என் மலர்
பெண்கள் உலகம்
- பெண்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினையை தடைக்கற்களாக பார்க்கிறார்கள்.
- மாற்றி சிந்தித்தால் அவை வெற்றி படிக்கட்டுகளாக மாறும்.
`சிஸ்டம் சரியில்லை...' - இந்த வார்த்தையை வயது பேதமின்றி அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு பக்கம், வாழ்வதற்கான நெருக்கடிகள் மனிதர்களை இயந்திரங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. பெண்களையும் இந்த நெருக்கடிகள் விட்டுவைக்கவில்லை. பல பெண்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளையே தடைக்கற்களாக பார்க்கிறார்கள். கொஞ்சம் மாற்றி சிந்தித்தால் அவைகளே வெற்றிப்படிக்கட்டுகளாக மாறும்.
தன்னை அறிதல்:
நம்மால் முன்னேற முடியாமல் போவதற்கு சிஸ்டம் சரியில்லை என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க முடியாது. மாற்ற வேண்டியது சிஸ்டத்தையா அல்லது நம்மையா என்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும். தன்னிடம் உள்ள `பிளஸ், மைனஸ்' விஷயங்களை மனம் திறந்து ஒத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் புறக் காரணங்களை ஒதுக்கி விட்டு தன்னிடம் மாற்றிக்கொள்ள வேண்டியவற்றை பட்டியலிட்டு சரி செய்ய வேண்டும்.
யதார்த்த பார்வை:
பிரச்சினைகளை அணுகுவதில் ஆண்களை விடப் பெண்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். அதுவே, அவர்களின் பிரச்சினைக்கான வலியை அதிகரிக்க செய்கிறது. பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான மாற்றங்களைக்கூட சங்கடங்களோடும், சிரமங்களோடும் எதிர்கொள்வதால் பல தருணங்களில் ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்று யோசிக்கின்றனர். எந்தப் பெண்ணும் தன் வாழ்வில் ஒருமுறையாவது இப்படி யோசித்திருக்கக் கூடும். இந்த உலகுக்கு ஓர் உயிரை தருவதற்கான கருவறையே, பெண்ணுக்குள் தனக்கான மாற்றங்களை அந்தந்தப் பருவங்களில் ஏற்படுத்திக் கொள்கிறது. தாய்மையின் அற்புதங்களை உணர்ந்த பெண்ணுக்கு வலிகளோ, அது சார்ந்த சிரமங்களோ பெரிதில்லை. எனவே தான் சந்திக்கும் பிரச்சினைகளை பெண்கள் எதார்த்தமாக அணுகலாம்.
திறனை மேம்படுத்துதல்:
அலுவலகத்தில் உங்களுக்கான வேலை இலக்கை நிர்ணயிக்கிறார்கள், புதிய வேலைகளை உங்களது தலையில் சுமத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், சிலருக்கு உடனடியாக டென்சன் தொற்றும். வேலையில் தங்களை கசக்கிப் பிழிவதாக மனம் புலம்பும். இதை நம்மால் சமாளிக்க முடியுமா என்ற அச்சம் எட்டிப்பார்க்கும்.
அதற்கு இடம் கொடுக்காமல் கொடுக்கப்பட்ட பணிகளுக்கான நேரத்தையும், அதனை நிறைவேற்றுவதற்கான எளிய வழிகளையும் பற்றி சிந்திப்பதன் மூலம் உங்களது வேலைத்திறனை உயர்த்திக்கொள்ள முடியும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை எளிதாகக் கடந்துவிட்டால், அதே அலுவலகத்தில் திறமை மிகுந்த ஆளாக நீங்கள் மிளிர்வதை உணரலாம். இதுவே உங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். கூடுதல் பெறுப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் தனித்திறன்களையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
சக மனிதரை புரிந்துகொள்ளுதல்:
திருமணம் பெண்ணின் வாழ்வில் முக்கியமான தருணம். தன் வீட்டில் பெண்ணாக வளர்க்கப்பட்ட செல்ல மகள், புகுந்த வீட்டில் தனக்கான குடும்பத்தின் தலைவியாக பொறுப்பேற்கும் வைபவம். புதிதாக ஒரு குடும்பத்தில் நுழையும்போது எதிர்கொள்ளும் எல்லா விஷயங்களுமே பிரச்சினைகளாகத்தான் தோன்றும். புதிய உறவுகள் வலியுறுத்தும் சிறிய விஷயம் கூட பெரிதாக மனதை காயப்படுத்தும். புதிய மனிதர்களை விருப்பு, வெறுப்புகளுடன் பார்க்காமல், அவர்களை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். புதிய உறவுகளைத் தனதாக்கிக்கொள்வதன் வழியாக, பெண் தனக்கான ஓர் அன்புக் கூட்டை உருவாக்க முடியும். பெண்கள் சக மனிதர்களை புரிந்து செயல்படுவதால் வீட்டிலும், வேலையிடத்திலும் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்க முடியும்.
இனிக்கும் இல்லம்:
சில வீடுகளில் தம்பதிகள் எதிரெதிர் துருவங்களாக இருப்பார்கள். எதிர்மறையான விஷயங்களை மட்டுமே பட்டியலிடுவதால் வரும் பிரச்சினைதான் இது. இருவருக்குமான அன்பின் பகிர்வுகளை நினைவு கூருங்கள். அவரவருக்கான சுதந்திர எல்லையை அனுமதித்து, உறவை அழகாக்குங்கள். உங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்காமல், உங்களது குழந்தைகளுக்கு என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கத் தொடங்குங்கள். இந்த உலகின் சிறந்த அப்பா, அம்மாக்களாக நீங்கள் மாற வாய்ப்புள்ளது.
எந்த உறவிலும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் வழியாக சுமூகமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம். நெருக்கடியான தருணங்களில் மாற்றி சிந்திப்பதன் வழியாகவே எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். தடைக்கற்கள் எல்லாம் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
- உறுதியான உடல்தான் பதற்றமில்லாத மனதுக்கு ஆதாரம்.
- விழிப்புணர்வுடன் இருந்தாலே பதற்றம் வராது.
