என் மலர்

  ஆரோக்கியம்

  சிறுநீரக பிரச்சனை
  X
  சிறுநீரக பிரச்சனை

  சிறுநீரக நோயை தவிர்ப்போம்...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறுநீரக பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளையும், உணவு முறைகளையும் கடைப்பிடித்தால் சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.
  இன்று (மார்ச்12-ந்தேதி) உலக சிறுநீரக தினம்.

  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினத்தை, உலக சுகாதார நிறுவனமும், உலக சிறுநீரக கழகமும் நடத்தி வருகிறது. சிறுநீரகத்தைப்பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் குறிக்கோளாக சீறுநீரக நலம் எல்லோருக்கும், எல்லா இடங்களிலும் சிறுநீரக கோளாறை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து தவிர்க்க வேண்டும் என்று அறிவித்து உள்ளது. உலக அளவில் 850 மில்லியன் பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

  இந்தியாவில் 1.5 முதல் 2 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 10 சதவீதம் பேர் மட்டுமே, முறையாக சிகிச்சை பெறுகிறார்கள்.சிறுநீரக செயல் இழப்பு சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரன், ஆண், பெண் என்று பாகுபாடு இன்றி எல்லோரையும் பாதிக்கக்கூடியது. உலக அளவில் மக்கள் இறப்புக்கு காரணமாக 5-வது இடத்தில் இருப்பது சிறுநீரக செயல் இழப்பு ஆகும். நமது உடலில் வயிற்றுப்பகுதியில், விலா எலும்புக்கு கிழ் அவரைவிதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் பக்கத்திற்கு ஒன்றாக அமைந்து, இடைவிடாது வேலை செய்துகொண்டு இருக்கின்றன. நம் உடலிலுள்ள இரண்டு சிறுநீரகங்களும், ஒரு நிமிடத்திற்கு 1,200 மில்லி ரத்தத்தை சுத்தம் செய்துகொண்டு இருக்கிறது.

  ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டும் அதன் வேலையல்ல, ரத்தத்தில் உள்ள கழிவுகளையும், அதிக திரவத்தையும் வடிகட்டி சிறுநீராக வெளியேற்றுகின்றன. இதைத்தவிர ரத்தத்தின் அமிலத் தன்மையை சரிசெய்வது, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு தேவையான எரித்திரோபாயிடினை உற்பத்தி செய்வது, குடலில் இருந்து கால்சியத்தை கிரகிக்ககூடிய சக்தியுள்ள வைட்டமின் ‘டி’-யை உற்பத்தி செய்வது, ரத்தத்திலுள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களை சமநிலையில் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்து இருப்பது போன்ற பல்வேறு வேலைகளையும் செய்வது சிறுநீரகமே.

  அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக குழாய் நீண்டநாள் அடைப்பு போன்றவை சிறுநீரகத்தை பழுதடைய வைக்கின்றன. மேலும் தொடர்ந்து வலி மாத்திரைகளை உட்கொள்வது, தேவையில்லாமல் தாது கலந்த லேகியம் சாப்பிடுவது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்து விடுகின்றன. இதைத்தவிர குடும்பவழி மரபணுக்களினாலும், சிறுநீரக நோய் தொற்றுக்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.

  பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட அதிக உடல் எடை, சர்க்கரை நோய், அதிகநாள் ரத்தக்கொதிப்பு மற்றும் பிரசவகாலங்களில் ஏற்படும் நோய்கள் முக்கியமான காரணமாகும். சிஸ்டமிக் லூப்பஸ் என்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ‘ஆட்டோ இம்மூன்’ வியாதிக்கு முறையாக சிகிச்சைப் பெறாவிட்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும். பிரசவகாலங்களில் ரத்தக்கொதிப்பு அதிகமாகி, சிறுநீரில் புரோதம் வெளியாகி ‘எக்லாம்சியா’ என்ற நோயினாலும், குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

  சிறுவர்களின் சிறுநீரக செயல் இழப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது, சிறுநீரக மண்டலத்தில் உள்ள பிறவி குறைபாடுகள் ஆகும். குடும்பவழி மரபணுக்களினாலும், அடிக்கடி சிறுநீரக நோய் தொற்றுகளாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப் படுகின்றன. “நெப்ராடிக் சின்ட்ரோம்” என்ற சிறுநீரக தொகுப்பிணிக்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால் நாளடைவில் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.

