search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பூப்பெய்திருக்கும் பிள்ளைகளை மனரீதியாக எப்படி தயார் படுத்துவது?
    X
    பூப்பெய்திருக்கும் பிள்ளைகளை மனரீதியாக எப்படி தயார் படுத்துவது?

    பூப்பெய்திருக்கும் பிள்ளைகளை மனரீதியாக எப்படி தயார் படுத்துவது?

    புதிதாக பூப்பெய்திருக்கும் பிள்ளைகளை மனரீதியாக எப்படி தயார் படுத்துவது? அவர்களுக்கு எதை சொல்வது? எப்படி சொல்வது? என்பதை பெற்றோர் தெரிந்து கொள்வது அவசியம்.
    புதிதாக பூப்பெய்திருக்கும் பிள்ளைகளை மனரீதியாக எப்படி தயார் படுத்துவது? பெண் குழந்தைகள் உடல் மற்றும் மனதளவில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது? அவர்களுக்கு எதை சொல்வது? எப்படி சொல்வது? என்பதை பெற்றோர் தெரிந்து கொள்வது அவசியம்.

    ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக பருவ வயது பெண்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும், காரணமில்லாமல் கோபப்படுவார்கள். முதல் மாதவிடாயின் போது மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாதமும் இப்படியான மாற்றங்கள் பெண்களிடம் இருக்கவே செய்யும். ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக மன அழுத்தம் அதிகமாகலாம். இந்த பருவத்தில் பிடித்தவை பிடிக்காமல் போகும். பிடிக்காதவை பிடிக்கும்.

    பருவ வயது பெண் குழந்தைகள் ஏதாவது ஒன்றை செய்யும் போது குறிப்பாக விளையாடப்போகவா? என்று கேட்கும் போது நீ இன்னும் சின்னப்பொண்ணு இல்லை, பெரிய பெண்ணாயிட்ட என்று சொல்வதும், ஏதாவது ஒரு விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசினால் நீ பெரிய ஆளு மாதிரி பேசாத என்று சொல்வதும், குழந்தைக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். சிறு பெண்ணாகவும் இல்லாமல் பெரிய பெண்ணாகவும் இல்லாமல் இரண்டும் கெட்ட பருவமாய் இருக்கும் இந்த சமயத்தில் பெற்றோரின் கவனிப்பும் அக்கறையும் அதிகமாகவே தேவை.

    பெண் குழந்தைகளுக்கு இந்த சமயத்தில் ஆண்களின் மீதான ஈர்ப்பு இருக்கவே செய்யும். சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். பருவ வயது பெண் குழந்தைகளுக்கு பெற்றோர், சில விஷயங்களை இலைமறை காயாக சொல்லி புரிய வைப்பது நல்லது. எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல வேண்டியதில்லை. அப்பாவுக்கு குழந்தைக்கு சில விஷயங்களை புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். அண்ணனின் நண்பர்களோடு பழகும்போது எல்லைகள் வைத்து கொள்ள வலியுறுத்த வேண்டும். எல்லை மீறாமல் பேசவும், பழகவும் அனுமதிக்கலாம்.

    டீன்ஏஜ் பருவத்தில் அலைபேசி பயன்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும் அதிக நேரம் சோஷியல் மீடியாக்களில் உலவாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    சுகாதாரத்தை பொறுத்தவரை பெண் குழந்தைகளிடம் பின்வரும் விஷயங்களை வலியுறுத்த வேண்டும்.

    மாதவிலக்காகி இருபது நாட்களை கடந்து விட்டாலே கைப்பையில் சானிட்டரி நாப்கின் வைத்து கொள்வது நல்ல. ஒருநாளைக்கு நான்கு முறை சானிட்டரி நாப்கின் மாற்றுவது சுகாதாரமானது.

    உடலின் மறைமுக பகுதிகளில் முடி வளர ஆரம்பிப்பதால் உடலில் அதிக வியர்வை நாற்றம் வெளியேற கூடும். அதனால் இருவேளை குளிப்பது, இருவேளை பல் துலக்குவது அவசியம். முகப்பரு ஏற்படாமல் இருக்க முகத்தை அடிக்கடி கழுவுவது, தலை சீவுவது, தலையணை உறை மாற்றுவது சீப்பை சுத்தமாக வைத்திருப்பது கட்டாயம்.

    தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் போது மனம் தடுமாறாமல் இருக்கும். அதே போல் நீண்ட நேரம் பாடங்களை படிக்க சொல்லி வற்புறுத்தக்கூடாது.

    எந்த சமயத்திலும், பெற்றோரின் அன்பும், அக்கறையும், அரவணைப்புமே பருவ வயது பெண் குழந்தைகளிடம் நல்ல மாற்றத்தை விதைக்கும்.
    Next Story
    ×