
நீங்கள் உணவு அருந்தும் பொழுது அதில் பாதி தட்டு அளவு காய்கறிகள் இருக்க வேண்டும். வறுத்து, பொரித்தவைகள் கூடாது. முளை கட்டிய, வேக வைத்த பச்சை காய்கறிகள், கீரைகள் என பல வண்ண காய்கறிகள் இருத்தல் வேண்டும். மீதி பாதியில் ஒருபாதி முழுதானிய உணவும், ஒரு பாதி அடர்த்தியில்லாத புரதங்களும் பருப்பு, கொட்டை, கொழுப்பு குறைந்த அசைவம் என இருத்தல் வேண்டும். அவர்களுக்கு இந்த பொது உணவு முறை விதிகள் பொருந்தாது.
* காலையில் ஒரு காபியோடு அல்லது 2 இட்லியோடு பரபரப்பாக ஓடுபவர்கள் ஏராளம். காலை உணவு என்பது அன்றைய நாளைய பெட்ரோல், அதில் முழுதானிய உணவாக ராகி (அ) ஓட்ஸ், ஒரு பழம், கொழுப்பு அதிகம் இல்லாத பால் (அ) தயிர் இருப்பது அவசியம். அதுவும் காலை 7&8 மணிக்குள் காலை உணவு எடுத்துக் கொள்வது நல்லது.
* பல பள்ளி செல்லும் இளம் பிரிவினரும் சரி, வேலைக்குச் செல்பவர்களும் சரி காலை முதல் மாலை வரை விரதம் போல் பட்டினி இருப்பார்கள். இது அவர்களின் பழக்கமாகி விட்டது. பின் மாலை முதல் இரவு வரை ஓயாது சாப்பிடுவார்கள். இது இருக்கும் கொஞ்சம் ஆரோக்கியத்தினையும் கெடுத்து விடுகின்றது. இந்த மாதிரியான சர்க்கஸ் வேலைகளை உங்கள் உடலுக்குக் காட்டாதீர்கள்.

* கடைக்குச் செல்லும் முன் தேவையானவைகளை ‘லிஸ்ட்’ எடுத்துச் செல்லுங்கள். இல்லையெனில் கண்ணில் கண்டவற்றை வாங்கி உடலையும், பணத்தையும் வீணாக்குகின்றீர்கள். இதனை நீங்கள் கடை பிடித்துப் பார்த்தாலே இத்தனை நாள் செய்த தவறுகள் புரியும்.
* உப்பு, சர்க்கரை இரண்டும் கண்டிப்பாக இந்திய வகை உணவில் கட்டுப்படுத்தப்பட வேண்டியவை.
* ‘ஏதோ சாப்பிடுகிறேன்’ என்று சலித்துக் கொண்டே சாப்பிடாதீர்கள். உணவு அருந்தும் பொழுது அவசரம், கோபம், எரிச்சல் இவை கூடாது. மகிழ்ச்சியோடு உணவினை உட்கொண்டாலே ஆரோக்கியம் கூடும்.