என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது.
    • இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

    நம்முடைய பாரம்பரிய உணவுப் பொருட்களான சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும், தூக்கத்தை சீராக்கும், அதிகப்படியான உடல் எடையையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். புற்றுநோய் வராமல் பாதுகாக்கும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தும்.

    பல்வேறு சிறுதானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்த சத்துமாவு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. இல்லத்தரசிகள் இந்த சிறுதானிய சத்துமாவு தயாரிப்பை சுயதொழிலாகவும் செய்ய முடியும். எந்தவிதமான பதப்படுத்தும் பொருட்களும் சேர்க்காமல் தயாரிப்பதால், சிறுதானிய சத்துமாவுக்கு வரவேற்பு நன்றாகவே இருக்கும். பெரிய அளவிலான முதலீடுகள் இதற்கு தேவையில்லை. முதலில் உங்களுடைய தேவைக்காக தயாரித்து பயன்படுத்தி பாருங்கள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வியாபார நோக்கில் தயாரித்து விற்பனை செய்யலாம். இது பற்றிய தகவல்கள் இதோ...

    சிறுதானிய சத்துமாவு தயாரிக்க தேவையான பொருட்கள்:

    பிசினி அரிசி, மூங்கில் அரிசி, கருப்பு கவுனி அரிசி. மாப்பிள்ளை சம்பா அரிசி, சிவப்பு அரிசி, முழு கோதுமை. வெள்ளை சோளம், ராகி, கொள்ளு, குதிரை வாலி, வரகு,சாமை, தினை, கம்பு, பார்லி, இவற்றை தலா 100 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

    செய்முறை:

    ஒரு பெரிய பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 முறை கழுவிக் கொள்ளவும். பின்னர் தண்ணீரை நன்றாக வடியச் செய்து, சுத்தமான பருத்தித் துணியில் அவற்றை கொட்டி நிழலில் உலர்த்தவும்.

    ஈரப்பதம் முழுவதுமாக நீங்கிய பிறகு, மாவு மில்லில் கொடுத்து மென்மையான மாவாக பொடித்துக் கொள்ளவும். மாவில் இருக்கும் சூடு முழுவதுமாக நீங்கும் வரை ஆற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அது சூடானதும், இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி மிதமான தீயில் வறுக்கவும். சுத்தமான பருத்தித் துணியில் அந்த மாவைக் கொட்டி மீண்டும் ஆற வைக்கவும்.

    பின்னர் ஈரப்பதம் இல்லாத, காற்று புகாத, சுத்தமான சில்வர் அல்லது கண்ணாடி டப்பாக்களில் மாவை நிரப்பி பத்திரப்படுத்தவும். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தி வரலாம்.

    சிறுதானிய சத்துமாவு கஞ்சியை இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதைத் தவிர்க்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகள், இளம் பருவத்தினர். கர்ப்பிணிகள், முதியவர்கள் இதை சாப்பிடலாம். இந்த சத்துமாவில் கஞ்சி மட்டுமில்லாமல் புட்டு.

    கொழுக்கட்டை இடியாப்பம் என பலவிதமான பல காரங்களை தயாரித்து வழங்கலாம். வணிக முறையில் சந்தைப்படுத்துவதற்கான சான்றிதழ்களைப் பெற்று. தரமான முறையில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.

    • தண்ணீரின் தன்மையை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
    • யு.வி., ஆர்.ஓ. சுத்திகரிப்பான்கள் மின்சாரம் இல்லாமல் இயங்காது.

    குடிநீர் சுத்திகரிப்பு கருவியை வாங்குவதற்கு முன்பு, உங்கள் வீட்டில் இருக்கும் தண்ணீரின் தன்மையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். உங்களுடைய குடிநீர் ஆதாரம் நீர்நிலைகளில் இருந்து பெறப்படும் தண்ணீரா அல்லது நிலத்தடி தண்ணீரா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நோய்க்கிருமிகளால் அந்த தண்ணீர் மாசுபட்டிருந்தால் யு.வி. அல்லது யு.எப். போன்ற அம்சங்கள் கொண்ட வாட்டர் பியூரிபையரை தேர்ந்தெடுக்கலாம்.

    தண்ணீரில் அதிகப்படியான உப்பு இருந்தால் யு.வி. அல்லது யு.எப். உடன் கூடிய ஆர்.ஓ. சுத்திகரிப்பு கருவியை தேர்ந்தெடுக்கலாம். சில வகை தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளின் இயக்கத்தில் மின்சாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மின்சாரம் இல்லாமல் வேலை செய்யக்கூடிய கருவிகளும் கிடைக்கின்றன.

    யு.வி. அல்லது ஆர்.ஓ. சுத்திகரிப்பான்கள் மின்சாரம் இல்லாமல் இயங்காது. எனவே அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள், மின்சாரம் இல்லாமல் வேலை செய்யக்கூடிய அல்லது குறைந்த மின் சக்தியை பயன்படுத்தக்கூடிய சுத்திகரிப்பு கருவிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

    தண்ணீர் அழுத்தம் அதிகம் உள்ள இடங்களில் சுத்திகரிப்பான்களை அமைக்க வேண்டும். 2 வெப்பத்தை வெளியிடும் பொருட்களுக்கு அருகிலோ அல்லது நேரடி சூரிய ஒளி படும் இடங்களிலோ தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை நிறுவக்கூடாது.