உடல் மற்றும் மனம் என இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு மனப்பதற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். மனப்பதற்றத்தை தணிப்பதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது, வாழ்க்கை முறையில் மாற்றங்கள்.
உடல் எடை அதிகமாக இருந்தால். எடையைக் குறைத்தாலே பாதி பிரச்சினைகள் சரியாகும்.
தவறாமல் உடற்பயிற்சி செய்தாலே, மனப்பதற்றமும் மனச் சோர்வும் வெகுவாகக் குறையும். ஆரோக்கியமான, உறுதியான உடல்தான் பதற்றமில்லாத மனதுக்கு ஆதாரம்.
குறிப்பாக யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை பயன்தரும். காபி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்துவதும் மனப்பதற்றத்தை அதிகரிக்கும். அவற்றைக் குறைத்துக்கொண்டு நிறைய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள்.
எதிர்மறையான சிந்தனையையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். சிறு விஷயங்களுக்கு கூட பதற்றப்பட்டு, பின்னர் அதுவே ஒரு பழக்கமாக ஆகிவிடும். பிறகு பல நேரம் நம்மை அறியாமலேயே பதற்றம் வந்துவிடும்.
'ஒரு விஷயம் நடந்துவிடுமோ' என்று நாம் கற்பனை செய்வதால், எதுவும் நடக்கப்போவதில்லை. ஏன் பதற்றப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் இருந்தாலே பதற்றம் வராது. இந்த வழிமுறைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். அவற்றைச் செயல்படுத்துவதில்தான் இருக்கிறது, சூட்சுமம்.
- வீட்டில் உள்ள பொருட்களை அதற்கேற்ப மாற்றி அமைப்பது நல்லது.
- கெட்டியான துணிகளால் ஆன திரைகளை பயன்படுத்துவது நல்லது.
மனிதர்களைப்போல கட்டிடங்களும் குளிரை உணரும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. வின்டர் சீஸன் என்ற குளிர் காலத்தில் வீட்டையும், அதில் உள்ள பொருட்களையும் பராமரிப்பது முக்கியம். வீட்டில் உள்ள பொருட்களை அதற்கேற்ப மாற்றி அமைப்பது நல்லது. எதை தொட்டாலும் ஜில்லென்று இருப்பதால் வீட்டிற்குள் வெப்பத்தை நிலவும்படி செய்வது அவசியம். அதற்கு செயற்கையான வழிகளை தவிர்த்து, இயற்கை வழிகளை கையாண்டு குளிரை தடுப்பதற்கான குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
மழை மற்றும் குளிர் காலங்களில் வீட்டுக்குள் ஜில்லென இல்லாமல் அறையில் வெதுவெதுப்பான வெப்ப நிலை இருக்கவேண்டுமானால் திரைகளை சரியாக பயன்படுத்துவது அவசியம். சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் எந்தெந்த ஜன்னல்கள் வழியாக வருகிறதோ அங்கு மெல்லிய திரைகளை பயன்படுத்தலாம். மற்ற ஜன்னல்களுக்கு கெட்டியான துணிகளால் ஆன திரைகளை பயன்படுத்துவது நல்லது.
குளிர் கால இரவு நேரங்களில் சுற்றுப்புற வெப்ப நிலை குறைவாக இருப்பதோடு, குளிர் காற்றின் தாக்கம் எல்லா இடங்களிலும் பரவலாக இருக்கும். அதனால் மாலை நேரத்திலேயே ஜன்னல்களை மூடி வைத்துவிடுவது பாதுகாப்பான வழியாகும். அதன் மூலம் குளிர் காற்று உள்ளே வருவது தடுக்கப்படுவதோடு, அறைகளுக்குள் நிலவும் வெப்பமும் வெளியேறாமல் இருக்கும்.
வெளிப்புற வெப்பநிலை குறையும்போது அறையின் வெப்ப நிலையை பாதுகாக்க வெளிக்காற்று உள்ளே துளியும் வராதவாறு அழுத்தமாக ஜன்னல்களை மூடி வைக்கவேண்டும். கதவுகளை அடிக்கடி திறந்து மூடுவதாலும் வெளிப்புற காற்று அறைகளுக்குள் வரும் வாய்ப்பு இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஹால் உள்ளிட்ட மற்ற அறைகளின் பர்னிச்சர் மற்றும் சோபா செட்கள் ஆகியவற்றுக்கு கம்பளி அல்லது அழுத்தமான காட்டன் துணியால் தயாரிக்கப்பட்ட மேல் உறைகளை பயன்படுத்தி மூடி வைக்க வேண்டும். அதன் மூலம் அவற்றை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போது வெதுவெதுப்பாக இருக்கும்.
ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு அருகில் உள்ள பர்னிச்சர்களை சற்று நகர்த்தி வைக்கவேண்டும். ஏனெனில் பகல் நேரங்களில் அறைக்குள் வரும் வெப்பமான காற்று தடுக்கப்படாமல் இருக்க வேண்டும். மேலும், இரவில் குளிர்ந்த காற்றின் காரணமாக அவை குளிர்ச்சி அடைந்து விடுவதோடு அறைக்குள்ளும் குளிர்ச்சியை உண்டாக்கும். அதனால் பர்னிச்சர்கள் வகைகள் எவ்வகையாக இருந்தாலும் ஈரமான மூலைகளில் இருந்து நகர்த்தி வைக்கப்படவேண்டும்.
பனிக்காலங்களில் அறைகளுக்குள் வெறும் கால்களால் நடக்காமல் வீட்டுக்குள் உபயோகப்படுத்தும் ஸ்லிப்பர் வகை செருப்புகளை பயன்படுத்தலாம். அதன் காரணமாக தரையின் குளிர்ச்சியனது சுலபமாக உடலுக்குள் கடத்தாமல் தடுக்கப்படும்.

