search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    வாழ்வில் வெற்றி பெற இலக்குகளை நிர்ணயிப்பது எப்படி?
    X

    வாழ்வில் வெற்றி பெற இலக்குகளை நிர்ணயிப்பது எப்படி?

    • இலக்குகளை நிர்ணயிக்கும்போது, அவை யாரை சார்ந்து இருக்கிறது என்பது முக்கியம்.
    • இலக்கை அடைய தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் செயல்பட வேண்டும்.

    வாழ்க்கையில் கடினமாக உழைத்தாலும், பலருக்கு முன்னேற்றம் எட்டாக் கனியாகவே இருக்கும். சரியான இலக்கை நிர்ணயித்து செயல்படாததும் இதற்கு காரணமாகும். நாம் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்து இலக்குகளை நிர்ணயிப்பது முக்கியமானது. இலக்குகள் வரையறுக்கக் கூடியதாக, அளவிடக் கூடியதாக, அடையக் கூடியதாக, கால வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

    அவற்றை மூன்று படிநிலைகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். நீண்டகால, குறுகியகால, மத்திய கால இலக்குகள் என்று எல்லாவற்றையும் பிரித்து, அதற்கான செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வந்தாலே நம்முடைய இலக்கை எளிதாக அடைய முடியும். சாதனையாளர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய இலக்குகளை நோக்கி பயணிக்கின்றனர். அதனாலேயே அவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

    நம் அன்றாட வாழ்க்கையிலும், ஒரு இலக்கை நிர்ணயித்து அதன்படி நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். மாணவர்கள் உயர்கல்வி கற்பது, விளையாட்டு வீரர்கள் முதல் பரிசு பெறுவது, தொழில்முனைவோர் தனது தொழிலில் வெற்றி பெறுவது, பணி புரிபவர்கள் அவர்களது துறையில் முதன்மை பதவிக்கு செல்வது போன்ற இலக்குகளை நிர்ணயித்து பயணிக்கலாம்.இதன் மூலம் நேரத்தையும், திறமையையும் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த முடியும்.

    இலக்குகளை நிர்ணயிக்கும்போது, அவை யாரை சார்ந்து இருக்கிறது என்பது முக்கியம். நம்முடைய தனிப்பட்ட குறிக்கோளாக, குடும்பம், சமூகம் சார்ந்ததாக இருக்கும்போது அந்த இலக்குகளை எவ்வளவு நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமான, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். இலக்கினை தீர்மானம் செய்த பிறகு, 'இதை நம்மால் செய்துவிட முடியுமா?' என்று நம்மை நாமே குறைத்து மதிப்பிடுதல் கூடாது. அது நம்முடைய ஊக்கத்தைக் குறைக்கும்.

    நம்முடைய பலவீனமே, எல்லாம் நமக்கு உடனடியாக நடைபெற வேண்டும், நினைத்த வண்ணம் நடக்க வேண்டும் என்று நினைப்பது தான். அவற்றை எல்லாம் நீக்கி விட்டு, சிறிது கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை. ஆனால், இலக்கை அடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் செயல்பட வேண்டும். நம் இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று முழுமையாக நம்ப வேண்டும்.

    இலக்குகளை நிர்ணயித்த பின்பு, அதில் உள்ள சிக்கல்கள், நாம் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்த தீர்வு பற்றியும் சிந்திக்க வேண்டும். சவால்களை சமாளிக்கும் திறமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது குறித்த தெளிவான முடிவுகளை ஆராய்ந்து, அவற்றில் தோல்வி கண்டாலும், அதில் இருந்து மீண்டு வருவதற்கான மன உறுதியையும் வளர்த்துக் கொள்ளுதல் அவசியமானது.

    Next Story
    ×