனதிற்குள் பெரும் போராட்டமாக சுழலும்.

    அவ்வளவு ஏன் எல்லாவற்றையும் துறந்து கண்களை மூடி தியானத்தில் இருக்கும் போது கூட மனதை அமைதி படுத்த வேண்டும் என்னும் எண்ணமே மனஅமைதி இல்லாமல் பலவிதமான எண்ண அலைகளோடு போராட செய்யும். நம்முடைய சக்திகள் எல்லாம் இதிலே வீண் போய்க் கொண்டிருக்கின்றன என்பதை அறியாமல் இப்படி எத்தனையோ போராட்டங்கள் நாம் அறிந்தும் அறியாமலுமாக நம் அன்றாட வாழ்விலேயே நம்க்குள்ளேயே நடந்து கொண்டிருக்கின்றன.

    பொதுவாக ஒருவருடைய மனது தன்னை சுற்றி நிகழும் எல்லாவற்றையும் தன் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வர முயலும். இது தான் மனதின் இயல்பு. அது ஒருவனுக்கு மகிழ்ச்சியும் ஒரு ஆளுமையும் கிடைக்க செய்யவதற்காக மனம் செய்யும் மாயம். நீங்கள் ஒருவரை அதிகம் விரும்புகிறீர்கள்.. ஆனால் அது பலனற்று போகிறது. நீங்கள் அவரை மறக்க நினைக்கிறீர்கள் அல்லது நீங்கள் ஒருவரை நம்பி அலாதியான அன்பும் பரிவும் வைத்து அவருக்கு எல்லாம் செய்கிறீர்கள், ஆனால் அவர் உங்களுக்கு துரோகம் செய்து விடுகிறார். உங்கள் மனம் முழுதும் அவமானமும் சுயபச்சதாபமும் ஏமாற்றமும் அவமதிப்புமாக சூழ்கிறது. அவரைப் பற்றியும், நடந்த நிகழ்வுகளையும் உங்களை விட்டும் தூக்கி எறிய நினைக்கிறீகள். ஆனால் உங்கள் மனம் அதையே மீண்டும் மீண்டும் எண்ணுகிறது, உங்களுக்குள் இது பெரும் போராட்டமாக இருக்க உங்கள் மனமும் உடலும் சோர்ந்து விடுகிறது.

    இது அந்த நிகழ்வினால் இல்லை. தவிர, எதிர்மறை நிகழ்வான இதைப் பற்றி உங்கள் மனம் எண்ணுவதால் மட்டுமல்ல, அதை எண்ணக் கூடாது எனும் உங்கள் போராட்டம் அவரை தவறாக நினைக்கவும் முடியாமல் நன்றாக எண்ணவும் முடியாமல் பெரும் பாடாக உங்களை சுழற்றிப் போடுகிறது. நமக்கு வேண்டிய அனுபவங்கள் மட்டும் நமக்கு நடக்க வேண்டுமென்றும் நமக்கு வேண்டாத அனுபவங்கள் புறந்தள்ளப்பட வேண்டியவை, அவை வருந்தி வருந்தி உசுப்பேத்தக் கூடியவை என்றே இயல்பாக தோன்றுகிறது. அதனால் அந்த எண்ணங்களை நினைக்கக் கூடாது என்று அதை மறப்பதற்கும் அதை கண்டு கொள்ளாமல் விடுவதற்கும் அதை தவிர்ப்பதற்கும் மனம் போராடுகிறது.

    நீங்கள் எதனுடன் போராடுகிறீர்களோ அது முழுமையாக உங்களிடம் நிரம்பி விடும். அது இறுக்கமான சூழலையே ஏற்படுத்தும். நீங்கள் சுதந்திரமாக உணர மாட்டீர்கள். அது வளர்ச்சியைத் தராமல் இருப்பை ஏற்றுக் கொள்ளும் முயற்சியாகவே முடியும் என்கிறது மனஇயல் தவிர, ஒவ்வொன்றுக்கும் மனம் போராடுவது கற்பனைக்கெட்டாத அளவு உங்கள் சக்தியை உறிஞ்சும். அதனால் மீண்டும் மீண்டுமான எண்ண சுழற்சியில் இருந்து கொண்டு முன்னேற முடியாமல் போகிறது. அதை விட்டு விட்டு நகரவும் முடியாமல் மனம் தவிக்கிறது.

    பொதுவாக விட்டுக் கொடுப்பது என்பதை பலவீனம் என்றும் தோல்வி என்றும் பதிய வைக்கப்பட்டுள்ளதால் நீங்களே விரும்பினாலும் பெரும்பாலான விசயங்களில் பிறர் நம்மை இழிவாகப் பார்ப்பார்களோ என்ற எண்ணம் மேலோங்கி வைராக்கியமாக பிடிவாதமாக உங்களை இருக்க செய்கிறது. நமக்கு பிடிக்காத ஒன்று நடக்கும் போது மனம் அதை நமக்கு பிடித்த மாதிரி மாற்ற நினைக்கிறது. அதை யாராவது வந்து மாற்றி விட மட்டார்களா என்று துடிக்கிறது. அது அப்படியே ஏதோ ஒரு தருணத்தில் அல்லது ஒரு சூழலில் நம்மால் இதற்கு மேல் போராட முடியாது என எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு எங்காவது ஓடி விடத் துடிக்கும். நான் சரண்டர் என வாய் முணுமுணுக்கும்.

    பெரும்பாலும் நம்முடைய எல்லாயுத்திகளும் பயனற்று போகும் போது விட்டுக் கொடுப்பதே சரண்டர் என்று நினைக்கிறோம். சரண்டர் ஆகும் போது பொதுவாக நமக்கு எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையற்று போயிருக்கும். நாம் விரும்பியது எதுவும் நடக்காது என்றே தோன்றும். நமக்கு சப்போர்ட் பண்ணுவதற்கு ஆள் இல்லை என்றே படும். யாராவது நமக்கு வழிகாட்டக் கூடும் எனும் நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும். அதனால் சரண்டர் என்பது உங்கள் அடையாளத்தையே நீங்கள் விட்டுக் கொடுப்பதாக ஒரு இயலாமையாக ஒரு எதிர்மறை எண்ணமாக மனம் அழுத்தும்.

    ஆனால் உண்மையில் ஒன்றில் உங்களால் முடியாது என நீங்கள் உணரும்போது அதை உங்களை விட சுப்ரீம் பவரிடம் இந்த பிரபஞ்சத்திடம் நீங்கள் ஒப்படைப்பதே சரண்டர் என்பதை புரிந்து கொண்டால் அங்கு நிம்மதியும் அமைதியும் நிறையும். ஏதோ நம்மை அழுத்திக் கொண்டு இருந்த ஒன்று விடுபட்டது போல் இருக்கும். அப்படி நீங்கள் சரண்டர் ஆகும் போது, உங்களுடைய இருப்பை நீங்கள் உணர்ந்து கொள்ளும் போது, உங்களுடைய போராட்டங்கள் மட்டும் அங்கு முடியவில்லை. உங்களுக்கான புதிய சந்தர்ப்பங்களும் அங்கு திறக்கிறது.

    www.facebook.com/fajilaazad.dr
    Email:fajila@hotmil.com
    Next Story
    ×