search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயதானவர்கள் தவறி விழுவது ஏன்?
    X
    வயதானவர்கள் தவறி விழுவது ஏன்?

    வயதானவர்கள் தவறி விழுவது ஏன்?

    வயது ஆக ஆக கீழே விழும் சம்பவங்களும், அதனால் ஏற்படும் காயங்களும் அதிகரிக்கும். 65 வயதுக்கு மேலானவர்கள் இப்படி கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வதால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும்.
    கீழே விழுவது என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும், எந்த வயதிலும் ஏற்படுகிற சாதாரணமான ஒரு நிகழ்வு.

    வயது ஆக ஆக கீழே விழும் சம்பவங்களும், அதனால் ஏற்படும் காயங்களும் அதிகரிக்கும். 65 வயதுக்கு மேலானவர்கள் இப்படி கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வதால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும். கீழே விழுவதால் தலையில் அடிபடுவது, தோள்பட்டை மற்றும் கைகளில் முறிவு, முதுகெலும்பில் முறிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வயதானவர்கள் கீழே விழுவதில் சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு அதிகம் இருக்கும். அதையும் மீறி விழுந்தவர்களுக்கு பலமான காயங்கள் ஏற்படலாம். அதற்கான சிகிச்சைக்காக பல மாதங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டி வரலாம்.

    கீழே விழுந்து அடிபட்டுக் கொள்பவர்களில் 65 வயதை கடந்த முதியவர்களே அதிகம். தவறி கீழே விழுபவர்களின் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. அவர்களில் பெண்களே அதிகம். இடுப்பெலும்பு முறிவு ஏற்படும் நபர்கள் பெரும்பாலும் அதிலிருந்து முழுமையாக விடுபடுவது இல்லை. பலரும் அதற்கு பிறகு நடக்க முடியாமல் முடங்கிப் போகின்றனர். இன்னும் சிலருக்கு கைத்தடி அல்லது வாக்கர் உதவியின்றி நடமாடுவது சிரமமாகிறது. சில நேரங்களில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் ஒரு வருடத்துக்குள் உயிரிழக்கவும் நேரிடுகிறது.

    எனவே கீழே விழும் வாய்ப்பை அதிகரிப்பதில் முதுமைக்கு முக்கிய பங்கு உண்டு. பார்வைத் திறன் குறைவது, உடலில் சக்தியே இல்லாமல் இருப்பது போல் உணர்வது போன்றவை இயல்பு. இவை எல்லாமே விழுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பவை.

    உடல் இயக்கம் இல்லாமை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை போன்றவை உடலின் சமநிலையை பெரிய அளவில் பாதிக்கும். எலும்பு மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். புகை மற்றும் மது பழக்கங்கமும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிப்பவை. குறிப்பாக மதுப்பழக்கம் ஒருவரது நிலைத்தன்மையை பெரிதும் பாதித்து கீழே விழும் வாய்ப்புகளை பல மடங்கு அதிகரிக்கும்.

    வழுவழுப்பான தரை, ஈரமான தரை, வெளிச்சமற்ற வீடு, கால்களுக்கு சரியான பிடிமானத்தை தராத காலணிகள், நடமாடும் இடங்களில் இடறி விழும் அளவுக்கு பொருட்களை அடைத்து வைப்பதால் முதியவர்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே தவறி விழுகிறார்கள். மாடி படிகளில் ஏறி இறங்கும்போதும், சமையலறையில் வேலை பார்க்கும்போதும், குளியலறை மற்றும் கழிவறைகளிலும் இவர்கள் கீழே விழுவது அதிகமாக நடக்கிறது.

    Next Story
    ×