    பெரும்பாலான சுத்திகரிப்பு கருவிகளில் பயன்படுத்தப்படும் வடிகட்டி, பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டிருக்கும். அதிகமான வெப்பத்தால் அது சிதைந்து விடும். அதில் உள்ள தண்ணீரை குடிக்கும்போது ஆரோக்கிய சீர்கேடுகள் உண்டாகும்.

    குடிநீர் சுத்திகரிப்பு கருவியில் உள்ள வடிகட்டியை அடிக்கடி கழற்றி சுத்தம் செய்யும் வசதி உள்ள இடத்தில் அதை பொருத்துவது சிறந்தது.

    குடிநீர் சுத்திகரிப்பு கருவியில் பொருத்தப்படும் வடிகட்டியில், வண்டல் வடிகட்டி, கார்பன் வடிகட்டி, யு.வி. வடிகட்டி, ஆர்.ஓ. வடிப்பான் கள் என பல வகைகள் உள்ளன. உங்கள் வீட்டில் உள்ள தண்ணீரின் தரத்திற்கு ஏற்ற வடிகட்டி பொருத்தப்பட்டுள்ள சுத்திகரிப்பு கருவியை தேர்ந்தெடுப்பது நல்லது.

    குளோரின், காப்பர், இரும்பு, ஈயம். பி.எச். சோதனைகளை செய்த பிறகு குடிநீர் சுத்திகரிப்பு கருவியை வாங்குவது நல்லது. சுத்திகரிப்பு கருவியில் உள்ள வடிகட்டியை அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியை அமைக்க வேண்டும். தண்ணீரை நேரடியாக பயன்படுத்துவதை தவிர்த்து. தொட்டி அமைத்து அதில் நீரை சேகரித்து பின்னர் அதை கத்திகரிப்பு கருவி மூலம் சுத்தப்படுத்தலாம்.

    • வித்தியாசமாக பரிசுப்பொருட்கள் கொடுப்பதற்கும் முதல் சாய்ஸ்.
    • பார்க்கவும் வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும்.

    பொதுவாக மெழுகுவர்த்தி செய்ய மோல்டு அவசியம். சில மோல்டுகளின் விலை மிகவும் அதிகம். மேலும் அச்சில் ஊற்றி அது காய்ந்ததும் இறக்கி செய்வது அவ்வளவு கடினமில்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம். அனைவரையும் கவரும் வகையில் உருவானதே இந்த ஐஸ்கிரீம் மெழுகுவர்த்தி. கல்யாண நிகழ்ச்சியில் சீர்வரிசை தட்டு, ஆரத்தி தட்டு வைக்கும் போது இந்த ஐஸ்கிரீம், கேக், ஸ்நாக் வடிவ மெழுகு வர்த்திகளை பயன்படுத்தலாம். பார்க்கவும் வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும். மேலும் வித்தியாசமாக பரிசுப்பொருட்கள் கொடுப்பதற்கும் இது முதல் சாய்ஸ்.

    தேவையான பொருட்கள்:

    சிலிக்கான் அச்சுகள்

    கண்ணாடி டம்ளர்கள்

    லிக்விட் டை (மெழுகுவர்த்தியில் நிறம் சேர்ப்பதற்கு)

    பாரபின் மெழுகு - 3 கப்

    சோயா மெழுகு 1 கப்

    ஜெல் மெழுகு - 1 கப்

    அரோமா எண்ணெய்- சில துளிகள்

    திரி- 2

    செய்முறை:

    அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் பாரபின் மெழுகை போட்டு மிதமான தீயில் கவனமுடன் உருக்க வேண்டும். பின்னர் அதனுடன் உங்களுக்குப் பிடித்த நிறங்களைச் சேர்த்து கலக்க வேண்டும். பல வடிவங்களில் இருக்கும் சிலிக்கான் அச்சுகளில் மெழுகை ஊற்றி ஆற வைக்க வேண்டும்.

    சாக்லேட் செய்ய பயன்படுத்தும் சிலிக்கான் அச்சுகளையும் இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அச்சுகளில் இருக்கும் மெழுகை 30 நிமிடங்கள் கழித்து மெதுவாக எடுக்க வேண்டும். மீதம் இருக்கும் பாரபின் மெழுகில் ஒரு பகுதியை எடுத்து உருக்கி, அதில் தேவையான நிறத்தை சேர்த்து கலக்க வேண்டும்.

    பின்னர் அதை கண்ணாடி டம்ளர்களின் அடிப்பகுதியில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் சோயா மெழுகையும், 3 பாரபின் மெழுகையும் சம அளவு எடுத்து குறைவான தீயில் கவனமுடன் உருக்க வேண்டும். சில நிமிடங்களில் அது கெட்டியாகத் தொடங்கும்.

    முட்டையை அடித்து கலக்க பயன்படுத்தும் விஸ்க்கைக் கொண்டு, அந்த மெழுகை 5 நிமிடங்களுக்கு ஒரு முறை அடித்து கலக்க வேண்டும். இவ்வாறு நான்கு முறை செய்ய வேண்டும். பின்பு கேக் அலங்கரிக்கப் பயன்படுத்தும் பேஸ்ட்ரி பேக் அல்லது பாலித்தீன் கவரில் மெழுகை நிரப்ப வேண்டும்.

    ஜெல் மெழுகை உருக்கி அதனுடன் தேவையான நிறங்களைச் சேர்த்து கலக்குங்கள். பின்னர் பாரபின் மெழுகை ஊற்றி வைத்திருக்கும் கண்ணாடி டம்ளர்களில், அலங்காரத்திற்காக சில சிலிக்கான் அச்சு வடிவங்களைப் போடுங்கள்.

