search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மங்கையர் விரும்பும் மகேஸ்வரி சேலைகள்...
    X
    மங்கையர் விரும்பும் மகேஸ்வரி சேலைகள்...

    மங்கையர் விரும்பும் மகேஸ்வரி சேலைகள்...

    முதலில் மகேஸ்வரி சேலைகள் இயற்கை சாயங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மரூன், சிவப்பு, பச்சை, ஊதா மற்றும் கருப்பு வண்ணங்களிலேயே நெய்யப்பட்டன.
    மங்கையர் சேலைகள் தென்னிந்தியர்கள் அதிகம் கேள்விப்படாத ஒன்று. ஆனால், வட இந்தியர்களுக்கு பழக்கப்பட்ட, பிரபலமான சேலைகள் இவை என்று சொல்லலாம்.

    பெயர்க்காரணம்

    மத்திய பிரதேச மாநிலத்தின் கர்கோன் மாவட்டத்தில் நர்மதை நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான நகரம் மகேஸ்வர் ஆகும். ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே இங்கு கைத்தறி நெசவு என்பது பிரதானத் தொழிலாக இருந்து வருகின்றது. இங்கு நெய்யப்படும் ஒன்பது கெஜ சேலைகளாலேயே இந்த ஊரும் புகழ் பெற்றது என்று சொல்லலாம். இந்த ஊரின் பெயரே இந்தச் சேலைகளுக்கும் அந்த ஊரை ஆண்ட அரச குடும்பத்தினரால் சூட்டப்பட்டது.

    வரலாறு

    அரண்மனைக்கு வருகை தந்த அவரது உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்குப் பரிசளிக்கக்கூடிய பிரத்தியேகமான ஒன்பது கெஜம் சேலைகளை வடிவமைக்க சூரத் மற்றும் மால்வாவிலிருந்து சிறப்பு கைவினைஞர்களை ராணி அஹில்யா பாய் ஹோல்கர் நியமித்ததாக வரலாறு கூறுகிறது. எனவே, இச்சேலைகள் அரச மற்றும் பிரபுக்களின் வட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதைத் தொடர்ந்து மகஸ்வேரி சேலைகளின் உற்பத்தி உச்சத்தைத் தொட்டது. இந்த அழகான புடவைகள் எல்லா வயதினரிடமும் பிரபலமடையத் தொடங்கின.

    இன்று இந்த அழகான ஜவுனியானது தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் சிறந்த விற்பனையில் ஒன்றாக உள்ளது.

    நெசவு செயல்முறை

    இங்கு இரண்டு வகையான கைத்தறிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று - பழைய பிட் லூம்ஸ் கனமான மற்றும் நிலையானதாக இருக்கும். இரண்டு - புதிய பிரேம் லூம்ஸ் இலகுரக உலோக பிரேம்களால் ஆனவை. இரண்டாவது வகையே பிரபலமான ஒன்றாக உள்ளது. சாயமிட்ட நூல்கள் நெசவாளர்களால் மூட்டைகளாகப் பெறப்பட்டு வெப்ட் மற்றும் வார்ப் நூல் சிக்கல்களிலிருந்து இறுக்கமாக்குவதற்கு நீட்டப்பட்டு பின்பு சர்காவைப் பயன்படுத்தி சிறிய சுருள்களாக மாற்றப்படுகின்றன.

    பின்பு பல செயல்முறைக்குப்பின் இயற்கையாகப் பெறப்பட்ட வண்ணங்களால் துணிக்கு சாயம் போடப்பட்டு இந்தச் சேலையின் செழுமையை அதிகரிக்க ஜரி மற்றும் கினாரி பயன்படுத்தப்படுகின்றன. சேலைகளில் மட்டுமல்லாமல் மகேஸ்வரி துணிகள் குர்தாஸ், ஷர்ட்ஸ், ஸ்டோல்ஸ், துப்பட்டா இன்னும் பல வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவை அணிவதற்கு இலகுவாகவும், காற்றோட்டமாகவும் இருப்பதால் இந்திய வானிலைக்கு ஏற்றதாக உள்ளன.

