
உங்களுடைய பெற்றோர்களிடம் எப்படி பழகுகிறீர்களோ, அவர்களுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறீர்களோ அதேபோன்றே மனைவியின் உறவினர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்.
மனைவி வழி உறவுகளிடம் பழகுவதற்கு ஆரம்ப கட்ட முட்டுக்கட்டையாக இருக்கும் தயக்கத்தில் இருந்து மீள வேண்டும். அவர்களின் ரசனை உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகிறதா என்பதை அறிந்து அதற்கேற்ப பழக வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான விஷயங்கள் என்ன என்பதை அறிந்து அவை பற்றி பேச தொடங்கினாலே தயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். ஒருசில விஷயங்களை அவர்களுடன் இணைந்து செய்வதற்கு பழக வேண்டும். அது இரு தரப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க உதவும்.
மாமனாரிடம் பேசுவதற்கு தயங்குபவர்கள் சமீபத்திய நாட்டு நடப்புகள், குடும்ப நிலவரங்கள் பற்றி உரையாடலாம். அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உரையாடலின் போக்கு அமைந்திருக்க வேண்டும். அதிகம் பேசுவதை காட்டிலும் அவர் களின் பேச்சுகளை ஆழ்ந்து கவனிப்பது நன் மதிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

மனைவியின் குடும்பத்தாருடன் சக நண்பர்களை போல் பழக வேண்டும். அதுவே எளிதில் இணக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
மனைவியிடம் அவருடைய குடும்பத்தார் ஒவ்வொருவருடைய பழக்கவழக்கங்கள், அவர்களுக்கு பிடித்தது, பிடிக்காதது போன்ற அத்தனை விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ப பழக தொடங்குங்கள். இளம் வயதில் இருப்பவர் களிடம் உங்கள் குடும்பத்தினரை போலவே உரிமையுடன் பழகுங்கள். அவர்கள் செய்யும் தவறுகளை மென்மையான அணுகுமுறையுடன் சுட்டிக்காட்டுங்கள்.
வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால் மனைவியின் குடும்பத்தாரையும் உடன் அழையுங்கள். அது இரு குடும்பத்தினரிடையே நெருக்கமான உறவு ஏற்பட வழிகோலும்.
ஒவ்வொருவருடைய பிறந்தநாளையும் நினைவில் வைத்தோ அல்லது மனைவியிடம் கேட்டு தெரிந்து கொண்டோ வாழ்த்து தெரிவிக்கும் நடைமுறையை தொடருங்கள். அது அவர்கள் மத்தியில் உங்களுக்குரிய மதிப்பை உயர்த்தும். அன்பு பரிசுகள் வழங்கியும் அவர்கள் இதயத்தில் எளிதாக இடம் பிடித்துவிடலாம்.
மனைவி குடும்பத்தினருடன் கலகலப்பாக பேச வேண்டும் என்பதற்காக மனதில் தோன்றுவதையெல்லாம் வார்த்தைகளில் வெளிப்படுத்திவிடக் கூடாது. மனைவியை பற்றியோ, மற்ற குடும்ப உறுப்பினர்களை பற்றியோ குறை சொல்லக்கூடாது. ஒவ்வொருவரிடமும் பிடித்தமான குணாதிசயங்களை மட்டுமே நினைவில் வைத்திருக்க வேண்டும். எதிர்மறையான விஷயங்கள் குறித்து விவாதிக்கக்கூடாது. மாமியார்- மாமனாருடன் மகனை போல பழக முயற்சியுங்கள். அது அவர்களிடத்தில் உங்களுக்குரிய அந்தஸ்தை உயர்த்தும். மனைவி உங்கள் மீது காண்பிக்கும் நேசமும் அதிகரித்துவிடும்.