search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நூபூர் பாட்னி, வரைபடம் மூலம் விளக்கும் காட்சி.
    X
    நூபூர் பாட்னி, வரைபடம் மூலம் விளக்கும் காட்சி.

    பெண்களுக்கு வரைபட பாதுகாப்பு

    எந்தெந்த பகுதிகளில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகமாக நடக்கிறது என்பதை வரைபடம் மூலம் சுட்டிக்காட்டி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், நூபூர் பாட்னி.
    பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்த வண்ணம்தான் இருக்கிறது. எந்தெந்த பகுதிகளில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகமாக நடக்கிறது என்பதை வரைபடம் மூலம் சுட்டிக்காட்டி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், நூபூர் பாட்னி. கல்லூரி மாணவியான இவர் பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.

    பெங்களூரு நகரில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பகுதிகளை வரைபடமாக வரைந்து அங்கு நடந்த சம்பவங்களை குறிப்புகளாக எழுதி காட்சிப்படுத்தி இருக்கிறார். இத்தகைய சம்பவங்களுக்கு எந்தவகையிலும் பெண்கள் காரணமல்ல என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ‘இது என் தவறு அல்ல’ என்று தனது வரைபட திட்டத்திற்கு பெயரிட்டிருக்கிறார். நெரிசலான மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நடக்கும் பாலியல் கொடூரங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து இந்த வரைபடத்தை உருவாக்கி இருக்கிறார்.

    ‘‘இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் யாரை அணுகுவது, அவர்களிடம் தாங்கள் அனுபவித்த துயரங்களை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளலாமா? என்று குழப்பமடைந்துவிடுகிறார்கள். புகார் அளிக்கவும் முன்வருவதில்லை. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடனே நான் இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறேன்.

    இந்த வரைபடம் பாலியல் துன் புறுத்தல் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும் தளமாக அமையும். எந்த இடத்தில் குற்றச்செயல் நடந்தது? அங்கு எந்த மாதிரியான மாற்றங்கள், நடவடிக்கைகள் தேவை, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்குகிறது. இது காவல் துறையினருக்கு உதவக்கூடும். பெண்களும் எங்கிருந்தாலும் பாதுகாப்பை உணர முடியும்’’ என்கிறார், நூபூர்.

    தனது கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள பகுதி ‘ரேபிஸ்ட் லேன்’ என்று மாணவர்களால் அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார். ‘‘அங்கு தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. பேருந்து வசதிகளும் முறையாக இல்லை. அந்த பகுதி சமூக விரோத சக்திகளுக்கு மறைவிடமாக விளங்குகிறது’’ என்கிறார். நூபூரின் முயற்சியை பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாராட்டி இருக்கிறார். ‘‘பெண்களுக்கு துன்புறுத்துதல் அதிக அளவில் நடைபெறும் இடங்கள் பற்றிய தகவல்களை நூபூர் தனது நண்பர் குழுவுடன் இணைந்து சேகரித்து வரைபடம் உருவாக்கி இருக்கிறார். பெங்களூரு நகர பாதுகாப்பு திட்டத்தின் படி கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்.

    இதற்கிடையே தெலுங்கானாவில் பெண் டாக்டர் பிரியங்கா கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தெலுங்கானா போலீசார் பெண்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.

    பெண்கள் வெளியே செல்லும் போதும், வீட்டுக்கு திரும்பி வரும்போதும் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு போனில் தகவல் தெரிவிக்க வேண்டும். முக்கியமாக இறுதியாக எந்த இடத்தில் இருக்கிறோம் என்ற தகவலை சொல்ல வேண்டும்.

    ஆட்டோவிலோ, டாக்சியிலோ பயணம் செய்தால் அவற்றின் நம்பரை குறித்துக்கொள்ள வேண்டும். அதனை புகைப்படம் எடுத்தும் குடும்பத்தினருக்கு பகிர்ந்துகொள்ள வேண்டும். டிரைவர் இருக்கைக்கு பின்புறத்தில் டிரைவரின் புகைப்படம், அவரை பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அறிமுகம் இல்லாத இடத்திற்கு சென்றால், அந்த இடத்தை பற்றிய தகவல் களையும், திரும்பி வரும் பாதையையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிற்க நேர்ந்தால் அருகில் உள்ள கடைகள் அல்லது மக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்லுங்கள்.

    உங்களுக்கு பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டாலோ, சந்தேகத்திற்கிட மான நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டாலோ உங்களை சுற்றியிருக்கும் பயணிகளிடம் உதவி கேட்க தயங்காதீர்கள்.

    பயணிகள் யாரும் இன்றி தனியாக பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் போலீசாரிடம் பேசுவதுபோல் உறவினர்களிடம் பேசுங்கள். அதுபோல் நீங்கள் பயணிக்கும் வாகனம், உங்களை சுற்றி இருக்கும் நபர்களை பற்றிய விவரங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அது அவர்களை பயமுறுத்தும்.

    பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்தால் சத்தமாக பேசுங்கள். தேவைப்பட்டால் கூச்சலிடுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.

    மற்றவர்கள் யாரேனும் உதவி செய்ய முடியாத சூழலில் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் கூச்சலிடுங்கள். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியை நோக்கி வேகமாக ஓடுங்கள்.

    உங்களுக்கு அவசர உதவி தேவை என்றால் 100-க்கு டயல் செய்வதற்கு எப்போதும் தயாராக இருங்கள்.
    Next Story
    ×