

டிப்-டாப்பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரை போகிறது. இந்த காதல் கிளைமாக்சின் உச்சக்கட்டமாக, ஒரு அரையிருட்டு லாட்ஜில் அந்தப்பெண்ணுடனான காதல் நுகர்வோடு அவன் தன்இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விடுகிறான். அப்படியே புதிய இடம், புதிய சூழலில் அடுத்த விட்டில்பூச்சியை குறி வைக்கத் தொடங்கி விடுகிறான். ஏமாந்த பெண்ணும் மனதுக்குள் அவனை சபித்தபடி பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்காக காத்திருக்கத் தொடங்கி விடுவாள்.
அப்படிப்பட்ட பெண்கள் சிலர்தான். பெரும்பாலான பெண்கள் இந்த விஷயத்தில் புத்திசாலிகள்தான். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக்கூடாரத்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித்தாலும் சில மாதங்கள் டீலில் விட்டு அப்புறமே ‘ஹாய், ஹலோ’வுக்கு வரு கிறார்கள். இந்த காலகட்டத்திற்குள் அவசரம் காட்டும் இளைஞர்கள் தங்கள் இரையில் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.
இப்போது ஆண்களை, பெண்கள் புரிந்துகொள்வதற்கு செல்போன்கள் பெரியஅளவில் உதவுகிறது. இரவு-பகல் பாராமல் அவன் பேசும்போது, அவனது பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப்பட்டு விடுகிறது. அப்போது விழிப்படையும் பெண்கள் அவனிடமிருந்து அகன்று விடுகிறார்கள்.