மேலும் அறைகளுக்கு கச்சிதமாகவும், சரியான வண்ணத்துடனும் இருப்பது போன்று கெட்டியான கம்பளம் அல்லது தென்னை நாரால் செய்யப்பட்ட புளோர் மேட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி புழங்கும் அறைகளிலும் கெட்டியான மேட் விரித்து வைக்கலாம். அவ்வாறு செய்யும்போது உடல் வெப்பத்தை தரைத்தளம் உறிஞ்சி விடாமல் பாதுகாக்கப்படுகிறது.
- நீர்க்கட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்றோஜென் அதிகம் சுரக்கும்.
- மாதவிடாயும், நீர்க்கட்டியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் கருப்பை நீர்கட்டி பிரச்சனையும் ஒன்று. பல சிறிய நீர் நிரம்பிய கட்டிகள் கருப்பையில் உருவாவதையே நீர்க்கட்டி என்கிறோம். இதை பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் என்று அழைக்கிறார்கள். பெரும்பாலும் ஏற்படும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இந்த நீர்க்கட்டிகளும் ஒரு காரணம் ஆகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயும் இந்த நீர்க்கட்டியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இந்த கர்பப்பை நீர்க்கட்டிகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் இது குழந்தையின்மைக்கு வழி வகுக்கும்.
கர்பப்பை நீர்க்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள்:
கர்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடும். பெரும்பாலானோருக்கு ஏற்படும் அறிகுறி சரியாக மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது தான். அதாவது முறையற்ற பீரியட்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம். கர்பப்பை நீர்க்கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண் ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஆன்றோஜென் அதிகம் சுரக்கும்.
ஆன்றோஜென் அதிகம் சுரப்பதால் பெண்களுக்கு முகத்தில் ரோமம் வளரும். பெண்களுக்கு மார்பகத்தின் அளவு குறையும். முடிகொட்டும் பிரச்சினை ஏற்படும். குரலில் வேறுபாடு ஏற்படுகின்றது. முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுகின்றது. உடல் எடை அதிகரிக்கின்றது. மனஅழுத்தம் ஏற்படும், மலட்டுத் தன்மை ஏற்படுகின்றது.
இந்த கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினையை சரி செய்வதற்கு இந்த பதிவில் பெண்கள் என்னென்ன உணவுப் பொருள்களை சாப்பிட வேண்டும் என்று இனி பார்க்கலாம்.
வெந்தயம்:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் வெந்தயத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது கர்பப்பை நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு இன்சுலின் அளவு அதிகமாக சுரக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். இதை தடுக்க வெந்தயத்தை பயன்படுத்தலாம். அதாவது வெந்தயத்தை ஒரு நாள் முன்பு இரவு ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடவேண்டும். மேலும் மதியம் உணவு சாப்பிடுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பும், இரவு உணவு சாப்பிடுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பும் சாப்பிட வேண்டும். வெந்தயத்தை சாப்பிடும் பொழுது இன்சுலின் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது.
துளசி:
கர்பப்பை நீர்க்கட்டி உள்ள பெண்கள் துளசி இலையை சாப்பிட வேண்டும். நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் என்று அழைக்கப்படும் ஆண் ஹார்மோன் அதிகம் சுரக்கும். எட்டு துளசி இலைகளை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிடுவதால் இந்த துளசி ஆன்றோஜென் ஹார்மோன் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
ஆளி விதைகள்:
ஆளி விதைகளையும் இந்த கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினைக்கு தீர்வாக சாப்பிடலாம். ஆளி விதைகளில் ஒமேகா சத்துக்கள் உள்ளது. மேலும் புரதச்சத்துக்களும் நிரம்பி உள்ளது. இதனால் இந்த ஆளி விதைகள் உடலில் உள்ள குளுக்கோஸ் பயன்பாட்டிற்கு உதவுகின்றது. ஆளி விதைகளை பொடி செய்து நீரில் கலந்தோ இல்லது பழச்சாறில் கழந்தோ குடிக்கலாம். இதனால் உடல் பருமனும் குறைகின்றது.
லவங்கப் பட்டை:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் லவங்கப் பட்டையையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். லவங்கப் பட்டையை பொடி செய்து காலையில் குடிக்கும் டீ அல்லது காபியில் சிறிது கலந்து குடிக்கலாம். அல்லது தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம். லவங்கப் பட்டையும் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது. லவங்கப் பட்டையையும் கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினைக்கு தீர்வாக சாப்பிடலாம்.
பாகற்காய்:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் கசப்பு மிகுந்த பாகற்காயையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காயை வாரத்தில் ஐந்து முறை சமைத்து உண்ண வேண்டும். பாகற்காயை சாப்பிடுவதால் இன்சுலின் அளவு கட்டுக்குள் வருகின்றது. இன்சுலின் கட்டுக்குள் இருப்பதால் ஆன்றோஜென் ஹார்மோன் அளவும் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது.
நெல்லிக்காய்:
கர்பப்பை நீர்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் நெல்லிக்காயை சாப்பிடலாம். நெல்லிக்காய் உடலில் இன்சுலின் அளவு சுர்ப்பதை கட்டுக்குள் வைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. நெல்லிக்காய் சாற்றை இளஞ்சூடான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் இன்சுலின் அளவு குறைவதோடு உடல் எடையும் குறைகின்றது.
தேன்:
கர்பப்பை நீர்ககட்டி பிரச்சினை உள்ள பெண்கள் தேனை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைக்கலாம். உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைத்தால் கர்பப்பை நீர்க்கட்டிகள் தானாக கரைந்து விடுகின்றது. காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் தேனையும் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து தினமும் குடிக்க வேண்டும். இதனால் உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் கர்பப்பை நீர்க்கட்டி கரைந்து விடும்.
உளுந்து:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் உளுந்தை தினசரி உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருப்பு உளுந்து சாதத்தை சாப்பிடுவது ஹார்மோன்களை சீராக்கி பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி பிரச்சினையை சரிசெய்ய உதவுகின்றது. மேலும் பூண்டு குழம்பு, எள்ளுத் துவையல் போன்றவற்றை சாப்பிடுவதால் ஹார்மோன்கள் சீராக்கப்பட்டு பிசிஓடி பிரச்சினை சரி செய்யப்படுகின்றது. சூடான சாதத்தில் வெந்தயப் பொடி ஒரு ஸ்பூன் அளவு போட்டு சாப்பிடுவது நல்லது.
