
உடலுக்கு வேலை கொடுப்பது உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்காதீர்கள். ஓய்விலிருப்பதை விரும்பி அதிலேயே சுகம் காணாதீர்கள். உடலுக்கு எந்தளவுக்கு வேலைகள் கொடுக்கிறீர்களோ அந்தளவுக்கு மூட்டுகளும், எலும்புகளும், தசைகளும் ஆரோக்கியமாக இருக்கும். சுயபயிற்சிகள் தவிர்ப்பது யாருக்கோ பலனளித்த பயிற்சிகளை நீங்களாக செய்யத் தொடங்க வேண்டாம். அதேபோல நீங்கள் வழக்கமாகச் செய்கிற பயிற்சிகளின் வேகத்தையோ, எண்ணிக்கையையோ திடீரென அதிகரிக்க வேண்டாம்.
இளவயதிலிருந்தே மூட்டுகளையும் மூட்டுகளின் இணைப்புத் தசைகளையும் பலமாக்கும் பயிற்சிகளைச் செய்து வந்தால் பிற்காலத்தில் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.

ஸ்ட்ரெயிட் லெக் ரெயிஸ் (Straight Leg Raise)
தரைவிரிப்பின் மேல் சமதளமாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். ஒரு காலை லேசாக மடக்கி, உள்ளங்கால் தரையைத் தொடும்படி வைத்துக் கொள்ளவும். இன்னொரு காலை வளைக்காமல் நேராக நீட்டியபடி உங்களால் முடிந்த உயரத்துக்குத் தூக்கவும். ஒவ்வொரு காலுக்கும் இதே போல 10 முதல் 15 முறைகள் செய்யவும்.
ஹாம்ஸ்ட்ரிங் கர்ல் (Hamstring Curl)
தரைவிரிப்பின் மேல் குப்புறப்படுத்துக் கொள்ளவும். கால்களை மடக்கி உங்கள் குதிகால் பகுதியானது பிட்டப்பகுதியைத் தொடும்படி மடக்கவும். அதே நிலையில் சில நொடிகள் இருந்துவிட்டுப் பழைய நிலைக்குத் திரும்பவும். 15 முறை செய்யவும்.நின்ற நிலையிலும் இதைச் செய்யலாம். நாற்காலியின் பின்பக்கத்தைப் பிடித்தபடி நின்றுகொள்ளவும். ஒவ்வொரு காலாக உயர்த்தி குதிகால் பிட்டத்தைத் தொடும்படி உயர்த்தி பிறகு கீழே இறக்கவும். இன்னொரு காலுக்கும் செய்யவும்.
வால் ஸ்குவாட்ஸ்(Wall Squats)
சுவரில் சாய்ந்தபடி நேராக நிற்கவும். நாற்காலி இல்லாமலேயே நாற்காலியில் அமர்வது போலக் கற்பனை செய்துகொண்டு உட்காரும் நிலைக்கு வரவும். கைகள் சுவரைப் பிடித்துக்கொள்ளலாம் அல்லது கைகளைத் தொங்கவிட்டுக்கொள்ளலாம். உட்கார்ந்திருப்பது போன்ற நிலையில் 10 நொடிகள் இருக்கவும். பயிற்சியின் ஆரம்பத்தில் இது சிரமமாகத் தெரியலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் பயிற்சியின் நேரத்தை ஒவ்வொரு நொடியாக அதிகரித்தால் சிரமம் தெரியாது. இந்தப் பயிற்சிகளை தினமும் செய்துவந்தாலே மூட்டுகளும் தசைகளும் வலுவாகும்.