search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மூச்சுத் திணறலை குறைக்க உதவும் உணவுகள்
    X
    மூச்சுத் திணறலை குறைக்க உதவும் உணவுகள்

    மூச்சுத் திணறலை குறைக்க உதவும் உணவுகள்

    உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளை குறைக்கவும் சில உணவுகள் உதவுகின்றன. அவற்றின் தொகுப்பு இது.
    கொரோனா வைரஸ் தொற்று ஒமிக்ரான் என்ற மாறுபாடுடன் மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த சமயத்தில் நுரையீரலை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்தியாக வேண்டும். சுவாசத்தை பராமரிப்பதில் நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. அது பாதிப்புக்குள்ளானால் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் வரலாம். ஏனெனில் கொரோனா அறிகுறிகளில் அபாயகரமானது மூச்சுத்திணறலாகும். உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளை குறைக்கவும் சில உணவுகள் உதவுகின்றன. அவற்றின் தொகுப்பு இது.

    1. ஆப்பிள்:

    தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியமிருக்காது என்பார்கள். ஆப்பிளில் நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவை மூச்சுத்திணறலை தடுக்கக்கூடிய ஆற்றலையும் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆப்பிளில் வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளன. ஆன்டிஆக்சிடென்டுகளும் நிரம்பியுள்ளன. அவை நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ரத்தத்தை ஒழுங்குபடுத்தவும் செய்கின்றன.

    2. வால்நட்ஸ்:

    இவை நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. நுரையீரல் கோளாறுகள் மற்றும் சுவாசக் கோளாறுகளை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதில் அதிக அளவில் உள்ளன. மேலும் நுரையீரலில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டவை. மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறு போன்ற பிரச் சினைகளை குறைக்கும் தன்மையும் கொண்டது, வால்நட்ஸ்.

    3. பெர்ரி:

    பெர்ரிகளில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக அகாய் பெர்ரி, புளுபெர்ரி போன்றவை மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக்கோளாறுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியவை. நுரையீரலை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நுரையீரல் வலிமையை அதிகரிக்கவும் உதவுபவை.

    பெர்ரிகளில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. அவை ப்ரீ ரேடிக்கல்களை சேதப்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியவை. நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை அதிகரிக்க செய்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கக்கூடியவை.

    4. ப்ரோக்கோலி:

    இதனை பலர் விரும்பாமல் இருக்கலாம். ஆனால் இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை சிறந்த சுவாச திறனைப் பெற உதவி செய்யும். நுரையீரல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவும். வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள், போலேட், பைட்டோ கெமிக்கல்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் ப்ரோக்கோலியில் உள்ளடங்கியுள்ளன.

    இவை அனைத்தும் நுரையீரலில் உள்ள சேதமடைந்த திசுக்களை மீட்டெடுக்க உதவுகின்றன. மேலும் ப்ரோக்கோலியில் எல்-சல்போராபேன் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மரபணுக்களை கொண்டவை. இந்த மரபணுக்கள் சுவாச பிரச்சினைகளை தவிர்க்கும். மூச்சுத் திணறலையும் போக்க துணைபுரியும்.

    5. காய்ந்த மிளகாய்:

    கெய்ன் பெப்பர் எனப்படும் இதில் கேப்சைசின் உள்ளது. இது சுவாசத்தை மேம்படுத்த உதவுகிறது. மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளைக் குறைத்து நுரையீரலின் வலிமையை மேம்படுத்தக்கூடியது. ஆக்சிஜன் தடையின்றி செல்வதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியது. பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளடங்கி இருக்கும் கெய்ன் பெப்பர் டீயை சாப்பிடுவது சிறந்தது. இது ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த கொரோனா காலகட்டத்தில் இதனை அவசியம் பயன்படுத்த வேண்டும்.

    6. இஞ்சி:

    அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இது, பல்வேறு உணவு பொருட்களில் சேர்க்கப்படுகிறது. சுவாச செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க இஞ்சி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. அவை நுரையீரலில் மாசுக்கள் பரவுவதைத் தடுக்கின்றன.

    நச்சுத்தன்மையை அகற்றவும், நுரையீரலுக்கு செல்ல உதவும் காற்று துளைகளை திறக்கவும் உதவுகின்றன. மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளை போக்குகின்றன. இஞ்சி டீ பருகலாம். இஞ்சியை சாலட்களில் சேர்த்தும் சாப்பிடலாம். சமைக்கும் உணவு பொருட்களில் தவறாமல் இஞ்சியை பயன் படுத்தி வரலாம்.

    7. ஆளி விதைகள்:

    இவை நுரையீரலுக்கு ஆரோக்கியம் சேர்ப்பவை. நுரையீரல் திசுக்களை பாதுகாக்கக் கூடியவை. மூச்சுத் திணறலை போக்கவும் ஆளி விதைகளை உபயோகிக்கலாம். ஆளிவிதைகள் உள்ளடங்கிய உணவு நுரையீரல் பிரச்சினைகளை கணிசமாக குறைக்கும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    8. தண்ணீர்:

    நம் உடலில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் பருகுவது மூச்சு திணறலுடன் தொடர்புடையது. ஏனெனில் நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் தண்ணீருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. நுரையீரல் உலர்வடைந்தால் வீக்கம் உண்டாகும். எனவே தினமும் குறைந்தது 6-8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. மூச்சுத் திணறல் ஏற்படுவதையும் தடுக்கிறது.

    9. மஞ்சள்:

    மஞ்சளில் உள்ள குர்குமின் சேர்மங்கள், கொரோனா வைரசால் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை போக்க உதவுகின்றன. நுரையீரலுக்கு செல்லும் காற்றுப் பாதையை மேம்படுத்துவதோடு, மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம் உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளை போக்குகின்றன. மஞ்சளை உணவில் பல வழிகளில் சேர்க்கலாம். இருப்பினும் மஞ்சள் கலந்த பால் பருகுவது சிறந்தது.

    10. பூண்டு:

    இதில் உள்ள பிளவனாய்டுகள் குளுதாதயோன் உற்பத்திக்கு காரணமாகின்றன. இது நுரையீரலை பாதிக்கக்கூடிய நச்சுகளை அகற்ற உதவும். புற்றுநோயையும் தடுக்கும். தினசரி உணவில் பூண்டு சேர்த்தால் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தலாம். இதனால் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளையும் குறைக்கலாம்.
    Next Story
    ×