கற்றாழை:
மாதவிடாய் காலத்தில் வயிறு வலி அதிகம் உள்ள பெண்கள் கற்றாழையில் இருக்கும் ஜெல்லை தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குறைவதோடு கர்பப்பை நீர்கட்டிகள் உருவாமல் தடுக்கப்படுகின்றது.
சின்ன வெங்காயம்:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் சிறிய வெங்காயத்தை உணவில் அதிகம் சேரத்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவில் 50 கிராம் அளவு சிறிய வெங்காயத்தை சேரத்துக் கொள்வதால் பிசிஓடி பிரச்சினை சரியாகின்றது.
கீரை வகைகள்:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் தினமும் ஏதாவதொரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முருங்கை கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை இவைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் சமைத்து சாப்பிட வேண்டும். மகப்பேறுக்கு ஏங்கும் பெண்களாக நீங்கள் இருந்தால் மேற்சொன்ன கிரைகளை பசு நெய் மற்றும் பாசிப்பயிறு கலந்து சாப்பிட வேண்டும்.
முருங்கை :
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினையை குறைக்க முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, முருங்கை விதைகள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை பிசின், சாரைப் பருப்பு இவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த உணவுகள்:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் ஓட்ஸ், திணை, முளைக்கீரை போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது. உருளைக்கிழங்கு, வெள்ளை சர்க்கரை, அரிசி, பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது.
- மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும்.
- மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும்.
மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும்.
குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும். தாய்ப்பால் புகட்டுவதால் அழகு குறையும் என்ற கருத்தில் பலரும் இப்பொழுதெல்லாம் தாய்ப்பால் புகட்டுவதை தவிர்க்கின்றனர். ஆனாலும் சர்வதேச அளவில் ஐந்து வயது குழந்தைகளில் ஒரு கோடி குழந்தைகள் வரையில் தாய்ப்பால் புகட்டப்படாமல், ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றன. ஆகவே அனைவரும் தாய்ப்பாலின் நலன்களை அறிந்து, அதை பற்றிய விழிப்புணர்வு பெறுதல் அவசியமாகிறது.
பச்சிளம் குழந்தைக்கு தாய் பால் புகட்டுவதே சிறந்தது. அதற்கு அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மட்டும் காரணம் அல்ல, தாய்ப்பால் புகட்டுவதில் தாய்க்கும் நன்மை உண்டு. ஆறு மாதம் வரையில் குழந்தைக்கு தேவையான வைட்டமின் மற்றும் சத்துகளோடு, குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் தாய்பாலிலேயே அதிகம் இருக்கிறது.
தாய்ப்பால் புகட்டுவது குழந்தை பேற்றின் போது ஏற்பட்ட இரத்த இழப்பை சரிசெய்து, அது சம்மந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
தாய்ப்பால் புகட்டுவது தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட உடல் மாற்றங்களில் இருந்து மீள்வதற்கு உதவுகிறது மற்றும் குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட வலியை மறந்து, குழந்தையை மகிழ்ச்சியாக கொஞ்சவும் வழி செய்கிறது.
தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கும், சேய்க்கும் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் பிணைப்பு ஏற்படும். தாய்ப்பால் புகட்டுவது மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.
- நல்ல மணம் பரப்பும் தீபங்களை ஏற்றி வைக்கலாம்.
- வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
பண்டிகைகள் மற்றும் சுப தினங்களில் வீடு, வணிக ரீதியான இடங்கள், கோவில்களில் தீபம் ஏற்றி அலங்கரிப்பதும், வழிபடுவதும் பலரது வழக்கமாகும். குறிப்பாக வீட்டின் நுழைவாயில், பூஜை அறை, வரவேற்பறை போன்ற இடங்களில் நல்ல மணம் பரப்பும் தீபங்களை ஏற்றி வைக்கலாம். இவ்வாறு செய்வதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய தீபங்களை நாமே எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
நமது உபயோகத்துக்கு மட்டு மில்லாமல், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இவற்றை பரிசாக அளித்து மகிழலாம். வாசனை தீபம் தயாரிப்பதற்கு குறைந்த அளவு முதலீடே போதுமானது. அதைப்பற்றிய குறிப்புகள் இதோ.
தேவையான பொருட்கள்:
நெய்- 1 லிட்டர்
சிலிக்கான் அச்சுகள்
பஞ்சு திரி - 25
சிறு துண்டுகள்
கற்பூரம் - 6 வில்லைகள்
அரோமா எண்ணெய் - 25 மி.லி.
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி உருக்க வேண்டும். பின்னர் கற்பூரத்தை நன்றாகப் பொடித்து நெய்யில் போட்டு கலக்க வேண்டும். இந்த கலவை சற்று ஆறியதும் உங்களுக்கு விருப்பமான அரோமா எண்ணெய்யை அதில் ஊற்றி கலக்க வேண்டும்.
சிலிக்கான் அச்சுகளின் நடுவில் ஒவ்வொரு திரியாக வைக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் மூலம் நெய்யை அவற்றில் நிரப்ப வேண்டும் (சிலிக்கான அச்சு கிடைக்காத நிலையில் குளிச்சாதனப் பெட்டியில் இருக்கும் ஐஸ் டிரேக்களை பயன்படுத்திக்கொள்ளலாம்). அதன் பிறகு அவற்றை அப்படியே 18 முதல் 30 நிமிடங்கள் வரை ஃபிரிசரில் வைக்கவும். பின்னர் அவற்றை அச்சுகளில் இருந்து வெளியே எடுத்தால் வாசனை பரப்பும் தீபங்கள் தயார் இவற்றை காற்று புகாத உலர்ந்த கண்ணாடி பாட்டில்களில் போட்டு வைக்கலாம். கோடை காலங்களில் இந்த தீபங்களை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாப்பது நல்லது. தேவைப்படும்போது வாசனை தீபங்களை அகல் விளக்கில் இட்டு ஏற்றலாம்.
