search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மங்கையரை கவரும் ‘பிரீயட் ரூம்’
    X
    மங்கையரை கவரும் ‘பிரீயட் ரூம்’

    மங்கையரை கவரும் ‘பிரீயட் ரூம்’

    நகர்புறங்களில் நெரிசல்மிக்க குடிசை பகுதியில் வசிக்கும் பெண்கள் மாதவிடாய் கால சிரமங்களை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள்.
    மாதவிடாய் கால சுகாதாரம், ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் அதிகரித்திருக்கிறது. நகர்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களிடமும் இதில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதேவேளையில் நகர்புறங்களில் நெரிசல்மிக்க குடிசை பகுதியில் வசிக்கும் பெண்கள் மாதவிடாய் கால சிரமங்களை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள்.

    அந்த நாட்களில் போதிய ஓய்வெடுக்க முடியாத நிலை, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை போன்ற பிரச்சினைகளால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது துயரத்தை போக்கி ஆசுவாசப்படுத்திக்கொள்ள வசதியாக இந்தியாவிலேயே முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாநகராட்சி சார்பில் ‘பிரீயட் ரூம்’ அமைக்கப்பட்டிருக்கிறது. தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாதவிடாய் கால அறையில் பயன்படுத்திய நாப்கின்களை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்தும் மெஷின், போதிய தண்ணீர் வசதி, கழிவறை வசதி, கண்ணாடி, கால்களை பயன்படுத்தி திறக்கும் குப்பை தொட்டி, ஓய்வெடுக்கும் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

    2019-ம் ஆண்டு தானேவில் குடிசை பகுதியில் வசிக்கும் பெண்களின் சுகாதாரம் குறித்து அறக்கட்டளை ஒன்று ஆய்வு நடத்தியது. அதில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை பட்டியலிட்டதோடு பிரத்யேக அறை அமைப்பது அவசியம் என்றும் பரிந்துரை செய்தது. இதையடுத்து அங்கு மாதவிடாய் கால அறை அமைக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி தானே மாநகராட்சி துணை ஆணையர் மணீஷ் ஜோஷி கூறுகையில், ‘‘தானேவில் குடிசை பகுதிகளில் வசிக்கும் 1000 பெண்களிடம் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் சுகாதார பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பொது கழிப்பிடங்கள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. பயன்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்துவதிலும் பிரச்சினை இருக்கிறது. இதுதவிர மன ரீதியாகவும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வது தெரியவந்தது. அவை ‘பிரீயட் ரூம்’ அமைப்பதன் அவசியத்தை புரியவைத்தன. உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டோம்’’ என்கிறார்.

    அந்த கட்டிடத்தில் மாதவிடாய் கால சுகாதாரம் பற்றிய முக்கியமாக தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விழிப்புணர்வு தகவல்கள் சுவர் ஓவியங்களாகவும் இடம்பெற்றுள்ளன. இந்த அறை, பெண்கள் மத்தியில் ஆனந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
    Next Story
    ×