    அதன்பிறகு ஒரு சிறிய டீஸ்பூன் கொண்டு, உருக்கிய ஜெல் மெழுகை கண்ணாடி டம்ளர்களின் உள்ளே பக்கவாட்டுப் பகுதி வழியாக ஊற்றுங்கள். பேஸ்ட்ரி பேக்கில் நிரப்பிய மெழுகைக் கொண்டு ஐஸ்கிரீம் போல டம்ளரின் மேல் பகுதி வரை வட்ட வட்டமாக நிரப்பிக் கொண்டே வாருங்கள்.

    அலங்காரத்திற்காக அதன் மேல் பூக்கள், செர்ரி. சாக்லேட் போன்ற அச்சு வடிவங்களை ஆங்காங்கே வையுங்கள். மெழுகு கெட்டியாவதற்கு முன்பு அதில் திரியை பொறுத்த வேண்டும். இதன் மேலே உருக்கிய ஜெல் மெழுகை ஊற்றி அதற்கு மேல் உங்களுக்கு விருப்பமான அரோமா எண்ணெய் சில துளிகளை தெளியுங்கள். அவ்வாறு செய்வதால் மெழுகுவர்த்திகள் எரியும் போது நறுமணம் வீசும். இப்போது அழகான ஐஸ்கிரீம் மெழுகுவர்த்திகள் தயார்.

    • மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு வழங்குவதும் முக்கியமானது.
    • நன்றி சொல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

    கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகளை உள்ளடங்கிய குடும்பம் என்கிற கட்டமைப்பு இருப்பதாலேயே இன்பத்துடன் துன்பங்களை எதிர்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் மனித வாழ்க்கை பயணித்து கொண்டிருக்கிறது. அத்தகைய குடும்ப வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும். கொண்டாட்டம் என்றால் புன்னகைத்துக்கொண்டு இருப்பது மட்டுமல்ல.

    எல்லா சூழல்களையும் ஏற்றுக்கொள்வதும், எதிர்கொள்வதும், கடந்துசெல்வதும் தான். இதனை நமது அன்றாட வாழ்வில் பொருத்திப்பார்க்கும்போது வாழ்க்கை அழகாக தெரியும். இன்றைய இயந்திர வாழ்க்கை சூழலில் அதனை செயல்முறை பயிற்சி வழியாக கற்றுக்கொள்வதும், பின்பற்றுவதும் அவசியமானது.

    அது என்னவெனில் 1.நன்றி சொல்தல் 2.பாராட்டுதல் 3.மன்னித்தல். இந்த மூன்று வார்த்தைகளை அன்றாடம் குடும்ப உறுப்பினர்களிடத்தில் பயன்படுத்த வேண்டும். அதாவது கணவன் - மனைவி, பெற்றோர், பிள்ளைகள், சகோதர - சகோதரிகள் என எல்லோர் மட்டத்திலும் பயன்படுத்தினால் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் கொண்டாட்டமாகவே அமையும்.

    முதலாவது, நன்றி சொல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். நாம் மற்றவரை மதிக்கிறோம் என்ற உணர்வை அது வெளிப்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு செய்த உதவி சிறியதாக இருந்தாலும் நன்றி சொல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். நாம் அவர்களையும், அவர்களது செயல்களையும் ஏற்றுக்கொள்கிறோம் என்ற நம்பிக்கையை இது உருவாக்கும்.

    இரண்டாவது, பாராட்டுதல். குடும்ப உறுப்பினர்கள் முன்னின்று செய்யும் செயல்களுக்கு மனதார பாராட்ட வேண்டும். அதற்கு தயங்கக்கூடாது. பாராட்டுவது அந்த நபரின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம். குறிப்பாக மனைவியின் ஒவ்வொரு செயல்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். `சாப்பாடு நல்லா இருந்துச்சு' என்று சொல்லும்போது அது அவருக்கு மாபெரும் மகிழ்ச்சியையும், அங்கீகாரத்தையும் அளிக்கும்.

    அதுபோல் மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு வழங்குவதும் முக்கியமானது. எதிர்பாராதவிதமாக சிறு தவறுகள் நடக்கலாம். அதனை உணர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மன்னிப்பு கேட்கும் போது மன்னித்துவிட வேண்டும். தவறுகளை மன்னிக்கும் போதுதான் அவர் மீது நல்ல புரிதல் ஏற்படும். சில சமயங்களில் மன்னிக்க முடியாத தவறை செய்திருந்தாலும் கூட கோபத்தை வெளிப்படுத்தாமல் அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும். அந்த மன நிலையே மன்னிக்கும் பக்குவத்தை நமக்கு கொடுக்கும். மன்னிப்பு என்பது அன்பின் உச்சகட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்த மூன்று வழிமுறைகளையும் செயல்முறை பயிற்சியாக அன்றாடம் பின்பற்றும்போது என்ன நடந்தாலும் குடும்ப வாழ்க்கை நிம்மதியாக நகரும். இந்த செயல்முறை பயிற்சி நம்மிலும், குடும்பத்திலும் ஆரோக்கியமான உளவியல் மாற்றத்தை தரும் என்பது உளவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. இதனை அன்றாடம் பயிற்சி செய்வோம்... மகிழ்ச்சியாக வாழ்வோம்!