சந்தைப்படுத்தும் முறை:
பண்டிகை காலங்களில் இதற்கான தேவை அதிகமாக இருக்கும். வாசனை தீபங்களை வீட்டில் மொத்தமாக தயாரித்து அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யலாம். கோவில்களின் அருகே இருக்கும் கடைகளிலும் விற்பனைக்கு கொடுக்கலாம். நவராத்திரி, கார்த்திகை தீபம் போன்ற பண்டிகை நேரங்களில் வாசனை தீபங்களை அழகாக பேக் செய்து தாம்பூழத்தில் வைத்து கொடுக்கலாம். முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இவற்றை சந்தைப்படுத்தலாம்.
- மென்மையானது மற்றும் அமர்வதற்கு சவுகரியமானது.
- நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டது.
தற்காலத்தில் உங்கள் வீட்டினை அழகு படுத்த வேண்டியது அவசியமானதாக ஆகிவிட்டது. அதே நேரத்தில் ஆடம்பரமான பொருட்களை தவிர்த்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு வீட்டினை அழகுபடுத்துவது என்பது ஒரு தனிக் கலை.
இவை நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டது. மேலும், அமர்வதற்கும் படுப்பதற்கும் மிகவும் ஏற்றது மற்றும் வீட்டில் எந்த பகுதிக்கும் எடுத்து செல்ல ஏற்றது. சினிமா பார்ப்பது, டிவி பார்ப்பது, நண்பர்களுடன் கலந்துரையாடும் போது இவற்றில் அமர்ந்து இருப்பது சவுகரியமான உணர்வினை தரும். நாற்காலிக்கு பதிலாக இதனை பயன்படுத்துவது முதுகுப்புறத்திற்கு மிகுந்த ஆதரவினை வழங்கும். இது மிகவும் மென்மையானது மற்றும் அமர்வதற்கு சவுகரியமானது ஆகும். இவை உங்கள் வீட்டின் தோற்றத்தினை மிகவும் அழகானதாக மாற்றிவிடும்.
தேவையான பொருட்கள்:
கேன்வாஸ் துணி - 3 மீட்டர்
கத்தரிக்கோல்
குண்டூசி
ஊசி
நூல்
பென்சில்
இன்ச் டேப்
பீன் பில்லிங் (கிராப்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்) - 15 கிலோ
செய்முறை:
* துணியை நீளவாக்கில் இரண்டாக மடிக்கவும். பின்பு மடிக்கப்பட்ட பகுதியின் ஒரு விளிம்பை அதன் எதிர்ப்புற விளிம்புடன் முக்கோண வடிவத்தில் இணைக்கவும்.
* இப்போது அதனை கத்தரிக்கோல் கொண்டு வெட்டினால் இரண்டு சதுர வடிவ துணிகள் கிடைக்கும். அவற்றின் வெளிப்பக்கம் ஒன்றாக இருக்கும்படி குண்டூசி கொண்டு இணைக்கவும்.
* பிறகு அதன் ஒரு பக்கத்தில் மட்டும் 15 அங்குல அளவிற்கு இடைவெளி விட்டு, மற்ற பக்கங்களை சுற்றிலும் ஒரு அங்குல அகலத்திற்கு தையல் போடவும்.
* கைகளால் தைப்பதாக இருந்தால் நெருக்கமாக கெட்டித் தையல் போடவும். அப்போதுதான் அதில் நிரப்பப்படும் பின்கள் வெளியில் வராது.
* பின்பு ஒரு அங்குல அகலம் கொண்ட துணியின் ஓரங்களை 1/4 அங்குல அகலத்துக்கு சுருட்டி தைக்கவும்.
* பின்பு துணியில் தையல் போட்ட மூலைப் பகுதிகளை நடுவில் வரும்படி வைத்து மடிக்கவும். இதன்மூலம் துணிக்கு புதிய மற்றும் தையல் போடாத பகுதிகள் பக்கவாட்டில் கிடைக்கும்.
* இப்போது ஒவ்வொரு பக்கத்தின் மூலையில் இருந்தும் 18 அங்குல அளவுக்கு குறிக்கவும். அவ்வாறு குறிக்கப்பட்ட புள்ளிகளை இணைத்து, மூலைப் பகுதியை கத்தரிக்கவும்.
* வெட்டப்பட்ட விளிம்புகளை சுற்றிலும் தையல் போடவும். இவ்வாறு நான்கு மூலைகளையும் தைத்த பின்பு திறந்திருக்கும் இடைவெளி வழியாக துணியினை புரட்டும்படி, உள்பக்கமாக திருப்பவும்.
* இப்போது தையல் போட்ட பகுதிகள் உள்பக்கமாக சென்று இருக்கும். பின்பு பைக்குள் பீன்களை தேவையான அளவுக்கு நிரப்பவும்.
* அதன் பிறகு திறந்திருக்கும் பகுதியை ஊசி, நூல் கொண்டு தைத்து பையினை மூடவும்.
* கேன்வாஸ் துணி நமது விருப்பத்திற்கு தகுந்த மாதிரி வடிவமைப்பதற்கு ஏற்றதாகும். இதனை அப்படியே உபயோகிக்கலாம் அல்லது உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் அலங்கரிக்கலாம்.
- போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
- துரித உணவுகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே மாதவிடாய் அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, கை-கால் வலி போன்ற பாதிப்புகள் எட்டிப்பார்க்கும். உடலில் ஒருவித சோர்வும் குடிகொள்ளும். சிலருக்கு முகப்பருக்கள் வெளிப்பட தொடங்கும். திடீர் கோபம், எரிச்சல், கவனக்குறைவு, மன அழுத்தம் ஏற்படக்கூடும். தூக்கமும் தடைபடும். இதுபோன்ற அறிகுறிகள் எட்டிப்பார்க்கும்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கிவிட்டாலே சுமூகமாக சமாளித்து விடலாம். அதிலும் வயிறு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது அவசியம். உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். அதுபோல் உப்பு அதிகம் சேர்க்கப்படும் ஊறுகாய், காரமான மசாலா பொருட்களை தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், நொறுக்குத்தீனிகள், துரித உணவுகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.