    சிறப்பு அம்சங்கள்

    * நேர்த்தியானவை, க்ளாசி பினிஷ் மற்றும் லைட் வெயிட்டானவை.

    * பட்டு காட்டன், சில்க் காட்டன் மற்றும் கம்பளியிலும் மகேஸ்வரித் துணிகள் மற்றும் சேலைகள் கிடைக்கின்றன.

    * பளபளப்பானவை, காற்றோட்டமானவை, மென்மையானவை.

    * ஆண்டு முழுவதும் அணிந்து கொள்ள ஏற்றவை.

    * சிறப்பான அம்சமாக முந்தியைக் கூறலாம். மஜந்தா, பின்க், பச்சை, வயலட் மற்றும் மரூன் போன்ற பிரகாசமான வண்ணங்களில் செய்யப்படுகின்றது.

    * முந்தியில் ஐந்து கோடுகளில் இரண்டு வெள்ளைக் கோடுகளும் மூன்று வண்ணக் கோடுகளும் மாறி மாறி இடம் பெறும்.

    * இந்தச் சேலையின் மற்றொரு சிறப்பம்சம் இரண்டு புறமும் அணிந்து கொள்ளக்கூடிய ரிவர்சிபள் பார்டர்கள்

    வண்ணங்கள்

    முதலில் மகேஸ்வரி சேலைகள் இயற்கை சாயங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மரூன், சிவப்பு, பச்சை, ஊதா மற்றும் கருப்பு வண்ணங்களிலேயே நெய்யப்பட்டன. ஆனால், இப்பொழுது பூக்கள், வேர்கள் மற்றும் இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணங்கள் அல்லாமல் ரசாயன வண்ணங்களையும் பயன்படுத்துகிறார்கள். இன்று பிரபல வண்ணங்களான நீலம், மெவ், இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு போன்ற தங்கம் அல்லது வெள்ளி நூல்கள் கலந்து உருவாக்குகிறார்கள். உடல், பார்டர் மற்றும் பல்லு ஆகியவற்றில் நேர்த்தியான உருவங்களை நெசவு செய்ய மகேஸ்வரி புடவைகளில் தங்க நூல் அல்லது ஜரிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

    மகேஸ்வரி புடவைகள் அவற்றின் துடிப்பான வண்ணங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புகளான கோடுகள், கட்டங்கள் மற்றும் பூக்களால் ஆன பார்டர்களால் வேறுபடுகின்றன. இதன் பிரபலமான வடிவமைப்பாக மேட் பேட்டர்ன், சட்டாய் மற்றும் சாமேலி காபூல் பேட்டர்ன்களைச் சொல்லலாம். இவை மட்டுமல்லாமல் செங்கல் மற்றும் வைர பேட்டர்ன்களும் காலத்தைத் தாண்டி இன்றளவும் இந்தச் சேலைகளில் வலுவாக இடம் பெறுகின்றன.

    வகைகள்

    சந்திரகலா, பைங்கனி, சந்திர தாரா, பெலி மற்றும் பர்பி ஆகிய இவை ஐந்தும் அழகான நெசவின் பிரபலமான வடிவங்களாக உள்ளன. சந்திரகலா மற்றும் பைங்கனி நெசவானது பிளெயின் புடவைகளிலும் சந்திரதாரா, பெலி மற்றும் பர்பி நெசவானது கோடுகள் மற்றும் கட்டங்களால் ஆன புடவைகளாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

    டெல்லி மற்றும் மும்பையில் இந்தச் சேலைகள் விற்பனையில் சாதிக்கின்றன. பிரான்ஸ், யுகே மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு இச்சேலைகள் தொடர்ச்சியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்தச் சேலைகளின் உற்பத்தியும் அதை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

    இந்தச் சேலைகளை முதல் முறை துவைக்கும் பொழுது மென்மையான சோப்பினால் துவைக்க வேண்டும். அதுவும் இரண்டு மூன்று முறை வெறும் நீரில் துவைத்த பின் மென்மையான சோப்பை உபயோகித்துத் துவைப்பது நல்லது. அதேபோல் குறைந்த மற்றும் மிதமான வெப்பத்தில் இஸ்திரி செய்ய வேண்டும்.

    Next Story
    ×