    • அனைத்து மக்களுமே நோயின்றி வாழ்வதையே விரும்புகின்றனர்.
    • நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்வது மிகவும் நல்லது.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அனைத்து மக்களுமே நோயின்றி வாழ்வதையே விரும்புகின்றனர். நம் உடல் ஆரோக்கியம் என்பது நமது உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றோடு தொடர்புடையது. என்னதான் நாம் சிறந்த உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிவிட்டால் அந்த நோய் வயதிற்கான நோய் அறிகுறிகள் நமக்கு ஏற்படலாம். இதனைத் தவிர்த்துக் கொள்ள 30 வயதை கடந்த பெண்கள் கீழ்காணும் பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.

     நீரிழிவு நோய் பரிசோதனை:

    நீரிழிவு நோய் என்பது இன்று பலருக்கும் இருக்கக்கூடிய ஒன்று. மாறிவரும் நம்முடைய வாழ்க்கை முறையின் காரணமாக பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருக்கிறது. உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றாலும் இந்த நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்வது மிகவும் நல்லது. எனவே முப்பது வயதை கடந்து விட்டால் ரத்த குளுக்கோஸ் பரிசோதனை மற்றும் ஹெச்ஏஒன்சி ஆகிய பரிசோதனைகளை செய்து கொள்வது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒன்றாகும்.

     புற்றுநோய் பரிசோதனை:

    30 வயதை கடந்த பெண்களை தாக்கக்கூடிய மற்றொரு நோய் கர்ப்பப்பை புற்று நோயாகும். இந்த நோய் வரும் முன்பே கண்டறிவதற்கு பாப் ஸ்மியர் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கர்ப்பப்பை புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும். முறையற்ற மாதவிலக்கு சுழற்சி இருக்கும் பெண்கள் கட்டாயம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை செய்து கொள்வது இந்த நோயின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வழிவகுக்கும்.

     இதயநோய் பரிசோதனை:

    இதய நோய் என்பது இன்று எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எனவே 30 வயதை கடந்து விட்டால் நம்முடைய ரத்த அழுத்தம், ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றை ஒரு வருடங்களுக்கு அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    மார்பக புற்றுநோய்:

    30 வயதிற்கு மேற்பட்ட பெண்களை தாக்கும் அபாயகரமான நோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். 30 வயதை கடந்து விட்டால் மார்பகப் புற்று நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்ள தயங்கக் கூடாது. இதற்கான மேமோகிராபி பரிசோதனையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்து கொள்ள வேண்டும்.

    • பிரசவத்திற்கு பின் வரும் தழும்புகள் தவிர்க்க முடியாதது.
    • தழும்புகள் குறித்த கவலை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது.

    பிரசவ தழும்புகள் மறைய பிரசவத்திற்கு பின் வரும் தழும்புகள் தவிர்க்க முடியாதது எல்லா பெண்களுக்கும் அது ஏற்படும். கர்ப்ப காலத்தில் குழந்தை உள்ளே வளர்வதற்காக உடல் வேகமாக வளர்ந்து விரிவடையும். அதே சமையம் குழந்தை பிறந்தவுடன் வயிற்றில் இருந்த இறுக்க தன்மை குறைந்து தோல் சுருக்கமாகவோ அல்லது வயிற்றில் தழும்புகள் ஏற்பட்டது போலவோ காணப்படும்.

    இந்த தழும்புகள் குறித்த கவலை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. கவலை வேண்டாம் இந்த தழும்புகளை சில எளிய வழிகள் மூலம் சரி செய்யலாம்.

    பிரசவத்திற்கு பின் வயிற்றில் தழும்பு மறைய கொஞ்சம் ஆயிலை எடுத்து மெதுவாக வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தடவுங்கள். அதாவது உள்ளங்கையில் சிறிதளவு எண்ணெயை எடுத்து வயிற்றில் ஒரு பகுதியில் இரண்டு நிமிஷம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு இதே மாதிரி அடுத்த பகுதியிலும் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்யும் போது ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனால் செல்கள் வேகமாக செயல்பட ஆரம்பிக்கும். தழும்புகள் சீக்கிரமாக மறைய ஆரம்பிக்கும்.

    யோகா

    பிரசவ தழும்புகள் மறைய யோகா மற்றும் உடற்பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. அதாவது வாக்கிங், யோகா போன்ற லேசான பயிற்சிகள் கூட இடுப்பு, தொடை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் இருக்கும் தசைகளை வலுப்படுத்தும். தசைகள் வலுவானால் தளர்ந்து போன சருமம் சரியாகி விரைவில் குணமாகும்.

    முட்டை:

    பிரசவ தழும்புகள் மறைய முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின் மற்றும் மெக்னீஷியம் போன்ற நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் பிரசவ தளும்புகளை போக்க உதவியா இருக்கின்றன.

    ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து தனியாக அடித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். பின்பு இளஞ்சூடான தண்ணீரை கொண்டு தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் உள்ள இடத்தில் நன்கு துடைத்து விட்டு. அடித்து வைத்துள்ள முட்டையின் வெள்ளை கருவை தழும்புகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள்.

    அதன்பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வரை அப்படியே வைத்திருக்கவும். பின்னர் இளஞ்சூடான தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரன்டு அல்லது மூன்று முறை செய்து வர பிரசவத் தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

    கற்றாழை:

    பிரசவ தழும்புகள் மறைய கற்றாழை ஜெல்லை எடுத்து தேரடியாக தழும்புகள் இருக்கும் பகுதியில் தடவினால் நாளடைவில் தழும்புகள் மறைந்து விடும். கற்றாழை சருமத்தை மென்மைப்படுத்தும்.