* மாதவிடாய் சமயங்களில் மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவை பிரித்து நான்கு அல்லது ஐந்து வேளையாக சாப்பிடலாம்.
* இஞ்சி டீ பருகுவது வலியை கட்டுப்படுத்த உதவும். ஊட்டச்சத்துமிக்க காய்கறிகள், முழு தானியங்கள், கீரைகள், பழங்களை சாப்பிட வேண்டும். மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம்.
* மாதவிடாய் சமயத்தில் புராக்கோலி, தக்காளி, சோளம், ஆரஞ்சு பழம், வேர்க்கடலை போன்றவைகளை சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.
* வாழைப்பழங்கள், வெண்ணெய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அவைகளை சாப்பிடுவது மனநிலையை தெளிவாக்கும். குடல் இயக்கத்திற்கும் நன்மை சேர்க்கும்.
* போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவைகளையும் செய்து வரலாம்.
- பெண்கள் தினசரி அணியும் ஆடைகளில் சல்வாரும் ஒன்று.
- குர்த்தி வகை துப்பட்டாக்களையும் தேர்ந்தெடுத்து அணியலாம்.
இந்திய பெண்கள் தினசரி அணியும் ஆடைகளில் சல்வாரும் ஒன்று. இவற்றோடு சேர்த்து அணியும் துப்பட்டாக்களை, பாவாடை சட்டை தொடங்கி மாடர்ன் ஆடைகள் வரை அவரவரின் ரசனைக்கு ஏற்றபடி பெண்கள் உபயோகிக்கிறார்கள். அந்த வகையில் அணியும் ஆடைகளுக்கு ஏற்றபடி துப்பட்டாக்களை தேர்ந்தெடுப்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
துணியின் ரகம், நிறம், வேலைப்பாடு மற்றும் துப்பட்டாவை அணியும் விதம் என பல விஷயங்கள் இருப்பதே இதற்கு காரணமாகும்.
குறிப்பாக காட்டன், பிரைடல், பிளைன், நெட் டிசைனர், ஹெவி வெயிட் பாகிஸ்தானி, பஞ்சாபி. பிரிண்ட் புல்காரி. பந்தானி, சிப்பான், சில்க், மிரர் வொர்க், சூட் லெகங்கா, சிம்பிள், ஜரி. பனாரசி. எம் பிராய்டரி, பேன்சி, மல்டி கலர், செக்டு, ராஜஸ்தானி, ஹிஜாப் மற்றும் குர்த்தி போன்ற துப்பட்டா வகைகள் பெரும்பாலும் இளம் பெண்களால் விரும்பி உடுத்தப்படுகிறது.
எனினும், சில ஆடைகளுக்கு, அவற்றுக்கு ஏற்ற துப்பட்டாவை சரியான அளவிலும், வடிவமைப்பிலும் உடுத்தினால் மட்டுமே கச்சிதமாக பொருந்தும்.
குறிப்பாக எந்த ஆடையாக இருந்தாலும் அவற்றின் வண்ணம், துணியின் ரகம் மற்றும் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டே அதற்கான துப்பட்டாவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதாவது பெரிய வேலைப்பாடுகள் இல்லாத ஆடைகளுக்கு ஹெவி டிசைனர், எம்பிராய்டரி டிசைனர், ஜரி, கண்ணாடி அல்லது ராஜஸ்தானி வேலைப்பாடுகள் கொண்ட துப்பட்டாவையும். அதிக வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளுக்கு பிளைன், காட்டன், பேன்சி, மல்டி கலர், செக்டு, சிம்பிள், புல்காரி மற்றும் குர்த்தி வகை துப்பட்டாக்களையும் தேர்ந்தெடுத்து அணியலாம்.
- கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்கள் ஏராளம்.
- மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வழிகள்.
வாழ்க்கையில் ஏற்படும் திடீர் தேவைகளை செலவுகளையும் சமாளிப்பதற்கு பலரும் தனிநபர் கடன் வசதிகளையே நாடுகின்றனர். தற்போது வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தனிநபர் கடன் பெறும் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற எளிமையான வழியில் மாற்றி அமைத்துள்ளன. அதேசமயம், தனிநபர் கடன் தொடர்பான மோசடிகளும் ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. இவற்றால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்கள் ஏராளம். இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வழிகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
* கடன் சலுகைகள் குறித்து தொலைபேசி. மின்னஞ்சல்கள் மூலம் உங்களை யாரேனும் தொடர்பு கொண்டால் எச்சரிக்கையாக இருக்கவும்.
* தனிநபர் கடன் தொடர்பான ஒப்பந்தத்தை கவனமாக படிக்கவும். அதில் உள்ள விதிமுறைகள், வட்டி விகிதங்கள். திருப்பி செலுத்தும் தவணைக்கான அட்டவணை மற்றும் மறைக்கப்பட்ட கட்டணங்கள் (செயலாக்க கட்டணம், ஆவணங்கள் தயாரிப்புக்கான கட்டணம், கடனை முன்கூட்டியே அடைப்பதற்கான கட்டணம், தாமதமான கடன் தவணைக்கான கட்டணம்) என அனைத்தையும் நன்றாகப் படித்து புரிந்து கொண்ட பிறகு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவும்.
* கடன் கொடுப்பவர்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்காமல், உங்களுக்கு வேண்டிய பணத்தை வழங்க முன்வந்தால் அந்த கடன் சலுகையை பெறாமல் தவிர்ப்பதே நல்லது.
* உங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனம் செயல்படுவதற்கு முறையான உரிமம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
* தனிநபர் கடன்களில் நேரடியாக அனுபவம் உள்ளவர்களிடம் அது தொடர்பான ஆலோசனைகளை பெறுங்கள்.
* தனிநபர் கடன் வழங்குபவர்கள், கடன் பெறுதல் தொடர்பாக உங்களை விரைவாக முடிவுகளை எடுக்குமாறு அழுத்தம் கொடுத்தால் அவர்களை தவிர்த்து விடுங்கள்.
* ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள், வங்கிக் கணக்கு எண் அல்லது தனிப்பட்ட அடையாளம் போன்ற முக்கியமான தகவல்களை சட்டப்பூர்வமாக கடன் வழங்கும் நிறுவனத்திடம் மட்டுமே பகிருங்கள்.
* பெரும்பாலான மோசடிகள் இணையதளம் மூல மாகத்தான் நடைபெறுகிறது. எனவே கடன் தவணையை செலுத்துவதற்கு முன்பு. கடன் வழங்குபவரின் இணையதளம் பாதுகாப்பானதா மற்றும் சரியான தர நிர்ணய சான்றுகளுடன் செயல்படுகிறதா என்பதை விசாரித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
* கடன் தொகையை வழங்குவதற்கு முன்பு குறிப்பிட்ட ஒரு தொகையை தாங்கள் முன்பணமாக செலுத்த வேண்டும் எனவும், அதை தங்களுக்கு அளிக்கும் கடன் தொகையோடு சேர்த்து வழங்குவதாகவும் நிர்பந்திக்கும் நிறுவனங்களை தவிர்ப்பதே நல்லது.
* இந்தியாவில் இருக்கும் அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களும், இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்திருக்க வேண்டும். நீங்கள் கடன் பெறுவதற்கு முன்பு உங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனம் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஏதேனும் மோசடியில் நீங்கள் சிக்கிக் கொண்டதாக தெரிந்தால், அது குறித்து பெடரல் டிரேட் கமிஷன் அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும்.
- எப்போதும் நல்ல வார்த்தைகள் பேசுவது ஒருவகை பயிற்சி கலை.
- கற்றவர்கள் செல்லும் இடமெல்லாம் மகிழ்ச்சி மணம் பரப்பும்.
நம்பிக்கை தரும் நல்ல வார்த்தைகளுக்கு, தனி சக்தி இருக்கிறது. உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலாக பேசும் நம்பிக்கைக்குரிய வார்த்தைகள் மருந்துக்கு இணையானவை.
மருத்துவ உலகமே வியக்கும் அளவிற்கு உடல் பலவீனமான நிலையில் இருந்தவர்களை அன்பும், ஆறுதலும் மீட்டெடுத்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மருத்துவம் கைவிடும் நிலையில் இருந்தவர்களை நம்பிக்கையான ஆறுதல் வார்த்தைகள் காப்பாற்றி இருக்கிறது.
எத்தகைய நோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தாலும் மனதில் நம்பிக்கை ஏற்படுமானால் அது மருந்தை விட வேகமாக வேலை செய்யும்.
உடலுக்கும் மனதிற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. மனம் நல்ல நிலையில் இருந்தால் அதுவே ஆரோக்கியத்தை மீட்டெடுத்து கொடுத்துவிடும். அதனால்தான் அதனை முக்கிய பயிற்சியாகவே மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அளிக்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுக்க வேண்டி இருந்தால் அவர்களுக்கு தேவை மருந்து மட்டுமல்ல, அன்பாக வார்த்தைகளும் கூட. இதனை `யூனிவர்சல் ரெமிடி' என்று அழைப்பார்கள்.
பிரபஞ்சத்தில் சுழன்றுக்கொண்டிருக்கும் நல்ல சக்திகள் நம் எண்ணங்களுக்கு கட்டுப்பட்டு நம்மை நோக்கி வரும். நம்மிடம் இருந்து வெளிப்படும் நல்ல வார்த்தைகள் அவைகளை பலப்படுத்தும். பிறகு அது செயலாகும். இதுவே பிரபஞ்ச இயக்கம். இதனை செயல்படுத்தி பார்த்தால் நன்மைகள் விளையும். அதேவேளையில் எதிர்மறையாக பேசும் வார்த்தைகளும் இதுபோன்ற ஒரு இயக்கத்தை தோற்றுவிக்கும்.
சுற்றி இருப்பவர்கள் பேசும் நல்ல வார்த்தைகள் கேட்பவர்களின் மனதுக்குள் நல்ல எண்ணங்களை தோற்றுவிக்கும். அது மகிழ்ச்சியாக மாறும். அந்த மகிழ்ச்சி மனதுக்குள் அதிர்வு அலைகளை ஏற்படுத்தும். இந்த அலைகள் பிரபஞ்சத்தில் சுழன்று கொண்டிருக்கும் அதேபோன்ற அலைகளை ஈர்க்கும். அது பல மடங்காகும்போது அதற்கென தனி சக்தி பிறக்கும். அந்த சக்தி நம் எண்ணங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் என்கிறது விஞ்ஞானம்.
மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளிகள் ஒவ்வொருவரையும் வீட்டிற்கு அனுப்பும் முன்பாக அவர்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறார்கள்.
நோய்வாய்ப்பட்டு உடலளவில் பலவீனமான நிலையில் இருப்பவர்களை எப்படி நடத்த வேண்டும்? அவர்களிடம் எப்படி பேசவேண்டும்' என்பது பற்றி தெளிவாக விளக்குகிறார்கள்.
நோய்க்காக சாப்பிடும் மருந்து, மாத்திரைகளை விட ஆறுதலாக பேசும் வார்த்தைகள்தான் அவருடைய உடல் நலனுக்கு பலம் ஏற்படுத்தி கொடுக்கும் என்பதை புரியவைக்கிறார்கள்.
நோயாளிகளிடம் வீட்டில் உள்ளவர்கள் நன்கு உபசரிப்பு காட்டினால் அது உடல் நலனை மேம்படுத்தும். நோயாளிகளிடம் அவருடைய நலம் விரும்பிகள் நடந்து கொள்ளும் முறைதான் அவர்களை விரைந்து குணப்படுத்தும். அதுதான் யதார்த்தம்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்கப் போனாலும், அவர்களுக்கு நம்பிக்கை தரும் நல்ல வார்த்தைகளை பேசவேண்டும். மருத்துவமனை சூழ்நிலை அவர்களை மனரீதியாக பாதிக்க வைத்திருக்கும். அப்போது எதிர்மறை சிந்தனைகள் அவர்களுக்குள் எட்டிப்பார்க்கும். அதனால் அவர்கள் பலவீனமடைந்து சோர்ந்து காணப்படுவார்கள். அது போன்ற சமயத்தில் நோயாளிகளிடம் பேசும் நல்ல வார்த்தைகள் அவர்களை குணமடையச் செய்யும். தேவையில்லாத வார்த்தைகளைப் பேசி அவர்களை மேலும் பலவீனப்படுத்திவிடக்கூடாது.
