search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் கண் விழித்திரையை பாதிக்கும்
    X
    கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் கண் விழித்திரையை பாதிக்கும்

    கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் கண் விழித்திரையை பாதிக்கும்

    நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படாத அளவு இருக்கும் நோயாளிகளுக்கு கண்களில் விழித்திரை பாதிக்கும் (டயாபெட்டிக் ரெட்டினோபதி) அபாயம் இருக்கிறது என்று கண் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
    விஜயா கண் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அளவுக்கு அதிகமான அளவில் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படாமல் பல ஆண்டுகள் இருந்தால் கண்களுக்கு உள்ளே உள்ள விழித்திரையில் பாதிப்பு ஏற்படலாம். விழித்திரையில் உள்ள ரத்த நாளங்கள் கட்டுப்பாடு இல்லாத நீரிழிவு நோயினால் பாதிப்படையும்.

    ஆரம்ப நிலையில் எந்தவித அறிகுறியும் தெரியாது. எனவே ஆரம்ப நிலையில் கண் பரிசோதனை செய்தால் மட்டுமே அறிய முடியும். அடுத்தக்கட்டத்துக்கு செல்லும்போது கொஞ்சம், கொஞ்சமாக பார்வை குறைபாடு அதிகரிக்கும். எனவே 6 மாதங்களுக்கு ஒருமுறை நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் பரிசோதனை செய்வது அவசியம் ஆகும்.

    இந்த விழித்திரை பாதிப்பு உள்ளவர்களில் சிலருக்கு ‘ஸ்கேன்’ செய்யும் அவசியம் ஏற்படலாம். அதன் தீவிரத்தை பொறுத்து லேசர் சிகிச்சை, கண்களில் ஊசி மருந்து, அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள் தேவைப்படலாம். ஓரளவுக்கு ஆரம்ப நிலையில் இருந்தால் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முழுமையாக பாதிக்கப்பட்டால் குணப்படுத்தி இழந்த பார்வையை மீட்க முடியாது.

    ஆரம்பத்திலேயே இந்த விழித்திரை பாதிப்பு என்று சொல்லப்படும் ‘டயாபெட்டிக் ரெட்டினோபதி’க்கு சிகிச்சை அளிக்கப்படாமல் தீவிரம் அடைந்துவிட்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

    எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவ்வப்போது கண் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். சிகிச்சை முறையில் நல்ல குணமடைய வேண்டும் என்றால் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் முக்கிய செய்தி ஆகும்.

    அவ்வாறு தொடக்க நிலையிலேயே பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் சரி செய்துவிடலாம். இறுதி நாட்கள் வரை கண்பார்வை இருக்க வேண்டும் என்றால் கண் விழித்திரை பாதிக்கப்படாமல் இருந்தால் போதும். அதற்கு முக்கிய முன்னெச்சரிக்கை கண் பரிசோதனை செய்து கொள்வதுதான்.

    இவ்வாறு டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறினார்.
    Next Story
    ×