    தேன்:

    பிரசவத் தழும்புகள் மறைய சுத்தமான மலை தேனை எடுத்து தழும்புகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். தேன் நன்கு காய்ந்தவுடன் இளஞ்சூடான தண்ணீரில் கழுவினால் சீக்கிரமாக பிரசவ தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

    • இடுப்பில் ஒட்டியாணம் அணிவது பழைய பேஷன்.
    • பெல்ட் அணிந்து வித்தியாசமான ஸ்டைலை உருவாக்க முடியும்.

    இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்ப பேஷன் உலகை புதுமையான டிசைன்கள் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றன. அவை பழமையில் புதுமையை பிரதிபலிக்கும் ஆடை ரகங்களாகவும் உருமாறிக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறது பெல்ட் ஆடை ரகங்கள்.

    இடுப்பில் ஒட்டியாணம் அணிவது பழைய பேஷன். அந்த இடத்தை இப்போது பெல்ட்டுகள் அலங்கரிக்க தொடங்கி இருக்கிறது.

    ஒட்டியாணம் போலவே பெல்ட்களும் அழகிய அலங்காரங்களில் மிளிர்கின்றன. அவை புது அவதாரம் எடுத்து ஆடைக்கு எடுப்பான தோற்றத்தை உருவாக்கிக் கொடுக்கின்றன. அதனால் வளையல்கள், கம்மல்கள், கொலுசுகள் வரிசையில் பெல்ட்டும் ஆடைகளுக்கு அழகு சேர்க்கும் ஆபரணங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.

    அதிலும் நவநாகரிக உடைகளை அணிய விரும்பும் பெண்களுக்கு ஏற்ப தங்க நிற பெல்ட்டுகள், லெதர் பெல்ட்டுகள் என அழகிய டிசைன்களில் வடிவமைக்கப்படுகின்றன.

    ஒரே ஆடைக்கு வேறு, வேறு பெல்ட்டுகளை அணிவித்து வித்தியாசமான ஸ்டைலை உருவாக்கவும் முடியும். சாதாரண உடையாக இருந்தாலும் அணியும் பெல்ட் அந்த உடையின் மதிப்பை அதிகப்படுத்தி விடும். தோற்றத்திற்கும் புது பொலிவை ஏற்படுத்தி கொடுக்கும் என்கிறார்கள் பேஷன் டிசைனர்கள்.

    திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ஒட்டியாணம் அணிவது நெடுங்கால பழக்கமாக இருந்து வருகிறது. அதனை அணியும்போது சேலையின் முந்தியும், மடிப்புகளும் நேர்த்தியாக அமைந்து விடும். அவை உடல் அமைப்புக்கு பொருத்தமாக இருக்கும். அதுபோலவே பெல்ட்டுகளும் இடுப்புக்கும், உடுத்தும் ஆடைக்கும் சவுகரியமாக அமைந்திருக்கின்றன.

    சில சமயங்களில் கீழே குனிந்தாலோ, நிமிர்ந்தாலோ ஆடைகள் தளர்ந்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடும். அந்த குறையை பெல்ட்டுகள் நிவர்த்தி செய்துவிடும். அதற்கேற்ப இளம் பெண்களை கவரும் அம்சங்களுடன் அவை வடிவமைக்கப்படுகின்றன. இப்போது புடவையுடன் சேர்ந்தே உடுத்தும் வகையிலும் பெல்ட் ஆடைகள் உலா வருகின்றன.

    புடவைகள் தவிர இளம் பெண்கள் விரும்பி அணியும் மார்டன் ஆடைகளிலும் பெல்ட்டுகள் பதிக்கப்படுகின்றன. அவை பாதுகாப்பு அம்சங்களை மட்டும் உள்ளடக்கி இருக்காமல் புது விதமான ஸ்டைலையும் தருவதால் இந்த ரக ஆடைகளுக்கு மவுசு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    • நடத்தைகளில் பல வகை உள்ளன.
    • பெண் மீது வன்செயல்களை செய்ய நினைக்கிறார்கள்.

    பெண்ணை அடிக்கடி பின்தொடர்வது, கண்காணிப்பது, தொந்தரவு பண்ணுவது, தன் காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நச்சரிப்பது, கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்புவது... இதுபோன்ற செயலினால் பெண்ணுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை `ஸ்டாக்கிங்' என்கிறார்கள். இம்மாதிரியான நடத்தைகளில் பல வகை உள்ளன. பெண்களால் நிராகரிக்கப்பட்டதால், அடிக்கடி பின்தொடர்வதும் தொந்தரவு செய்வதும் உண்டு. அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும்கூட மாறலாம்.

    இம்மாதிரியான ஒரு ஆண், குறிப்பிட்ட ஒரு பெண் தன்னைப் புறக்கணிப்பதாகக் கருதி மனஉளைச்சலுக்கு ஆளாகிறார். தான் அவமதிக்கப்பட்டதாக மனம் புழுங்குகிறார். அதைப் பற்றியே திரும்பத்திரும்பச் சிந்திக்கிறார். அந்த எண்ணத்தை மனதில் இருந்து களைய முடிவதில்லை. சில வேளைகளில் பழிவாங்கவும் துடிக்கிறார். தனக்குக் கிடைக்காத ஒரு பெண், வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று பொறுமுகிறார். இது சில நேரம் வன்முறையிலும் கொலையிலும் முடிகிறது.

    இன்னொருபுறம், பெண்களை பின்தொடர்ந்து தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடுகிறார்கள். பெண்ணின் உணர்வுகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. கோரிக்கை மறுக்கப்படும்போது, அந்த பெண் மீது வன்செயல்களை செய்ய நினைக்கிறார்கள்.