  இதைத்தவிர குறைமாத குழந்தைகள், அதிக உடல் எடை உள்ள சிறுவர்களுக்கு நாளடைவில் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதாகவும், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இல்லாமல் காரணமே அறியாத சிறுநீரக நோயாளிகள் 16 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

  பூமியின் வெப்பசலனத்தில் வேலைசெய்யும் விவசாயி, தாகம் தணிக்க போதிய தண்ணீர் இல்லாததால் அசுத்த தாதுக்கள் நிறைந்த தண்ணீரை குடிக்கின்றனர். இதனாலும் விவசாயத்திற்கு அதிக ரசாயன உரங்களையும், பூச்சி கொல்லி மருந்துகளையும் தக்க பாதுகாப்பு இல்லாமல் உபயோகிப்பதாலும், தொடர்ந்து மது அருந்துவதினாலும் மற்றும் பல்வேறு காரணங்களாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

  அந்த காலத்தில் விவசாயிகள் வயலுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்தினர். பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரில் குளித்து உடல் அசுத்தத்தை போக்கி கொண்டனர். வயலுக்கு செல்லும்போது சிறிய கலயத்தில் கஞ்சி, கூழ், நீராகரம் போன்றவற்றை கொண்டுசென்று தாகமெடுக்கும் போது அவற்றை குடித்தனர். இதனால் உடலில் வறட்சி இல்லாமல் பார்த்து கொண்டார்கள். அதற்கேற்ற உடல் உழைப்பும் இருந்தது. இன்று எந்திரங்களை அதிகமாக பயன்படுத்தி பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதில் சிறுநீரக செயல் இழப்பும் ஒன்று. சிறுநீரக செயல் இழப்பின் அறிகுறியாக பசியின்மை, வாந்தி, கைகால் வீக்கம், ரத்தசோகை போன்றவை ஏற்படும். சிறுநீர் சரியாகப் பிரியாத நிலையில் மூச்சுத்திணறல் ஏற்படும்.

  சிறுநீரகம் பாதித்த பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரம் ஏற்படுவதால், உடலில் சுரக்கும் ஹார்மோன் குறைவதால் எலும்பு தேய்மானம், இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சிறுநீரக பாதிப்பை கண்டறிய சிறுநீரக பரிசோதனை, ரத்தத்தில் யூரியா, கிரியாடினின், சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், கியாடினின் கிலியரன்ஸ் போன்ற பரிசோதனைகள் செய்யவேண்டும்.

  வயிற்றுபகுதியை ஸ்கேன் செய்து, சிறுநீரகத்தின் நிலையை அறிய வேண்டும். சிறுநீரக பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளையும், உணவு முறைகளையும் கடைப்பிடித்தால் சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம். சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்யவேண்டும். மாற்று சிறுநீரகம் பொருத்தவேண்டும். இதற்கு உடன் பிறந்தவர்கள், தாய், தந்தை தானமாக கொடுக்கலாம்.

  அதே வகை ரத்தம் அல்லது ‘ஓ’ வகை ரத்தம் உள்ளவர்களின் சிறுநீரகம் பொருந்தும். இன்று மூளை சாவினால் பாதிக்கப்படுவர்களின் உறுப்புகள் தானமாக பெறப்படுகின்றன. மாற்று சிறுநீரகம் பொருத்திய பிறகும் தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிடவேண்டும். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் முறையாக சிகிச்சை பெறவேண்டும். சிறுநீரகத்திற்கான பரிசோதனையை செய்யவேண்டும். சிறுநீரில் புரோதம் செல்கிறதா என்று பார்க்கவேண்டும். ரத்தத்தில் யூரியா, கிரியாடினின், அல்ராசோனகிரம் போன்ற பரிசோதனைகள் செய்து சிறுநீரக செயல்பாட்டை அறிந்து அவை பாதிக்கப்பட்டு இருந்தால் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறவேண்டும்.

  சமச்சீரான ஆரோக்கியமான உணவை உண்டு, உடல் எடையை குறைத்து சிறுநீரகத்தை பாதுகாக்க வேண்டும். விவசாயிகள் ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். உரங்களை, தகுந்த பாதுகாப்புடன் முக கவசங்களை அணிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும். பூச்சி மருந்துகளை தெளித்தபிறகு உடலை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்யவேண்டும். வெயிலின் வெப்பத்திற்கு ஏற்றவாறு தண்ணீர், மோர், கஞ்சி போன்றவற்றை அருந்த வேண்டும். தண்ணீரை நன்றாக சூடுசெய்து, ஆற வைத்து குடிப்பது நல்லது. தரமற்ற ரசாயன பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது நல்லது அல்ல. குழந்தை பிறந்தபிறகு உரிய சிகிச்சை பெறவேண்டும். இதனால் சிறுநீரக பாதிப்பை தவிர்க்கலாம்.

  டாக்டர்.நா.மோகன்தாஸ்,

  சிறுநீரகதுறை நிபுணர்,

  முன்னாள் இந்திய மருத்துவ கழகத்தலைவர், தமிழ்நாடு கிளை.
  Next Story
  ×