search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    விலை மதிப்பில்லாத மாணவர்களின் உயிர்களை இழக்கலாமா?
    X
    விலை மதிப்பில்லாத மாணவர்களின் உயிர்களை இழக்கலாமா?

    விலை மதிப்பில்லாத மாணவர்களின் உயிர்களை இழக்கலாமா?

    இப்போதெல்லாம் சில நிகழ்வுகளில் பிரச்சினைகளை எதிர்நோக்க துணிவில்லாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சோகமான சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.
    எதிர்காலத்தை நோக்கிச்செல்லும் மாணவர்களுக்கு அறிவாற்றலை விசாலப்படுத்தி கல்வி கற்றுக்கொடுக்கும் கோவில்கள்தான் கல்லூரிகள். பள்ளிக்கூட பருவத்தில் 12 ஆண்டுகளை கழித்துவிட்டு, கல்லூரிக்குள் கால்பதித்தவுடன் பலர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினாலும், ஒருசிலர் திக்குமுக்காடி போய்விடுகிறார்கள்.

    இந்தநேரத்தில் திசை தெரியாமல் காட்டில் சிக்கிக்கொண்ட ஒருவனை, ‘நான் இருக்கிறேன் பயப்படாதே’ என்று ஒரு வழிகாட்டி அழைத்துச்செல்வதுபோல, கல்லூரி ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் சில நிகழ்வுகளில் பிரச்சினைகளை எதிர்நோக்க துணிவில்லாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சோகமான சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.

    சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி.-யில் பட்டமேற்படிப்பு முதலாம் ஆண்டு படித்த கேரளாவைச் சேர்ந்த 19 வயது மாணவி பாத்திமா லத்தீப் தூக்குப்போட்டு இறந்துவிட்டார். கல்லூரி பேராசிரியர்தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று செல்போனில் ஒரு செய்தியை பதிவிட்டுவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய தந்தை, தமிழக முதல்-அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி., எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரை சந்தித்து, தன் மகள் சாவுக்கு உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    என் மகள் பாத்திமா போல, இன்னொரு பாத்திமாவுக்கு இந்த நிலை வரக்கூடாது என்று உருக்கமாக சொன்னது, எல்லோருடைய கண்களிலும் இருந்து கண்ணீரை வரவழைத்தது. இந்த சம்பவம் நடந்த நாட்களிலேயே திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி, ஊட்ட சத்தியியல் முதலாம் ஆண்டு படித்துவந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஷபாரா பர்வீன் என்ற 18 வயது மாணவியும் தனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாததால் பாடத்தை படிக்க முடியவில்லை என்ற காரணத்தால் விடுதி அறையில் பாத்திமாவைபோலவே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு பின்பு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மற்றொரு 19 வயது மாணவி, தன் துறை தலைவர்மீது குற்றம்சாட்டி தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்.

    முழுக்க முழுக்க தாய்மொழி வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் ஆங்கில வழி பாடத்தை படிக்க பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே, பள்ளிக்கூடங்களிலும், கல்லூரியில் முதலாம் ஆண்டும் ஆங்கிலத்தில் தனி பயிற்சி அளிக்கப்படவேண்டும். மேலும் மனோதத்துவ ரீதியாக அவர்களுக்கு வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலை அளிக்க நிபுணர்களை கொண்டோ, ஆசிரியர்களை கொண்டோ பயிற்சி அளிக்கவேண்டும்.

    இதுமட்டுமல்லாமல், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களில் 5 அல்லது 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாக நியமித்து அவர்களை தந்தை ஆசிரியர் என்றோ, தாய் ஆசிரியை என்றோ அழைத்து தான் பெற்ற பிள்ளைகளைபோல, அந்த மாணவர்களை கண்ணும் கருத்துமாக பார்க்கச் செய்யவேண்டும். மாணவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், பெற்றோரிடம் சொல்லுவதுபோல, அந்த ஆசிரியரிடம் சொல்லச் செய்யவேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரும் வாழ்க்கையில் மேடு பள்ளம், உயர்வு தாழ்வு எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்ளும் வகையில், அவ்வப்போது தனியாக வகுப்புகள் நடத்தி வாழ்வியல் பாடங்களை கற்றுக்கொடுக்கவேண்டும்.

    பள்ளிக்கூட இறுதி வகுப்புகளிலேயே பெற்றோர்களும், ஆசிரியர்களும், ‘அவர்களிடம் நீங்கள் கல்லூரிக்கு போகும்போது ஒரு புதிய உலகத்தை காண்பீர்கள். அங்கு உங்கள் பாடமும், கற்பிக்கும் முறைகளும் சற்று வித்தியாசமாக இருக்கும். அதை கண்டு மலைத்துவிடக்கூடாது. சற்று கூடுதலாக உழைத்தால் எல்லாமே உங்களுக்கு எளிதாக புரிந்துவிடும். உங்களுக்குள்ள சந்தேகங்களை எல்லாம் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்’ என்று கூறி, முதலிலேயே அவர்களை தயார்படுத்தி கல்லூரி வாழ்க்கைக்குள் அனுப்பவேண்டும். மொத்தத்தில், மாணவர்கள் இந்த தற்கொலை முடிவுக்குள் போகாமல் தடுப்பது, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கையில்தான் இருக்கிறது. இனிமேலும் விலை மதிப்பில்லாத மாணவர்களின் உயிர்களை வீணாக இழந்துவிடக்கூடாது. 
    Next Story
    ×