    பின்தொடரும் நடத்தையை, ஒரு குற்றமாக மட்டும் கருதுவதும் தவறு. இதை ஒரு தனிமனிதனின் மனப்பிறழ்வாகவோ அல்லது வக்கிரமான மனநிலையின் வெளிப்பாடாகவோ அணுகுவதும் தவறு.

    மாறாக, நம் சமூகத்தில் ஆழமாக ஊடுருவியுள்ள பண்பாட்டு வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும். ஒரு குற்றத்தின் வேர் எது, கிளை எது? என்று இனம் காண்பது இதில் மிக அவசியம். பாலியல் குற்றங்களுக்கு பெண்களின் நடை, உடை, பாவனையைக் குறை கூறுவது சிலரிடையே வாடிக்கையாக உள்ளது. பாலியல் பற்றி ஆரோக்கியமான விவாதமும் அறிவார்ந்த உரையாடலும் இன்று நம்மிடையே இல்லை. பெற்றோரும் இது பற்றி தம் பிள்ளைகளுடன் பேச தயக்கம் காட்டுகிறார்கள். இம்மாதிரியான பண்பாட்டு சூழலில் பாலியல் கல்வி இன்றியமையாத ஒன்றாகிறது.

    • பெண்களுக்கு தங்கத்தின் மீது தனிப்பட்ட ஈடுபாடு உண்டு.
    • உலக அளவிலும் தங்கத்துக்கு அதிக மதிப்பு உள்ளது.

    இந்திய பெண்களுக்கு தங்கத்தின் மீது தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. உலக அளவிலும் தங்கத்துக்கு அதிக மதிப்பு உள்ளது. தங்கத்தின் மீதான சேமிப்பு என்பது ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்ததில் இருந்தே தொடங்கி விடுகிறது. தங்கம். பல இந்திய குடும்பங்களின் அவசரகால நிதியாகவே செயல்படுகிறது. அனைத்து துறைகளும் தொடர்ந்து டிஜிட்டல் மய மாகிவரும் வேளையில், தங்கமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது. 'டிஜிட்டல் தங்கம்' குறித்து தெரிந்து கொள்வோம்.

    டிஜிட்டல் தங்கம்:

    டிஜிட்டல் தங்கம் என்பது தங்கத்தின் விலையுடன் தொடர்புடைய மதிப்பைக் கொண்டிருக்கும். உலோகமாக இல்லாமல் தங்கத்தை டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்து கொள்ளவும். சேமித்து வைத்திருக்கவும் முடியும். இதன்படி தங்கத்தை சேமிப்பது மற்றும் பாதுகாப்பது போன்ற செயல்பாடுகள் இல்லாமல், அதன் மதிப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

     வாங்கும் வழி:

    ஆன்லைன் தரகர்கள், வங்கிகள் மற்றும் சிறப்பு தங்க விற்பனையாளர்கள் உள்பட பல வணிக நிறுவனங்கள் மூலம், டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும். இணையவழி பரிவர்த்தனை செயலிகள் மூலமாக இ-வாலட்களில் இருந்தும் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம். இதை உலோக தங்கமாக மாற்றிக்கொள்ளவும் முடியும்.

    இந்த முறையில் தங்கம் வாங்குவதற்காக தனிப்பட்ட பண சேமிப்போ, குறிப்பிட்ட நேரமோ ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் குறைந்த அளவு பணம் இருந்தாலும், அதற்கு ஏற்ற அளவிலான தங்கத்தை வாங்க முடியும்.

    டிஜிட்டல் தங்கத்தின் செயல்பாடு:

    தங்கத்தின் விலை குறையும் நேரத்தில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கி, தங்க விலை உயரும் சமயத்தில் அதை எளிதாக விற்றுவிடலாம். டிஜிட்டல் தங்கம் வாங்கி 24 மணிநேரம் கழித்து மட்டுமே அதை விற்பனை செய்ய முடியும். டிஜிட்டல் தங்கத்தை 'சேப்லாக்' என்ற இணைய பெட்டகம் மூலம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஆனால் அதற்கான சேவை கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

     சிறப்பம்சம்:

    உலோகமாக கையில் வைத்திருக்கும் தங்கத்தை விற்பதற்கும். அடகு வைப்பதற்கும் காலதாமதம் ஆகக்கூடும். ஆனால், டிஜிட்டல் தங்கத்தை, நிதி நெருக்கடி உண்டாகும் சமயத்தில் எளிதாக விற்க முடியும். டிஜிட்டல் தங்கம் குறித்த பாதுகாப்பு என்பது நம்பகத்தன்மையானதாக இருக்கும். பரிசாக அளிக்க டிஜிட்டல் தங்கம் சிறந்த வழியாகும்.

    கவனிக்க வேண்டியவை:

    டிஜிட்டல் தங்க முதலீடு எவ்வித வட்டியையும் உருவாக்காது. இதில் முதலீடு செய்வதற்கு குறிப்பிட்ட அளவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தங்கத்தை குறுகிய காலத்துக்கு மட்டுமே. அவற்றுக்கான பாதுகாப்பு பெட்டகளில் சேமித்து வைக்க முடியும். இதை உலோக தங்கமாக மாற்றும்போது. இடைத்தரகு நிறுவனங்களுக்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.

    டிஜிட்டல் தங்கத்தை, உலோக தங்கமாக மட்டுமே பெற முடியும். பணமாக திரும்ப பெற முடியாது. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு, நிதி ஆலோசகர்களின் ஆலோசனை பெற்ற பின்னர் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது.