எப்போதும் நல்ல வார்த்தைகள் பேசுவது ஒருவகை பயிற்சி கலை. இந்த பயிற்சி நல்ல ஆற்றலை உருவாக்கும். அதனை கற்றவர்கள் செல்லும் இடமெல்லாம் மகிழ்ச்சி மணம் பரப்பும்.
- நட்பான மனோபாவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
- விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சுபாவத்தைப் பெற வேண்டும்.
பல காலம் குழு உறுப்பினராக பணியாற்றிவிட்டு, தலைமை பதவிக்கு காத்திருக்கும் இளைஞரா நீங்கள். அப்படி என்றால், உங்களிடம் இந்த பண்புகள் எல்லாம் இருக்கிறதா? என சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாதபட்சத்தில் கீழ் இருக்கும் தலைமை பண்புகளை வளர்த்து கொள்ளுங்கள்.
* எதையும் சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சி தான் உங்களிடம் அவசியம் காணப்படவேண்டிய திறன். இதை நீங்கள் பெற்றிருக்கும் போது நீங்களும் நீங்கள் சார்ந்திருக்கும் குழுவும் எந்த வேலையையும் எளிதாக திறம்பட முடிக்க முடியும். இதனால் வெகுவிரைவிலேயே பலரது கவனத்தை கவரக்கூடியவராக மாறிவிடுவீர்கள்.
* ஐ.டி. துறையில் பணிபுரிபவர் என்ற வகையில் பல மாநிலத்தவரோடும், சில நாட்டினரும் கூட நீங்கள் பணி புரிய நேரலாம். பல கலாசாரம், பல மொழிகள், பல இனம் என ஒருங்கே இணைந்து பணியாற்றும் ஐ.டி. சூழலில் தகவல் தொடர்பு என்பது மிக முக்கியமானது. சிறப்பான தகவல் தொடர்பு இருந்தால் மட்டுமே உங்கள் குழுவால் இலக்கை எட்ட முடியும். இண்டர்நெட், வீடியோ கான்பரன்சிங், தொலைபேசி என எந்த ஊடகத்தின் வழியான தகவல் பரிமாற்றத்திற்கும் இது மிக உதவும்.
* உங்களது திறமையான அணுகுமுறை, சிறப்பான தகவல் தொடர்புத்திறன் ஆகியவற்றைக் கொண்டு உங்களது குழுவை வழிநடத்திச் செல்வது அடுத்ததாகத் தேவைப்படும் திறன். இப்படி விளங்க, நீங்கள் இனிமையாக பழகக்கூடியவராகவும், நட்பான மனோபாவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
* உங்களது குழுவில் பணியாற்றும் ஜூனியர் ஊழியர்களின் பலத்தை அறிந்து அதற்கேற்ப பணிகளை பிரித்துக் கொடுக்க முனையும் குணத்தைப் பெற்றிருக்க வேண்டும். சரியான நபருக்கு சரியான வேலை என்பது உங்களது அடிப்படை நோக்கமாக இருந்தால் தான் இதைப் பெற முடியும்.
* சிறப்பான இலக்கை எட்டும் போது, அதற்கான பாராட்டுக்களையும், பிற ஊக்க வெளிப்பாடுகளையும் அதற்கு காரணமான அத்தனை பேருக்கும் உரித்தாக்குவது ஒரு நல்ல குணம். வெளிப்படையாக இது போல பாராட்டப்படும்போது அவர்களின் ஆர்வமும் செயல்பாடும் இன்னமும் மேம்படும் என்பதை அறியுங்கள்.
* உங்களையே நீங்கள் பாராட்டிக் கொள்வதும் மேலும் ஊக்கப்படுத்திக் கொள்வதும் கூட முக்கியம் தான். உங்கள் குழுவினரையும் தட்டிக் கொடுத்து சிறப்பாக பணிபுரியச் செய்யும் குணமும் அவசியமான ஒன்று தான்.
* நகைச்சுவை உணர்வைப் பெற்றிருப்பது பலருக்கும் பிடித்த குணம் அல்லவா? என்றாலும் செயற்கையாக இதை கொண்டு வர முடியாது. இதுதவிர பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து பணி புரியும் போது அவற்றை தெரியாமல் கூட கிண்டல் அடிப்பது ஆபத்தானது.
* உங்களிடம் பணி புரிபவரை புரிந்து கொண்டு அவர்களை வழிநடத்தும் திறனும் தேவை. இதனால் பணியிடத்தில் உறவுகள் மேம்படும்.
* விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சுபாவத்தைப் பெற வேண்டும்.
* `ரிஸ்க்' இல்லாத துறை எது தான் இருக்கிறது? தோல்விகளுக்குப் பொறுப்பேற்பதும், வெற்றியை பகிர்ந்தளிப்பதும் உன்னதமான குணங்கள். இவை இருக்கிறதா என பரிசீலித்துக் கொள்ளுங்கள்.
* படிக்கும் போதும் சரி, பணி புரியும் போதும் சரி அந்த குழுவில் ஒருவராவது எதிர்மறையான சுபாவத்தைப் பெற்றிருப்பதைக் காணலாம். அப்படிப்பட்டவர்களை அனுசரித்து செல்ல பழகிக் கொள்ள வேண்டும். அவர்களை மென்மையாக அணுகி வழிக்குக் கொண்டு வர வேண்டும்.
* பன்முகத் திறன்களைப்பெற பன்முகப்பணிகளை செய்து அனைத்தையும் சரியான திட்டமிடலோடு முடித்திட பழகிக் கொள்ள வேண்டும்.






