search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல் (Health)

    குழந்தைகளின் பாதுகாப்பு பெற்றோர் கையில்
    X

    குழந்தைகளின் பாதுகாப்பு பெற்றோர் கையில்

    குழந்தை வளருகையில் அதற்கேற்ற உணவு, உடை, மற்றும் இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை செவ்வனே பூர்த்தி செய்ய வேண்டும்.
    குழந்தை பிறந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், குழந்தையின் ஆரோக்கியத்தை அறிதல், அதற்கேற்றபடிக் குழந்தையைப் பராமரித்தல் ஆகியவற்றைப் பெற்றோர் அறிந்து பின்பற்ற வேண்டும்.

    குழந்தை வளருகையில் அதற்கேற்ற உணவு, உடை, மற்றும் இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை செவ்வனே பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தைக்கு நோய்கள் வராமல் தடுக்கத் தேவையான மருத்துவ உதவிகள் எவை? அவற்றை எப்பொழுது கிடுக்க வேண்டும் என்பன போன்ற விவரங்களைத் தெளிவாகத் தெரிந்து காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் அவற்றைப் பூர்த்திசெய்ய வேண்டும். குழந்தைக்கு வளர்ச்சிக்கேற்ற சத்தான சரிவிகித உணவு தருவது மிகவும் இன்றியமையாதது, அதிலும் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.

    குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிச் சிரிக்க வைப்பது, பேசச் சொல்லிக்கொடுப்பது போன்றவற்றில் மிக்க அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சமயங்களில் தந்தையும் தாயுடன் சேர்ந்துகொண்டு குழந்தையுடன் பொழுதை இனிமையாகக் கழிப்பதில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தை வளர வளர, பிறருடன் பயமின்றி நேயமாகப் பழக வாய்ப்பளிக்க வேண்டும். இந்த உலகத்தோடு ஒன்றி வாழப் பழக்க வேண்டும். குழந்தையின் மன வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்.

    * சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மறைத்து விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    * சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.

    * குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளாத வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.

    * குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.

    * கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

    * குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.

    * கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

    * ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது ஆணுடம்பின் தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)

    * தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள். குழந்தை உள்ளே விழ சாத்தியம் இருக்கிறது.

    * சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள்.

    * கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

    * பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.

    * வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.

    * மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

    * இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.

    * சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

    * சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.

    * கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.

    * தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்

    * ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.

    * கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.

    * குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.
    Next Story
    ×