    • துணிகளை பராமரித்து வைக்க வசதியாக அலமாரிகள் இருக்கிறது.
    • மழை காலங்களில் துணிகளை உலர்த்த ஸ்டாண்டுகள் உதவும்.

    வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது தூசு, குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்வது மட்டும் அல்ல. வீட்டில் இருக்கும் பொருட்களை ஒழுங்குபடுத்தி, அவற்றுக்கான இடத்தில் அடுக்கி வைப்பதும் தான். அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் துணிகளை அழகாக அடுக்கி வைப்பதற்கும், மாட்டி விடுவதற்கும் பயன்படுபவை 'கிளாத் ஸ்டாண்டுகள்'.

    சில தலைமுறைகள் முன்புவரை, வீட்டின் சுவற்றில் ஆணி அடித்தும், ஹாங்கர்கள் பொருத்தியும் துணிகளைத் தொங்கவிட்டிருப்பார்கள். இதன் மூலம் சுவர்கள் சேதம் அடைவது. துணிகளில் பூச்சிகள் சேருவது மற்றும் ஒட்டடைகள் படிவது போன்ற பிரச்சினைகள் உண்டாகும். இதற்கான தீர்வாக வந்திருப்பது தான் 'கிளாத் ஸ்டாண்டு'. தற்போது சந்தையில் பல வகையான கிளாத் ஸ்டாண்டுகள் கிடைக்கின்றன. அவற்றுள் உங்களுக்குப் பொருத்தமான கிளாத் ஸ்டாண்டு... உங்களுக்கு எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கும் என்பதையும், அதன் பயன்பாட்டையும் பொறுத்து அதை வாங்குவதற்கான பட்ஜெட்டை முடிவு செய்ய வேண்டும்.

    மரம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட கிளாத் ஸ்டாண்டுகளையே பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஏற்கனவே உங்கள் வீட்டில் துணிகளை பராமரித்து வைக்க வசதியாக அலமாரிகள் இருக்கிறது என்றால், அடிக்கடி உபயோகிக்கும் துணிகளை மட்டும் கிளாத் ஸ்டாண்டில் தொங்க விடலாம். அத்தகைய தேவைக்கு மரத்தால் தயாரிக்கப்பட்ட கிளாத் ஸ்டாண்டு போதுமானது.

    மிகவும் கனமான ஆடைகளை மாட்டி வைப்பதாக இருந்தால், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிளாத் ஸ்டாண்டு சிறந்த தேர்வாக இருக்கும். வீட்டில் குறைந்த எண்ணிக்கையில் அலமாரிகள் இருந்தால், ஹாங்கர்கள் பயன்படுத்தும் அமைப்பு கொண்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிளாத் ஸ்டாண்டுகள் ஏற்றதாக இருக்கும். சக்கரங்கள் பொருத்தப்பட்ட கிளாத் ஸ்டாண்டுகளை வீட்டின் எல்லா அறைகளுக்கும் கொண்டு செல்லலாம் .

    மழைக்காலங்களில் துணிகளை உலர்த்தவும் இந்த ஸ்டாண்டுகளைப் பயன்படுத்தலாம். விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்காகவே போர்ட்டபிள் வார்ட்ரோப்புகளும் விற்கப்படுகின்றன. இவை கழற்றி மாட்டுவதற்கு வசதியாக இருக்கும்படி வடிவமைக்கப்படுவதால், இவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது சுலபமாக இருக்கும்.

    • பயணம் செய்பவர்கள் பலரும், சிரமத்தை சந்திப்பது உணவு விஷயத்தில் தான்.
    • சத்துள்ள உணவுகளை சாப்பிடாவிட்டால் அந்த பயணம் வெற்றிகரமாக அமையாது.

    பல்வேறு காரணங்களுக்காக பயணம் செய்பவர்கள் பலரும், சிரமத்தை சந்திப்பது உணவு விஷயத்தில் தான். பயணம் மேற்கொள்ளும் சமயங்களிலும், தாங்கள் செல்லும் இடங்களிலும், தங்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுகளை பெறுவது பலருக்கு சவாலாக இருக்கும். அதேசமயம், சத்துள்ள உணவுகளை சாப்பிடாவிட்டால் அந்த பயணம் வெற்றிகரமாக அமையாது என்பதும் உண்மைதான்.

    பசியை போக்கு வதற்காக உணவு சாப்பிட வேண்டும் என்பதைத் தாண்டி, சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை முதலில் நினைவில் நிறுத்துங்கள். உங்கள் பயணத்தின்போது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதற்கான எளிய குறிப்புகள் இங்கே...

    முட்டை:

    பயணத்தின்போது முட்டையை உடன் எடுத்துச் செல்லுங்கள். இதை உடையாமல் கொண்டு செல்வதற்கு பல்வேறு வசதிகள் கொண்ட பெட்டிகள் கிடைக்கின்றன. தற்போது முட்டையை வேக வைப்பதற்காக பல எளிய எலக்ட்ரிக் உபகரணங்கள் வந்துள்ளன. இவை மின்சாரம் மற்றும் பேட்டரியின் மூலம் இயங்கக்கூடியவை. வேகவைத்த முட்டை வயிற்றை நிரப்புவதோடு உடலுக்குத் தேவையான சத்துக்களையும், ஆற்றலையும் கொடுக்கும்.

    சாண்ட்விச்:

    பயணம் செல்லும்போது ரொட்டி மற்றும் சில வகை காய்கறிகளைக் கொண்டு சென்றால் எளிதாக சாண்ட் விச் தயாரித்து சாப்பிடலாம். இது பசியை போக்கு வதோடு உங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களையும், புத்துணர்வையும் அளிக்கும்.

