search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அஜீரணம் குறித்து ஆயுர்வேதம் கூறுவது
    X
    அஜீரணம் குறித்து ஆயுர்வேதம் கூறுவது

    அஜீரணம் குறித்து ஆயுர்வேதம் கூறுவது...?

    ஜீரணம் சீராக நடைபெற கனமான பொருட்களை அரை வயிறு அளவுக்கும், இலகுவான பொருட்களை சற்று அதிகமாகவும் சாப்பிடலாம் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.
    ஜீரணம் சீராக நடைபெற கனமான பொருட்களை அரை வயிறு அளவுக்கும், இலகுவான பொருட்களை சற்று அதிகமாகவும் சாப்பிடலாம் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அளவுக்கு மீறிய உணவு எல்லா தோ‌‌ஷங்களையும் பிரச்சினைக்கு உள்ளாக்குகிறது. இதனால் பல விதமான வயிற்று நோய்கள் உருவாகின்றன. அஜீரண நோய் உள்ளவர்கள், கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டால் மருந்து சாப்பிடாமல் பட்டினி இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது.

    அஜீரணத்தால் மலம், சிறுநீர் கழிப்பதில் தடை, குடல் வாட்டம், அபான வாயு தடை, வயிற்றுப் பொருமல் போன்றவை ஏற்படலாம். கோபம், மனத்துயரம் போன்றவற்றாலும் செரிக்கும் தன்மை பாதிக்கப்படுகிறது. பத்தியமான உணவுடன் அபத்தியமான உணவைச் சேர்த்துச் சாப்பிடுவது சமாசனம் என்றும், உணவைச் சாப்பிட்ட உடன் மறுபடியும் சாப்பிடுவது அத்யசனம் என்றும், அகாலத்தில் அதிக அளவு அல்லது குறைந்த அளவு சாப்பிடுவது வி‌‌ஷமாசனம் என்றும் இந்த மூன்று வகைகளும் கொடியவை என்றும், நோயை உருவாக்கக்கூடியவை என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.

    சம்பா அரிசி, கோதுமை, ரவை, அறுபதாம் குருவை, ஆட்டு இறைச்சி, அரைக் கீரை, இளம் முள்ளங்கி, நெல்லிக்காய், திராட்சை, புடலங்காய், வெல்லம், சிறுபயறு, சுத்தமான நீர், பால், நெய், மாதுளம்பழம், இந்துப்பு போன்றவற்றைச் சாப்பிடலாம். வாழைப்பழம், பலாப்பழம், மோதகம் போன்றவற்றை முதலில் சாப்பிட வேண்டும். புளிப்பானவற்றை நடுவில் சாப்பிட வேண்டும். கசப்பாக உள்ளவற்றைக் கடைசியில் சாப்பிட வேண்டும். இரைப்பையின் பாதி அளவு திட உணவும், கால் பாகம் திரவ உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும். எஞ்சிய கால் பாகத்தை வாயுவுக்கும், அதன் அசைவுக்கும் விட்டுவிட வேண்டும்.

    ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்பதும், அது உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதும், எல்லா கலாசாரத்திலும், எல்லா நாட்டிலும் பொதுவாகக் காணப்படும் கொள்கை. உணவானது மனதுக்கு நிறைவையும், சக்தியையும், ஆரோக்கியத்தையும் தரும்படி இருக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக 2000 கலோரி அளவு தேவைப்படுகிறது. கலோரி என்பது உடலுக்குத் தேவையான சக்தி தான். இதைப் பெறுவதற்கு பல விதமான உணவு வகைகளை, தானியங்களை, பழங்களைக் கலந்து சாப்பிட வேண்டும்.

    ஓட்டல்களில் அதிகமாகச் சாப்பிடக் கூடாது. பழங்களையும், பருப்பு வகைகளையும், நார்ச்சத்துள்ள உணவு வகைகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு உப்பை குறைத்துச் சாப்பிட வேண்டும். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2.5 கிராம் முதல் 3 கிராம் உப்பு போதுமானது. உணவை சாப்பிட்டால் மட்டும் போதாது, உடம்புக்கு அசைவு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது மனப் பரபரப்பைத் தவிர்க்க வேண்டும். சிறிய அளவு உணவை, பல தடவைகளாகச் சாப்பிடுவது இப்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது.

    Next Story
    ×