search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    திருமணத்தின் புனிதம் காப்பாற்றப்படுமா?
    X
    திருமணத்தின் புனிதம் காப்பாற்றப்படுமா?

    திருமணத்தின் புனிதம் காப்பாற்றப்படுமா? கரைந்துபோகுமா?

    கணவன்- மனைவி இடையேயான பாலியல் வாழ்க்கை என்பது கண்ணாடிப் பாத்திரத்தை போன்றது. அதை ரொம்பவே இறுக்கிப் பிடிக்கக்கூடாது. பிடித்தால் நொறுங்கிப்போய்விடும் ஆபத்து உண்டு.
    நாம் நமது பண்பாடுகளில் சிலவற்றை மிக சிறந்ததாக கூறிக்கொண்டிருக்கிறோம். அதில் ஒன்று, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது! மனைவி அல்லது கணவன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்வதை நாம் அனுமதிப்பதில்லை. குறிப்பாக திருட்டுத்தனமான பாலியல் உறவுகளை நாம் குற்றமாகவே கருதுகிறோம்.

    அதுபோல் அமெரிக்கர்களில் 85 சதவீதம் பேரும், இங்கிலாந்து மக்களில் 75 சதவீதம் பேரும் திருமணத்துக்கு பின்பு வெளியே வைத்துக்கொள்ளும் பாலியல் உறவை தவறானது என்று சுட்டிக்காட்டுகிறார்கள். கட்டிய மனைவிக்கு (அல்லது கணவனுக்கு) எப்போதும் உண்மையாக இருக்கவேண்டும் என்றும், நம்பிக்கைத் துரோகம் செய்யக்கூடாது என்றும் கூறுகிறார்கள். இப்படி அவர்கள் கூறினாலும் இ்ந்த இரு நாடுகளிலும் விவாகரத்துகள் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கின்றன.

    அமெரிக்கா, இங்கிலாந்துடன் ஒப்பிடுகையில் இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஐந்தில் இரண்டு பேர்தான் ‘வெளி உறவு’ தவறு என்கிறார்கள். ஆனால் இந்த நாடுகளில் விவாகரத்து சற்று குறைவாகத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதை அவர்கள் ஆதாரமாகக்காட்டி, ‘பாலியல் உறவு விஷயத்தில் ரொம்பவும் இறுக்கிப் பிடிக்காமல், கொஞ்சம் ‘கண்டும் காணாமலும்’ போகிற போது குடும்ப வாழ்க்கை சுமுகமாகச் செல்லும்’ என்று சொல்கிறார்கள்.

    இது மாதிரியான சிந்தனை நம் நாட்டுக்கு எந்த அளவு சரிப்பட்டு வரும் என்பது விவாதத்துக்குரிய விஷயம். ஆனால் மேலைநாடுகளில் இந்த நோக்கில் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை அலசும் படங்களும், புத்தகங்களும் அங்கு வரவேற்புப் பெறத் தொடங்கியுள்ளன. அத்தகைய புத்தகங்களை அங்குள்ள மக்கள் விரும்பிப் படிக்கவும், விவாதிக்கவும் செய்கிறார்கள்.

    அந்த வரிசையில் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்ற புத்தகங்களில் ஒன்று, ‘ரீரைட்டிங் ரூல்ஸ்’. விதிகளை மாற்றி எழுதுதல் என்பது இதன் அர்த்தம். இதை எழுதியிருப்பவர் மெக் பார்க்கர். இவர் உறவு மேம்பாடு மற்றும் உளவியல் ஆலோசகர். மெக் பார்க்கர், ‘வெளி உறவுகளில் மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வேட்கை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

    “இப்போது மனிதர்களின் சிந்தனையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர்களது எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன. நவீன மருத்துவத்தின் மூலம் தங்கள் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரித்துக்கொள்ளலாம் என்ற எண்ண ஓட்டம் உருவாகிவிட்டது. உண்மையை சொல்லப் போனால் தற்போது மனிதர்களின் ஆயுட்காலம் அதிகமாகிவிட்டது. அதனால் தங்கள் ஆயுட்காலம் முழுக்க ஒருவருடனே பாலியல் உறவில் நீடித்திருப்பது சிலருக்கு கேள்விக்குரிய விஷயமாகத் தோன்றுகிறது. இரண்டாவது விஷயம், எதிர் பார்ப்புகள் மாறியிருக்கின்றன.

    முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது, இன்றைய ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்க்கைத் துணையிடம் ரொம்பவே எதிர்பார்க்கிறார்கள். அன்பு, அக்கறை, காதல், செக்ஸ், குழந்தைகள், பொருளாதாரம் போன்ற அனைத்தையும் எதிர்பார்க்கிறோம். உண்மையில் இதையெல்லாம் நிறைவேற்றுவது ரொம்பவே கஷ்டமான விஷயம். அதனால் காலம்மாறும்போது பாலியல் உறவுரீதியான எதிர்பார்ப்புகளும் மாறுகிறது” என்கிறார்.

    இவரை போன்று இன்று கணவன்- மனைவி இடையே ஏற்படும் உறவுச் சிக்கல்கள் பற்றி எழுதும் ஆசிரியர்களின் புத்தகங்களும் அதிகமாக விற்பனையாகின்றன. திருமண உறவுகள் குறித்து அலசும் நூலை எழுதியிருக்கும் கேத்தரீன் ஹக்கீம், இதில் வித்தியாசமான கருத்து ஒன்றை முன்வைக்கிறார்.

    ‘‘மணமுறிவுகள் குறைவாக உள்ள பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கணவன், மனைவி இடையே பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ‘உனக்காக நான். எனக்காக மட்டுமே நீ’ என்று அவர்கள் கறார் காட்டுவதும் இல்லை. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வதற்கான அனுமதி அங்கே இருக்கிறது. கணவன்- மனைவி இடையேயான பாலியல் வாழ்க்கை என்பது கண்ணாடிப் பாத்திரத்தை போன்றது. அதை ரொம்பவே இறுக்கிப் பிடிக்கக்கூடாது. பிடித்தால் நொறுங்கிப்போய்விடும் ஆபத்துஉண்டு.

    தமது துணையின் வெளிப் பழக்கம் குறித்து ரொம்ப ‘பரந்த மனப்பான்மை’யாக உள்ளவர்களின் திருமண வாழ்க்கை, வழக்கமான அளவு கோலின்படி செம்மையானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்களின் இல்லறம் இனிமையாக, அமைதியாகவே போகிறது. மிக முக்கியமாக, குழந்தைகளுக்குப் பெற்றோரின் அன்பு தொடர்ந்து கிடைக்கிறது. விவாகரத்து செய்து பிரியும் கணவனுக்கு ஒரு மனைவி கிடைத்துவிடு கிறாள், மனைவிக்கும் பல வேளைகளில் கணவன் கிடைத்துவிடுகிறார். ஆனால் குழந்தைகள்தான் நடுத்தெருவில் விடப்பட்டதைப் போல தடுமாறிப் போகிறார்கள்” என்று வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிறார், கேத்தரீன்.

    ‘அப்படியானால் திருமணத்தை தாண்டிய உறவை பிரான்ஸ் நாட்டில் கண்டுகொள்வதே இல்லையா?’ என்று கேத்தரீனிடம் கேட்டால், “திருமணத்தைத் தாண்டிய உறவு அங்கு கண்டுகொள்ளப்படவில்லை என்றபோதும், அதை ஊக்குவிக்கவும் இல்லை. பிரெஞ்சுக்காரர்கள் ஒன்றும், திருமண வாழ்க்கையைக் காப்பாற்ற வெளித் தொடர்புதான் சரி என்று கூறவில்லை. ஆனால் அதேவேளையில், அப்படி ஓர் உறவு ஏற்பட்டால் அதைக் குற்றமாகக் கருதித் தண்டிக்கவும் விரும்பவில்லை’’ என்று கேத்தரீன் கூறுகிறார்.

    திருமணத்திற்கு பிறகு வெளித்தொடர்புகளில் அதிக ஆர்வம் காட்டுவது பிரான்ஸ் நாட்டினரா? அமெரிக்கர்களா? என்றும் ஒரு சர்வே எடுத்திருக்கிறார்கள்.

    “பிரெஞ்சுக்காரர்களைவிட வெளித்தொடர்புகளை அதிகமாக வைத்திருப்பவர்கள் அமெரிக்கர்கள்தான். திருமண வாழ்வில் ‘துரோகம்’, ‘ஏமாற்றுதல்’, ‘நேர்மையின்மை’, ‘கைவிடுதல்’ போன்ற வார்த்தைகளை அதிகம் அமெரிக்காவில்தான் பயன் படுத்தப்படுகிறது” என்கிறது அந்த சர்வே.

    எது எப்படியோ குடும்பம் என்ற கட்டுப்பாடு, பெருமையைக் காக்க வேண்டும் என்பது நமக்கு முக்கியம்.
    Next Story
    ×