    காய்கறி சாலட்:

    பச்சையாக சாப்பிடக்கூடிய முளைவிட்ட பயறு வகைகள், கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் போன்ற காய்கறிகளைக் கொண்டு சாலட் தயாரித்து சாப்பிடலாம். இது பயணத்துக்கு ஏற்ற சிறந்த சிற்றுண்டியாக அமையும். இதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உடல் களைப்படையாமல் பாதுகாக்கும்.

    விதைகள் மற்றும் உலர் பழங்கள்:

    பாதாம், முந்திரி, சூரியகாந்தி விதை, ஆளி விதை, பூசணி விதை, தர்பூசணி விதை, சியா விதை, உலர் திராட்சை, பேரீட்சை, உலர்ந்த அத்திப்பழம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்த கலவையை காற்றுப்புகாத பாட்டில்களில் போட்டு உடன் எடுத்துச் செல்லுங்கள். ஆற்றல் நிறைந்த இவை பசியை தணிப்பதோடு. உடலுக்குத் தேவையான புரதம், நல்ல கொழுப்பு, இரும்புச்சத்து, ஆன்டி-ஆக்சிடென்டுகள் ஆகிய சத்துக்களையும் அளிக்கக்கூடியவை

    எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?

    பயணத்தின்போது பலரும் காபி. டீ மட்டுமே குடித்து நாட்களை கழிப்பார்கள். இது மிகவும் தவறானதாகும். வெளியிடங்களுக்கு பயணிக்கும் போது அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உணவின் தரம், சுகாதாரம் சரியாக இல்லை என்றால் இவ்வகை உணவுகள் உடல் ஆரோக்கியத்த, பாதிக்கக்கூடும்.

    வெளி இடங்களில் சாப்பிடும்போது முடிந்தவரை எண்ணெய்யில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகள், அதிக காரம் மற்றும் மசாலா சேர்த்த உணவுகள். கொதிக்க வைக்காத உணவுகள், சமைக்காத பச்சை உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    • நாம் யார் என்பது நம் உடல் மொழியிலேயே தெரிந்து விடும்.
    • மனிதனுக்கும் அவனுடைய உடல்மொழி என்பது தனித்துவமானது.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது போலத்தான் நாம் யார் என்பது நம் உடல் மொழியிலேயே தெரிந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல்மொழி என்பது தனித்துவமானது. ஒருவருடைய உடல்மொழியே அவரின் மனநிலையை எளிதாக வெளிப்படுத்தும். நீங்கள் தனி ஒருவனா, ஆயிரத்தில் ஒருவனா? நீங்கள் யார் என்பதை உங்கள் உடல்மொழியே சொல்லிவிடும்...!

    1. பேசிக்கொண்டிருக்கும் பொழுது உதட்டை குவிப்பது, தாடையை சொறிவது, அடுத்து என்ன என்பது போல அவசரப்படுத்துவது போன்றவை உங்களுக்கு இதில் ஆர்வமில்லை என்பதை காட்டிக் கொடுத்து உங்கள் நண்பரை சலிப்படையச் செய்யும்.

    2. நீங்கள் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை நேரடியாக கண் பார்த்து பேசுவதன் மூலமே சொல்லி விட முடியும். மனிதனின் 70 சதவிகித தகவல் பரிமாற்றங்கள் உங்கள் சின்னச் சின்ன உடல்மொழிகளாலேயே பிறருக்கு கடத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    3. இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிற்பது உங்கள் பொறுமையின்மையையும் உங்களுக்கு அந்த உரையாடலில் உள்ள ஆர்வமின்மையையும் வெளிக்கட்டுவதாக அமைந்துவிடும்.

    4. நீங்கள் நின்று கொண்டிருக்கும் தோரணையும் உங்கள் உடல்மொழியை அழகாய் கடத்தும். நின்று கொண்டு பேசும்பொழுது பாதங்களின் திசையும் கூட நீங்கள் கிளம்ப தயாராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.

    5. போலியாக புன்னகை செய்வதை தவிருங்கள். எதேச்சையாக கடந்து செல்கையில் வேறொரு மன நிலையில் இருந்துகொண்டு பிறரை பார்த்து புன்னகை செய்யும் பொழுது அது இயல்பானதாக இருக்காது.

    6. நாம் எப்படி நம் கருத்தை எதிரில் இருப்பவர் காது கொடுத்து கவனிக்க வேண்டும் என நினைக்கிறோமோ அது போலத் தான் பிறருக்கும் தோன்றும். உரையாடலின் போது பார்வையை வேறு பக்கம் செலுத்துவது, காதுக்குள் விரலை விட்டு எடுத்து அழுக்கு இருக்கிறதா? என பார்ப்பது போன்றவை எல்லாம், நம் மீதான நம்பிக்கையை சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும். பிறருடனான உரையாடலில் கண் பார்த்து பேசி பழகுங்கள். அதன் பிறகு உங்கள் மீதான நம்பிக்கை பிறருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதை உணர்வீர்கள்.

    பிறருடைய உடல் அசைவுகளை பொறுத்தே நம்மை வெளிக்காட்டுவோம். தனி ஒருவனாக இருப்பதற்கும், ஆயிரத்தில் ஒருவனாக கடந்து போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது அல்லவா? மேலும் இதையெல்லாம் ஒரே நாளில் கடைபிடித்துவிட முடியாது தான். ஆனால் நம் உடலை, நாம் சொல்வதைத்தானே கேட்க வைக்க வேண்டும்.

    ×