search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற தூங்கும் நேரம் எது?
    X
    இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற தூங்கும் நேரம் எது?

    இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற தூங்கும் நேரம் எது?

    போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால் இதய நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.
    தினமும் இரவில் 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால் இதய நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.

    டைப் - 2 நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்சினைகளும் தூக்கமின்மை காரணமாக ஏற்படக்கூடும். இவை இரண்டும்தான் இதய நோய்களுக்கான ஆபத்து காரணிகளாகவும் அமைந்திருக்கின்றன. அதனால் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது.

    இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற தூங்கும் நேரம் எது? என்ற கேள்விக்கு இரவு 10 மணி முதல் 10.59 மணிக்குள் தூங்குவது இதயத்திற்கு சிறந்தது என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த நேரத்தை ‘கோல்டன் ஹவர்ஸ்’ என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது தொடர்பான ஆய்வுக்கு 43 முதல் 79 வயதுக்குட்பட்ட 88 ஆயிரம் பேர் உட்படுத்தப்பட்டனர்.

    அவர்களின் தூங்கும் நேரம், விழித்திருக்கும் நேரம் பற்றிய விவரங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. மேலும் அவர்களின் உடல் நலம், வாழ்க்கை முறை போன்ற விஷயங்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. மேலும் ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மாரடைப்பு, இதய செயலிழப்பு உள்ளிட்ட இதய நோய் சார்ந்த பிரச்சினைகள் இருக்கிறதா? என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தார்கள்.

    ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 3 சதவீதம் பேருக்கு இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. நள்ளிரவிலோ, அதற்கு பிறகோ தூங்குபவர்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகு வதும் கண்டறியப்பட்டது.

    நள்ளிரவில் அல்லது அதற்கு பிறகு தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 25 சதவீதம் அதிகம்.

    அதேபோல், இரவு 10 மணிக்கு முன்பாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 24 சதவீதம் அதிகம்.

    இரவு 11 மணி முதல் 11.59 மணிக்குள் தூங்குபவர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 12 சதவீதம் அதிகம் இருக்கிறது. எனவே, இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த படுக்கை நேரம் இரவு 10 மணி முதல் 10.59 மணி வரைக்கு உட்பட்ட காலகட்டம்தான் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள்.

    அதற்கு சர்க்காடியன் ரிதம் என்று அழைக்கப்படும் உடலின் உள் கடிகாரம் காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    24 மணி நேர சுழற்சிதான் தூக்கம் முதல் செரிமானம் வரையான அனைத்தையும் ஒழுங்குபடுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×